Saturday, May 24, 2014

ஐயனின் மாதோட்டம்

எல்லாவற்றுக்கும் நேரகாலம் வரவேண்டும் என்பார்கள். உண்மைதான் போலும்.கடந்தவருடம் கூட தமிழ் நாட்டின் பலகோயில்களைத்தரிசிக்கும் பாக்கியம் கிட்டியிருந்தது.ஆனால் பக்கத்தில் இருக்கும் திருக்கேதீச்சரம் ஆலயத்துக்குச்செல்லும் வாய்ப்பு கடந்த கிழமை தான் கைகூடியிருந்தது. அதேபோல் இந்தியப்பயணம் குறித்த விரிவான பயணக்கட்டுரை எழுதவும் இன்னும் நேரகாலம் வரவில்லை என்று நினைக்கிறேன்.  :P :)

நாங்கள் சென்றது திருவிழா,விசேடம் எதுவுமற்ற சாதாரணமான நாளிலாக இருந்தாலும் கூட வெள்ளிக்கிழமை என்பதால் ஒரு சிறிய சிறப்பு வழிபாடு இருந்தது என்று நினைக்கிறேன்.

பாடசாலைப்பிள்ளைகள் பெருந்திரளாக வந்து பூசையை தரிசித்தபின்னர் சிவபுராணமும் திருக்கேதீச்சர திருப்பதிகமும் பாடினார்கள். பண்ணோடு பக்திமயமாக அவர்கள் பாடும்போது அந்நியன் படக்காட்சிதான் மனதில் தோன்றியது. 



"சங்கீத உபாசகர்லாம் ஒன்னா சேர்ந்து தியாகராஜ கீர்த்தனைகள் பாடுறச்சே மனசெல்லாம் கரைஞ்சு பெருமாளயே நேரில பாத்தமாதிரி ஆயிடும்" 

அதே உணர்வு தான் என் மனதிலும் தோன்றியது. பாடிமுடிக்கும்வரை அங்கேயே இருந்துவிட்டுத்தான் எழுந்துவந்தேன்.:)

கூடவே பள்ளிக்கூடகால ஞாபகமும் வந்துபோனது. தினமும் திருமுறை ஓதினாலும் வெள்ளிக்கிழமைகளில் விசேடமாக சிவபுராணமும் படிப்பது வழக்கம். திருக்கேதீச்சரம் திருஞானசம்பந்தராலும் சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடப்பெற்ற தலம் எனும் சிறப்பைக்கொண்டது. சிறு வயதில் சமயபாடத்திலும் சங்கீதபாடத்திலும் படித்த "நத்தார் படை" தேவாரம் இந்த கேதீச்சரத்தலத்தின் மீது பாடப்பட்ட பாடல்களில் ஒன்று. "செத்தாரெலும்பணிவான் திருக்கேதீச்சரத்தானே" என்று முடியும் பாடல் அது.

கோயில் செல்லும் வழியில் கோயிலுக்கு அருகாமையில் (பாலாவி தீர்த்தத்தின் கரையோடு ஒட்டி) ஒரு இடத்தில் தான் பெருமளவில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த குறுக்குவீதி தற்போது பொதுமக்கள் பாவனைக்குத்தடைசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள்.


"கூத்தாடும் பெருமானே குரல் கேட்கவில்லையோ ஈசனே உன்னடி சேர்க்க மனம் வரவில்லையோ"

Friday, January 17, 2014

தைப்பூசம்


இன்று தைப்பூசத்திருநாளாம். இன்று முருகனின் தரிசனம் காணக்கிடைக்கவில்லையென்று சிறுவருத்தம் அல்ல பெருவருத்தம் தான். :( கொஞ்சம் பழைய ஞாபகங்களை மீட்டி மனவருத்தத்தை ஆற்றலாம் என்று நினைக்கிறேன்.:)

ஓரிரு மாதங்களுக்கு முன் கைகூடியிருந்த இந்தியப்பயண ஞாபகங்களை கொஞ்சம் மீட்டிப்பார்க்கிறேன். அந்தப்பயணத்தில் முருகனின் ஆறுபடைவீடுகளுள் ஐந்து இடங்களைத்தரிசிக்கும் பாக்கியம் கிட்டியிருந்தது. துர் அதிஸ்டவசமாக பழமுதிர்ச்சோலை தவறவிடப்பட்டு விட்டது.(மதுரையில் திருப்பரங்குன்றம் சென்றிருந்தோம்).

முதல் மூன்று நாட்களிலேயே பழனி, திருச்செந்தூர் ,திருப்பரங்குன்றம் ,சுவாமிமலை என்று முருகனின் நான்கு படைவீட்டைத்தரிசித்தோம் என்று கூறியபோது கேட்பவர்கள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுத்தான்போனார்கள் :) அவன் அழைத்தான்.நாம் சென்றோம் அவ்வளவுதான் :)

அதன்பின் எட்டுக்குடி,திருத்தணி,வடபழனி கோயில்களுக்கும் சென்றிருந்தோம்.

எந்தக்கோயிலிலும் இல்லாத அளவுக்கு அழகான அலங்காரமுருகனை சென்னை வடபழனியில் பார்த்தேன். அன்று மட்டும் முருகனை அவ்வளவு அழகாக அலங்கரித்திருந்தார்களோ என்னவோ தெரியவில்லை.

ஒரு வீடு தவிர மிகுதி அத்தனை படைவீடுகளுக்கும் அழைத்து தரிசனம் தந்தது அவனின் பெருங்கருணை தான். அதை நினைத்துப்பார்த்து இன்றைய மனவருத்தத்தை ஆற்றிக்கொள்கிறேன்.:)

விரிவான முழுமையான பயணக்கட்டுரையை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

 "அருளதருளி எனையுமனதில் அடிமைகொளவே வரவேணும் அப்பா"