Friday, May 20, 2016

வைகாசி விசாகம்21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது.

ஊர் ஊராக நாடோடிகள் போல பயணஞ்செய்த நாட்கள் அவை. ஆனால் அத்தனை கோவில்களையும் தரிசித்துவிடவேண்டும் என்ற பேராசை பெருங்கனவுக்கு முன்னால் பயணக்களைப்பு, அலுப்பு,சலிப்பு எல்லாம் ஒரு பொருட்டாகவில்லை.

முதல் நாள் இரவு மதுரையில் தங்கி அதிகாலை ஐந்துமணிக்கே எழுந்துசென்று மீனாட்சி அம்மனைத் தரிசித்துவிட்டு புறப்படும் வழியில் தான் எம்மை அழைத்துச்சென்ற உறவுக்காரர் சொன்னார் அப்பொழுதே தஞ்சாவூருக்கு புறப்படலாம் என்று.சில தவறான புரிதல்களால் மதுரையில் வேறு ஆலயங்களைப் பார்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை என்று முடிவுகட்டி மற்ற இடங்களுக்கான பயணத்திட்டத்தை அவரே போட்டுக்கொண்டார். அங்கேயே இருந்துகொண்டு அருகில் இருக்கும் முருகனை(திருப்பரங்குன்றம்) தரிசிக்காமல் செல்வதில் உடன்பாடில்லை. திட்டம் போட்டு சிலபல ஏற்பாடுகளையும் செய்துவிட்டதால் அப்போதே அங்கிருந்து புறப்படவேண்டும் என்பதில் அவரும் பிடிவாதமாகே இருந்தார். அடியேனும் விடுவதாக இல்லை. ஓரிருதடவைகள் கேட்டுப்பார்த்து கடைசியில் முருகனைப் பார்த்தேயாகவேண்டும் என்று அழாக்குறையாக சொல்லிமுடித்தேன். அவரும் வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார்.

முருகக் குழந்தைக்கு இந்த சின்ன இதயத்தில் ஒரு சின்ன இடம் ஒதுக்கியிருக்கிறேன் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். பத்துமுழம் பாய்விரித்து நீட்டி நிமிர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறான் என்ற உண்மை அப்போது தான் புரிந்தது. :)

திருப்பரங்குன்றம் சென்றது மட்டுமல்ல அப்படியே திருச்செந்தூருக்கும் போகலாம் என்று கேட்டுப்பார்த்தேன். ஏனோ தெரியவில்லை. மறுப்பேதும் சொல்லாமல் உடனே சரியென்றுவிட்டார். அதனால் தஞ்சாவூர்ப் பயணம் ஒரு நாள் தள்ளிப்போடப்பட்டது. திட்டமிடல் குறைபாட்டினால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் பயணித்து கொஞ்சம் நேரவிரயமானது என்னவோ உண்மைதான்.

 நீண்ட பயணத்தில் எட்டுக்குடி முருகனையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியிருந்தது. அவ்வளவு கூட்டமில்லை. யாரோ ஒரு பெரியவர் குடும்பத்தோடு வந்து முருகனைத் தரிசித்துக்கொண்டிருந்தார். குறையேதும் இருப்பதாக தெரியாத அழகான குடும்பம்.சங்கீத வித்துவானோ ஆசிரியரோ தெரியவில்லை. "சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணங்கமழ" பாடலை அவர் பாடியதை  கேட்டிருந்தால் பாடகர் யேசுதாஸ் கூட மெய்சிலிர்த்திருப்பார். வயல்களுக்கு நடுவில் குளக்கரையில் (குளம் இருந்ததாகத்தான் ஞாபகம்) அமைந்த அழகான கோயில் அது. 


நடந்த சம்பவங்கள் எல்லாம் மறந்துபோய்விடுவதற்குள் முழுப்பயணக் கட்டுரையையும் எழுதிமுடித்துவிட வரங்கொடு முருகா...! :)

நிற்கும் என் உருவைக் காட்டி ஞேயமோடு அருளில் கூட்டிச்
சிற்பரம் அளித்தி தேவ தேவனே சரணம் - நாளும்

பொற்பதம் விழைவார் போற்றும் புண்ணியா சரணம் எம்மான்
அற்புத அருணைப் பேரான் அத்தனே சரணம் அன்றே.

Saturday, May 24, 2014

ஐயனின் மாதோட்டம்

எல்லாவற்றுக்கும் நேரகாலம் வரவேண்டும் என்பார்கள். உண்மைதான் போலும்.கடந்தவருடம் கூட தமிழ் நாட்டின் பலகோயில்களைத்தரிசிக்கும் பாக்கியம் கிட்டியிருந்தது.ஆனால் பக்கத்தில் இருக்கும் திருக்கேதீச்சரம் ஆலயத்துக்குச்செல்லும் வாய்ப்பு கடந்த கிழமை தான் கைகூடியிருந்தது. அதேபோல் இந்தியப்பயணம் குறித்த விரிவான பயணக்கட்டுரை எழுதவும் இன்னும் நேரகாலம் வரவில்லை என்று நினைக்கிறேன்.  :P :)

நாங்கள் சென்றது திருவிழா,விசேடம் எதுவுமற்ற சாதாரணமான நாளிலாக இருந்தாலும் கூட வெள்ளிக்கிழமை என்பதால் ஒரு சிறிய சிறப்பு வழிபாடு இருந்தது என்று நினைக்கிறேன்.

பாடசாலைப்பிள்ளைகள் பெருந்திரளாக வந்து பூசையை தரிசித்தபின்னர் சிவபுராணமும் திருக்கேதீச்சர திருப்பதிகமும் பாடினார்கள். பண்ணோடு பக்திமயமாக அவர்கள் பாடும்போது அந்நியன் படக்காட்சிதான் மனதில் தோன்றியது. "சங்கீத உபாசகர்லாம் ஒன்னா சேர்ந்து தியாகராஜ கீர்த்தனைகள் பாடுறச்சே மனசெல்லாம் கரைஞ்சு பெருமாளயே நேரில பாத்தமாதிரி ஆயிடும்" 

அதே உணர்வு தான் என் மனதிலும் தோன்றியது. பாடிமுடிக்கும்வரை அங்கேயே இருந்துவிட்டுத்தான் எழுந்துவந்தேன்.:)

கூடவே பள்ளிக்கூடகால ஞாபகமும் வந்துபோனது. தினமும் திருமுறை ஓதினாலும் வெள்ளிக்கிழமைகளில் விசேடமாக சிவபுராணமும் படிப்பது வழக்கம். திருக்கேதீச்சரம் திருஞானசம்பந்தராலும் சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடப்பெற்ற தலம் எனும் சிறப்பைக்கொண்டது. சிறு வயதில் சமயபாடத்திலும் சங்கீதபாடத்திலும் படித்த "நத்தார் படை" தேவாரம் இந்த கேதீச்சரத்தலத்தின் மீது பாடப்பட்ட பாடல்களில் ஒன்று. "செத்தாரெலும்பணிவான் திருக்கேதீச்சரத்தானே" என்று முடியும் பாடல் அது.

கோயில் செல்லும் வழியில் கோயிலுக்கு அருகாமையில் (பாலாவி தீர்த்தத்தின் கரையோடு ஒட்டி) ஒரு இடத்தில் தான் பெருமளவில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த குறுக்குவீதி தற்போது பொதுமக்கள் பாவனைக்குத்தடைசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள்.


"கூத்தாடும் பெருமானே குரல் கேட்கவில்லையோ ஈசனே உன்னடி சேர்க்க மனம் வரவில்லையோ"

Friday, January 17, 2014

தைப்பூசம்


இன்று தைப்பூசத்திருநாளாம். இன்று முருகனின் தரிசனம் காணக்கிடைக்கவில்லையென்று சிறுவருத்தம் அல்ல பெருவருத்தம் தான். :( கொஞ்சம் பழைய ஞாபகங்களை மீட்டி மனவருத்தத்தை ஆற்றலாம் என்று நினைக்கிறேன்.:)

ஓரிரு மாதங்களுக்கு முன் கைகூடியிருந்த இந்தியப்பயண ஞாபகங்களை கொஞ்சம் மீட்டிப்பார்க்கிறேன். அந்தப்பயணத்தில் முருகனின் ஆறுபடைவீடுகளுள் ஐந்து இடங்களைத்தரிசிக்கும் பாக்கியம் கிட்டியிருந்தது. துர் அதிஸ்டவசமாக பழமுதிர்ச்சோலை தவறவிடப்பட்டு விட்டது.(மதுரையில் திருப்பரங்குன்றம் சென்றிருந்தோம்).

முதல் மூன்று நாட்களிலேயே பழனி, திருச்செந்தூர் ,திருப்பரங்குன்றம் ,சுவாமிமலை என்று முருகனின் நான்கு படைவீட்டைத்தரிசித்தோம் என்று கூறியபோது கேட்பவர்கள் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுத்தான்போனார்கள் :) அவன் அழைத்தான்.நாம் சென்றோம் அவ்வளவுதான் :)

அதன்பின் எட்டுக்குடி,திருத்தணி,வடபழனி கோயில்களுக்கும் சென்றிருந்தோம்.

எந்தக்கோயிலிலும் இல்லாத அளவுக்கு அழகான அலங்காரமுருகனை சென்னை வடபழனியில் பார்த்தேன். அன்று மட்டும் முருகனை அவ்வளவு அழகாக அலங்கரித்திருந்தார்களோ என்னவோ தெரியவில்லை.

ஒரு வீடு தவிர மிகுதி அத்தனை படைவீடுகளுக்கும் அழைத்து தரிசனம் தந்தது அவனின் பெருங்கருணை தான். அதை நினைத்துப்பார்த்து இன்றைய மனவருத்தத்தை ஆற்றிக்கொள்கிறேன்.:)

விரிவான முழுமையான பயணக்கட்டுரையை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம் என்று நினைக்கிறேன்.

 "அருளதருளி எனையுமனதில் அடிமைகொளவே வரவேணும் அப்பா"

Friday, January 18, 2013

அன்பே வா அருகிலே

நீண்டகாலத்தின்பின் ஒரு பதிவு எழுதவேண்டும் என்று இன்று தோன்றியிருக்கிறது.ஓரிரு நாட்களுக்குமுன் தற்செயலாக பார்க்கக்கிடைத்த "இதயம் தொட்ட இசைஞானி" நிகழ்ச்சியின் youtube video தொகுப்பில் இளையராஜாவின் இசையில் வந்த எத்தனையோ பாடல்களை கேட்கக்கிடைத்திருந்தது. அந்த நிகழ்ச்சி பார்த்தது  உண்மையிலேயே ஒரு பரவசமான அனுபவம். அன்று அந்த நிகழ்ச்சியில் பாடக்கேட்ட "அன்பே வா அருகிலே"பாடல் இப்போதெல்லாம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.ஏற்கனவே ஓரிரு தடவைகள் ஜேசுதாஸ் அவர்களின் குரலில் வந்த அந்தப்பாடலைக்கேட்டிருக்கிறேன்..ஆனால் அதே மெட்டில் பாடல் வரிகள் வேறாக அமைந்த பெண்குரல் பாடல் ஜானகியம்மா பாடியது மிகவும் பரிச்சயமான பாடல்.. 

 பாடல் இடம்பெற்ற திரைப்படம் "கிளிப்பேச்சு கேட்கவா" இதுவரைக்கும் பார்த்ததில்லை.ஆனால் படத்தில் வந்த ஒரு சில பாடல் காட்சிகளை வைத்துப்பார்க்கும்போது எனக்குப்புரிந்த கதைக்கரு இதுதான்.தவறென்றால் தெரிந்தவர்கள் திருத்திவிடுங்கள்.நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசிக்கிறார்கள்.இடையில் ஏதோ ஒரு காரணத்தால் நாயகி இறந்துவிடுகிறார். அந்தச்சந்தர்ப்பத்தில் ஜேசுதாஸ் குரலில் இந்தப்பாடல் வருகிறது. 

 "இத்தனை நாள் வாய்மொழிந்த சித்திரமே இப்பொழுது மௌனம் ஏன் தானோ

 மின்னலென மின்னிவிட்டு கண்மறைவாய் சென்றுவிட்ட மாயம் நீதானோ"

  

 இறந்தபின்னர் கூட நெருங்கிய உறவுகள் அதிகம் நேசித்தவர்களைத்தேடி ஆவியாக வருவார்கள் என்று கூறப்படுவதுண்டு.இங்கேயும் ஆவியாக தன் அன்புக்குரியவனை தேடிவருகிறார் நாயகி. இந்த உடம்பு என்பது உண்மையிலே வெறும் கூடு தான்..ஆசை,விருப்பம்,பற்று,பாசம் எல்லாமே ஆன்மாவில் தானே கலந்திருக்கிறது. சில உறவுகள் ஆத்ம பந்தங்கள் உடல் மரித்தாலும் ஜென்மங்கள் தாண்டியும் தொடரக்கூடியவை என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை. இந்தப்பாடல் காட்சியில் அமானுஷ்யசக்தி கண்டு பதறும் நாயகனைப்பார்க்கையில் கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்கும். 

"வைகையென பொய்கையென மையலிலே எண்ணியது கானல் நீர்தானோ" 
 "என்னை நீயும் கூட எண்ணக்கோலம் போட்டேன்..மீண்டும் கோலம் போட உன்னைத்தானே கேட்டேன்" 

என்று உருகிமருகிவிட்டு அந்தப்பெண் ஆவியாக தேடிவரும்போது ஓடியொளிவது என்ன நியாயம் என்று நீங்களே சொல்லுங்கள் :P :)

"மந்திரமோ தந்திரமோ அந்தரத்தில் வந்து நிற்கும் தேவி நான் தானே
 மன்னவனே உன்னுடைய பொன்னுடலை பின்னிக்கொள்ளும் ஆவி நான் தானே" 

 பாடலைப்பற்றி இசையை பற்றி எதுவுமே பேசவில்லை.பாடலைக்கேட்டுப்பாருங்கள்..அதுவே தன்னைப்பற்றிப்பேசும் :)


Saturday, February 18, 2012

தனித்துவமாக இருப்போம்..


நான் எழுதிய முந்தைய பதிவு "தனித்துவம் பேணுவோம்".இது என்ன "தனித்துவமாக இருப்போம்" என்று நீங்கள் யோசிப்பது எனக்குப்புரிகிறது.என்னசெய்ய எங்கேயும் தனித்துவமாக இருப்பது தான் எனக்குப்பிடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன்.:))
இந்தப்பதிவை எழுத பெரும் உந்துதலே தற்போது வாசித்துக்கொண்டிருக்கும்
றொபின்ஷர்மாவின் புத்தகம் "Discover your Destiny with The Monk Who Sold His Ferrari" தான். றொபின் ஷர்மா எழுதிய நூல்களில் நான் வாசிக்கும் இரண்டாவது நூல் இது..நிச்சயமாக இப்பதிவு நூல் விமர்சனமல்ல. அதனை ஆங்கில வலைப்பதிவில் எழுதவேண்டும் என்று ஒரு சின்ன ஆசை.  முயற்சிசெய்து பார்ப்போம் :))    

என்னால் முடிகிறதோ இல்லையோ என்பது வேறு விடயம்.இயன்றவரைக்கும் யாரையும் பிரதி பண்ணாமல் முடிந்தால் மற்றவர்களுக்கு முன்னோடியாக வாழவேண்டும் என்று நினைப்பவள் நான்.


வேலைத்தளங்களில் சமூகத்தில் சமூக வலைத்தளங்களில் பல மனிதரை பார்க்கும்போது தோன்றும் எண்ணம் தான் இந்த "தனித்துவம்".நான் உட்பட எம்மில் பெரும்பாலோனோர் ஆட்டு மந்தைக்கூட்டம்போல் மற்றவர்கள் செய்வதையே நாமும் பின் தொடர்வதில் வல்லுனர்களாக இருக்கிறோம். இதனால் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான நேரங்களில் எம் தனித்துவத்தை இழந்துவிடுகிறோம். சமூகத்தில் ஒரு கூட்டம் பொருள் புகழ் தேடி அலைகிறது என்றால் நாமும் அதன் பின்னாலேயே அலைகிறோம் அது நமக்கு தேவையா இல்லையா என்ற விழிப்புணர்வு இல்லாமலே.

"ஊரோடு ஒத்துவாழ் " என்று பெரியவர்கள் சொல்வார்கள். இதனை எந்த அர்த்தத்தில் எடுப்பது என்று தெரியவில்லை. ஆனால் ஆழ்மன உணர்வில் எமக்கு சரி என்று படும் விடயங்களை தனித்து நின்று தன்னிலும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது தான் என் கொள்கை.

உதாரணமாக  பொது இடங்களில் பாதி உடல்தெரிய ஆடை உடுத்தால் தான், பொது நீச்சல் தடாகத்தில் நீச்சல் உடையில் குளித்தால் தான் நாகரீக மங்கை என்று ஏதும் வரைவிலக்கணம் இருந்தால் நானும் ஒரு வகையில் நகரத்தில் வாழும் கிராமத்து பட்டிக்காடு தான்.ஆனால் வெறும் வறட்டுகொள்கையாக இல்லாமல் காரணகாரியங்கள் வைத்துக்கொண்டு எனக்காகத்தேர்ந்தெடுத்த கொள்கை அது. உண்மையிலே நகரத்தில் இந்த ஆடை அணியவேண்டும் என எழுதப்பட்டிருக்கிறதா என்ன. யாரோ தொடக்கிவைத்ததை ஆட்டுமந்தைகள் போல் பின்பற்றுகிறோம் அவ்வளவுதானே..உண்மையில் ஆடை விடயத்தில் பாதி கிராமம் பாதி நகரம் சேர்ந்த ஒரு இடைத்தரமான நிலையில் தான் இருக்கிறேன்.இந்த சுயபுராணத்தின் அடிப்படை நோக்கம் கண்ணை மூடிக்கொண்டு அடுத்தவரை பின்பற்றவேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.நல்லது கெட்டது எது என கொஞ்சம் ஆராய்ந்துபார்த்து எமக்கான வழியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இன்னொரு விடயம் பெயர் புகழுக்காக அலைவது..யாருக்குத்தான் புகழ் பெருமையில் ஆசை இல்லை ஒத்துக்கொள்கிறேன்,ஆனால் தேடியலைபவர்களை பார்த்தால் என்னளவில் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது. காதல்,புகழ்,பெருமை எல்லாமே தானாக தேடி வரும்போது தான் உண்மையான பெறுமதி இருக்கும். மாறாக அவற்றை தேடி அலைந்து எதிர்பார்த்து காரியம் செய்வது கிட்டத்தட்ட வீண்முயற்சிதான்.Twitter இல் பார்த்தால் பின் தொடர்பவரின் எண்ணிக்கை அளவிடுவது. அதிக பின் தொடர்பவர்கள் இருப்பது நிச்சயமாக பெரியவிடயம் தான்.ஆனால் "பின் தொடர்பவர்கள்" எண்ணிக்கையை கூட்டுவதற்காக மக்கள் எடுக்கும் பிரயத்தனங்களைப்பார்க்கும்போது சிலவேளை கொஞ்சம் சிரிப்பாகவும் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது.:)).இதே போல் வலைப்பதிவில் அதிக வாக்குகள் சேர்க்கும் நோக்கில் எழுதப்படும் பதிவுகளையும் குறிப்பிடலாம்.


எம்மில் சிலர் இருக்கிறார்கள்.எப்போதும் அடுத்தவனை அடுத்தவனின் திறமை(கள்) பற்றியே வியந்து பேசுவது.தவறில்லை.ஆனால் அதே நேரம் "நான் எதற்கும் லாயக்கில்லாதவன்" என்று எம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்.இறைவனின் படைப்பில் எல்லோருமே தனித்துவமானவர்கள்.எல்லோருக்குள்ளும் ஒரு சில திறமைகள் இருக்கத்தான் செய்யும்."எதற்கும் லாயக்கில்லாதவன்" என்று யாரும் சொன்னால் அவர்கள் தங்கள் திறமைகளை சரிவர இன்னும் அடையாளம்காணவில்லை என்று தான் அர்த்தம்.கொஞ்சம் சுய பரிசோதனை/தேடல் செய்துபார்த்தால் உங்கள் திறமைகளை அடையாளை கண்டு வளர்த்துக்கொள்ளலாம்..சுயபரிசோதனை/தேடல் என்றால் 3 நாட்களாக உங்கள் பெயரை கூகிளில் இட்டு தேடி விட்டு நான்காம் நாள் என் வீட்டு வாசலில் கல்லுடன் வந்து நிற்காதீர்கள்..:P : )))))
 
இங்கு நான் சொல்லவரும் கருத்து ஒன்றேஒன்று தான்.அடுத்தவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக அதையே நாமும் பின்பற்றவேண்டிய எந்த அவசியமுமில்லை..ஏதும் கட்டாயம் இருந்தால் தவிர.காரணகாரியங்களை ஆராய்ந்து எங்களுக்கு எது ஏற்றது எங்களுக்கு எது சரியானது என்றுணர்ந்து செயற்படுவதே வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும்..


Sunday, December 25, 2011

தனித்துவம் பேணுவோம்

தனிப்பட்ட வலைப்பதிவில் பேச்சுவழக்கில் எழுதி என்னை தனித்துக்காட்ட பிரித்துக்காட்ட விரும்புவதில்லை.அதனால் எழுத்துத்தமிழில் தான் பதிவுகள் எழுதிவருகிறேன்..

சினிமா பார்ப்பதில் கொஞ்சம், நகர வாழ்க்கை பல்லின கலாச்சார சங்கமம் ஒரு பக்கம்  இணையவழி பல நாட்டு நண்பர்கள் தொடர்பு என்று பேச்சு வழக்கில் 100  % ஈழவழக்கு இல்லாவிட்டாலும் ஈழமொழிநடையில் பதிவு எழுதும்போது பலமுறை யோசித்து இயன்றளவு சரியான ஈழவழக்கு சொற்கள் மட்டும் பாவித்து எழுதியிருக்கிறேன்.ஒரு வகையில் எதிர்கால சந்ததிக்கான ஆவணப்படுத்தல் அது.அதிலே எங்கள் தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்று ஒரேயொரு நோக்கம் மட்டும் தான்.

இன்று ஈழம் சம்பந்தமாக பொதுவலைத்தளமொன்றில் போடப்பட்ட ஒரு பதிவு பார்க்கக்கிடைத்தது."பொண்ணுங்க","பசங்க","பண்ணுங்க","வருவாங்க" இந்த சொற்கள் எல்லாம் ஈழ வழக்கில் இருக்கிறதா என்று ஆச்சரியமாக இருக்கிறது...

தனிவலைப்பதிவு எந்தமாதிரியும் இருக்கலாம்..ஆனால் ஈழம் என்று பொதுவில் வரும்போது எங்கள் தனித்துவத்தை பாதுகாப்பது அவசியம் என நினக்கிறேன் :(((

தனிப்பட்ட கருத்துத்தான்..தவறிருந்தால் சுட்டிக்காட்டுங்கள்..

Saturday, November 19, 2011

இரசித்த இருகுரல் ஒரு பாடல்


எஸ்.பி.பி ஜானகி அம்மா இணைக்குரலில் உருகும் பல பாடல்களில் நான் கேட்டு ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று..

கலைஞர் தொலைக்காட்சியில் பாடிய ஒரு குழந்தைக்கு விமர்சனம் செய்யும்போது பாடகி அனுராதா ஸ்ரீராம் சொன்ன ஒரு விடயம் இங்கே ஞாபகத்துக்கு வருகிறது..அதாவது பாடும்போது குரலில் சரியான உணர்வுகளைக்காட்டும் திறமை இயற்கையிலேயே சிலருக்கு கடவுளால் கொடுக்கப்பட்ட வரம். உண்மைதான் போலும்..

அத்தகைய வரம் பெற்றவர்களில் எனக்கு மிகவும் பிடித்த இணைக்குரல்கள் எஸ்.பி.பி,ஜானகி அம்மா...

ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீதானடி
மனமே உன்னையே நின்னையே எண்ணியே
என் சுவாசம் யாவும் நீயே
என் வாசல் வழி வருவாயே மௌனம் ஏன்

இந்த மூன்றோ நான்கு வரிகளுக்கும் என்னவொரு உணர்வுபூர்வமாக எஸ்.பி.பி குரல் கொடுத்திருக்கிறார் என்பது பாடலை அனுபவித்துக்கேட்டவர்களுக்கு விளங்கும் என நம்புகிறேன்...

என்ன தான் அருமையான பாடும் திறமை குரல் வளம் இருந்தாலும் பின்னணி இசையை விட்டுப்பார்த்தால் பாடலின் அழகில் ஏதோ ஒன்று குறைந்தது போல தான் இருக்கும்...சில வரிகளுக்கு பின்னால் குழுக்குரலாக ஒலிக்கும்"ம்ம்ம்" கேட்பவர்கள் அதிகம் கவனிக்காவிட்டாலும் பாடலுக்கு பின்னே இருந்து அழகு சேர்க்கிறது என்பதே உண்மை...

"மௌனம் ஏன்" என மெதுவாக முடிக்க பின்னணி இசை உதவிக்கு வந்து ஒலித்து ஓயும் இடம் நான் மிகவும் ரசிக்கும் ஒன்று.."மௌனம் ஏன்" இழுவை தவிர்த்து சடுதியாக நிறுத்தியிருந்தால் பாடல் வரியின் உணர்வு அழகு எல்லாமே கொஞ்சம் சிதைந்தே போயிருக்கும் என்பது என் கருத்து..பாடலின் சந்தர்ப்பம் சூழல் வரிகள் சொல்லும் உணர்வுகள் அறிந்து அதற்கு ஏற்றால் போல இசை கொடுக்கும் இசையமைப்பாளர்கள் குறிப்பாக இந்தப்பாடலில் தேவாவின் பின்னணி இசை பாராட்டப்படவேண்டியதுதான்..

எஸ்.பி.பி க்கு சளைக்காதவராக இதே வரிகள் பெண்குரலாக ஜானகி அம்மா பாடுவதும் கொள்ளை அழகுதான்,...

ஆண் குரலில் "மௌனம் ஏன்" என்று வந்த வரிகள் பெண் குரலில் "மன்னவா" என்று ஜானகி அம்மா உருகும் அழகை நீங்களும் ஒருதடவை உருகி கேட்டுப்பாருங்கள்.:)

பாடல் வரிகள் வைரமுத்து போல தெரிகிறது..தவறென்றால் தெரிந்தவர்கள் திருத்திவிடுங்கள்..:)

முழுப்பாடலும் அழகாக இருந்தாலும் அந்த எடுப்பின் இசை+வரிகள் என்னை மிகவும் கொள்ளை கொண்டதால் அவற்றைப்பற்றி மட்டுமே கதைத்திருக்கிறேன்...

இந்தபாடலின் இசை இளையராஜா இல்லை என்பதால் இளையராஜா இசை அளவுக்கு தேவா எனக்கு நெருக்கம் இல்லை என்பதால் என் அபிமான பாடகர் எஸ்.பி.பி மீது ஒரு சின்ன வருத்தம் இருக்கிறது..அவராவது பாடும்போது "ஓ ராகினி"ற்கு பதிலாக "ஓ ஹாசினி "என்று பாடியிருக்கலாம் இல்லையா?:P:Pசந்தம் அழகாகத்தானே பொருந்திவருகிறது,..:P :))))


இதுவரைக்கும் பாடலை வீடியோ இல்லாமல் தான் கேட்டிருக்கிறேன்.இந்தப்பாடலை இப்போது இங்கே இணைக்கமுடியவில்லை:(குறிப்பிட்ட இணைப்பில் சென்று கேட்டுப்பாருங்கள்..

இந்த கொலைக்களத்தில் மாட்டி யாரும் உடல் உள்ளம் நொந்துபோனால் அதற்கு ஹாசினி பொறுப்பல்ல..வலைப்பூ வாசலிலேயே எச்சரிக்கைப்பலகை மாட்டித்தான் வைத்திருக்கிறேன்..:))))