Saturday, February 18, 2012

தனித்துவமாக இருப்போம்..


நான் எழுதிய முந்தைய பதிவு "தனித்துவம் பேணுவோம்".இது என்ன "தனித்துவமாக இருப்போம்" என்று நீங்கள் யோசிப்பது எனக்குப்புரிகிறது.என்னசெய்ய எங்கேயும் தனித்துவமாக இருப்பது தான் எனக்குப்பிடிக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்களேன்.:))
இந்தப்பதிவை எழுத பெரும் உந்துதலே தற்போது வாசித்துக்கொண்டிருக்கும்
றொபின்ஷர்மாவின் புத்தகம் "Discover your Destiny with The Monk Who Sold His Ferrari" தான். றொபின் ஷர்மா எழுதிய நூல்களில் நான் வாசிக்கும் இரண்டாவது நூல் இது..நிச்சயமாக இப்பதிவு நூல் விமர்சனமல்ல. அதனை ஆங்கில வலைப்பதிவில் எழுதவேண்டும் என்று ஒரு சின்ன ஆசை.  முயற்சிசெய்து பார்ப்போம் :))    

என்னால் முடிகிறதோ இல்லையோ என்பது வேறு விடயம்.இயன்றவரைக்கும் யாரையும் பிரதி பண்ணாமல் முடிந்தால் மற்றவர்களுக்கு முன்னோடியாக வாழவேண்டும் என்று நினைப்பவள் நான்.


வேலைத்தளங்களில் சமூகத்தில் சமூக வலைத்தளங்களில் பல மனிதரை பார்க்கும்போது தோன்றும் எண்ணம் தான் இந்த "தனித்துவம்".நான் உட்பட எம்மில் பெரும்பாலோனோர் ஆட்டு மந்தைக்கூட்டம்போல் மற்றவர்கள் செய்வதையே நாமும் பின் தொடர்வதில் வல்லுனர்களாக இருக்கிறோம். இதனால் பெரும்பாலானவர்கள் பெரும்பாலான நேரங்களில் எம் தனித்துவத்தை இழந்துவிடுகிறோம். சமூகத்தில் ஒரு கூட்டம் பொருள் புகழ் தேடி அலைகிறது என்றால் நாமும் அதன் பின்னாலேயே அலைகிறோம் அது நமக்கு தேவையா இல்லையா என்ற விழிப்புணர்வு இல்லாமலே.

"ஊரோடு ஒத்துவாழ் " என்று பெரியவர்கள் சொல்வார்கள். இதனை எந்த அர்த்தத்தில் எடுப்பது என்று தெரியவில்லை. ஆனால் ஆழ்மன உணர்வில் எமக்கு சரி என்று படும் விடயங்களை தனித்து நின்று தன்னிலும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது தான் என் கொள்கை.

உதாரணமாக  பொது இடங்களில் பாதி உடல்தெரிய ஆடை உடுத்தால் தான், பொது நீச்சல் தடாகத்தில் நீச்சல் உடையில் குளித்தால் தான் நாகரீக மங்கை என்று ஏதும் வரைவிலக்கணம் இருந்தால் நானும் ஒரு வகையில் நகரத்தில் வாழும் கிராமத்து பட்டிக்காடு தான்.ஆனால் வெறும் வறட்டுகொள்கையாக இல்லாமல் காரணகாரியங்கள் வைத்துக்கொண்டு எனக்காகத்தேர்ந்தெடுத்த கொள்கை அது. உண்மையிலே நகரத்தில் இந்த ஆடை அணியவேண்டும் என எழுதப்பட்டிருக்கிறதா என்ன. யாரோ தொடக்கிவைத்ததை ஆட்டுமந்தைகள் போல் பின்பற்றுகிறோம் அவ்வளவுதானே..உண்மையில் ஆடை விடயத்தில் பாதி கிராமம் பாதி நகரம் சேர்ந்த ஒரு இடைத்தரமான நிலையில் தான் இருக்கிறேன்.இந்த சுயபுராணத்தின் அடிப்படை நோக்கம் கண்ணை மூடிக்கொண்டு அடுத்தவரை பின்பற்றவேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை.நல்லது கெட்டது எது என கொஞ்சம் ஆராய்ந்துபார்த்து எமக்கான வழியை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இன்னொரு விடயம் பெயர் புகழுக்காக அலைவது..யாருக்குத்தான் புகழ் பெருமையில் ஆசை இல்லை ஒத்துக்கொள்கிறேன்,ஆனால் தேடியலைபவர்களை பார்த்தால் என்னளவில் கொஞ்சம் பரிதாபமாகத்தான் இருக்கிறது. காதல்,புகழ்,பெருமை எல்லாமே தானாக தேடி வரும்போது தான் உண்மையான பெறுமதி இருக்கும். மாறாக அவற்றை தேடி அலைந்து எதிர்பார்த்து காரியம் செய்வது கிட்டத்தட்ட வீண்முயற்சிதான்.Twitter இல் பார்த்தால் பின் தொடர்பவரின் எண்ணிக்கை அளவிடுவது. அதிக பின் தொடர்பவர்கள் இருப்பது நிச்சயமாக பெரியவிடயம் தான்.ஆனால் "பின் தொடர்பவர்கள்" எண்ணிக்கையை கூட்டுவதற்காக மக்கள் எடுக்கும் பிரயத்தனங்களைப்பார்க்கும்போது சிலவேளை கொஞ்சம் சிரிப்பாகவும் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது.:)).இதே போல் வலைப்பதிவில் அதிக வாக்குகள் சேர்க்கும் நோக்கில் எழுதப்படும் பதிவுகளையும் குறிப்பிடலாம்.


எம்மில் சிலர் இருக்கிறார்கள்.எப்போதும் அடுத்தவனை அடுத்தவனின் திறமை(கள்) பற்றியே வியந்து பேசுவது.தவறில்லை.ஆனால் அதே நேரம் "நான் எதற்கும் லாயக்கில்லாதவன்" என்று எம்மை நாமே தாழ்த்திக்கொள்கிறோம்.இறைவனின் படைப்பில் எல்லோருமே தனித்துவமானவர்கள்.எல்லோருக்குள்ளும் ஒரு சில திறமைகள் இருக்கத்தான் செய்யும்."எதற்கும் லாயக்கில்லாதவன்" என்று யாரும் சொன்னால் அவர்கள் தங்கள் திறமைகளை சரிவர இன்னும் அடையாளம்காணவில்லை என்று தான் அர்த்தம்.கொஞ்சம் சுய பரிசோதனை/தேடல் செய்துபார்த்தால் உங்கள் திறமைகளை அடையாளை கண்டு வளர்த்துக்கொள்ளலாம்..சுயபரிசோதனை/தேடல் என்றால் 3 நாட்களாக உங்கள் பெயரை கூகிளில் இட்டு தேடி விட்டு நான்காம் நாள் என் வீட்டு வாசலில் கல்லுடன் வந்து நிற்காதீர்கள்..:P : )))))
 
இங்கு நான் சொல்லவரும் கருத்து ஒன்றேஒன்று தான்.அடுத்தவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக அதையே நாமும் பின்பற்றவேண்டிய எந்த அவசியமுமில்லை..ஏதும் கட்டாயம் இருந்தால் தவிர.காரணகாரியங்களை ஆராய்ந்து எங்களுக்கு எது ஏற்றது எங்களுக்கு எது சரியானது என்றுணர்ந்து செயற்படுவதே வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும்..