Saturday, April 17, 2010

இசைராணி

நாளுக்கு நாள் படத்துக்கு படம் என்று புது புது பின்னணி பாடகர்கள் முளைத்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் திரை
இசையுலகையே ஒரு காலத்தில் ஆட்டிப்படைத்த ஒரு இசைக்குயிலைப் பற்றியதே இந்தப்பதிவாகும்....

பாடகர்களுக்கு அடிப்படையாக தேவையானது இனிய குரல் வளமாகும்...அத்தோடு திரைப்பாடல்களுக்கு பின்னணி பாடும்போது பாடல் இடம்பெறும் சந்தர்ப்பம் சூழ்நிலை பாடல் வரிகளுக்கு ஏற்றவாறு உணர்ச்சி பாவங்களை குரலில் காட்டவேண்டியதும் அவசியமான ஒன்றாகும்.. அந்த ரீதியில் என்னுடைய இரசனையில் என்னுடைய கணிப்பில் பாடகர்களில் ஆண்களில் முதல் இடத்தில் இருப்பவர் எங்கள் எஸ்.பி.பி தான்...
ஆம்...பெண்களில் எனது பட்டியலில் முதலிடத்தில் யார்???அவரைப்பற்றி தான் இந்தப்பதிவு முழுக்க பேச இருக்கிறேன்....அவர் காலத்தில் வந்த
பின்னணி பாடகிகள் யாரும் அவருக்கு சளைத்தவர்கள் அல்ல...இருந்தாலும் விதம் விதமான பாடல்களை வித்தியாசமான குரல்களில் வரிக்கு வரி சொல்லுக்கு சொல் ஏன் எழுத்துக்கு எழுத்து என்று கூட சொல்லலாம் உணர்ச்சி கொடுத்துப்பாடுவதில் அவருக்கு நிகர் அவரே தான்...ஆம் அந்த குரலுக்கே உரிய மந்திரசக்தியால் எல்லோரையும் கட்டிப்போடும் தன்மை படைத்தவர்..அவர் வேறு யாருமல்ல..தமிழ் திரையிசையுலகின் பின்னணி பாடகி எங்கள் ஜானகி அம்மா தான்....பொதுவிலே அவரை பற்றி கதைப்பதைவிடுத்து அவர் பாடிய பாடல்களோடு அவரின் தனித்துவத்தை சாதனையைப்பற்றி பேசலாம் என்று நினைக்கிறேன்....

அந்த வகையில் "உயிரே உனக்காக"படத்தில் இடம்பெற்ற இப்பாடலை பார்ப்போம்..வானம்பாடியாக இயற்கையை இரசிக்கும் ஒரு வாலிப உள்ளத்தின் களிப்பை அப்படியே தன் குரலில் கொட்டிக்குவித்திருப்பார் ஜானகி அம்மா... லக்ஸ்மிகாந்த் பியரிலாலின் அற்புதமான இசையமைப்பை தன் இனிய குரலால் முழுமைப்படுத்தியிருப்பார் பாருங்கள்....


"அக்னி நட்சத்திரம்" படத்தில் இடம்பெற்ற இப்பாடல் இளமைத்துடிப்பு நிறைந்த ஒரு பெண்ணின் உள்ளத்து உணர்வுகளை காட்டுவதாய் அமைந்திருக்கிறது...திரைப்படத்தை நான் இதுவரையில் பார்க்கவில்லை...இருந்தாலும் அருமையான இந்தப்பாடலுக்கு இந்தப்பாடல்காட்சி பொருத்தமாக அமையவில்லை என்பதே எனது தனிப்பட்ட அபிப்பிராயம்....


இயல்பாகவே ஜானகி அம்மாவின் குரலில் ஒரு மழலைத்தன்மை இருப்பதை நான் அனுபவித்து உணர்ந்திருக்கிறேன்....இருந்தாலும் காதல் பாடல்கள் அதுவும் டூயட் பாடல் பாடும்போது குரலைக்குழைத்து கொஞ்சும் குரலில் அவர் பாடுவது பாடலுக்கு மேலும் அழகு சேர்த்துச்செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை...இந்தப்பாடலைக்கேட்டுப்பாருங்கள்..."புதிய பூவிது பூத்தது"


அடுத்து ஒரு காதல் பெண்ணின் ஏக்கத்தை தவிப்பை காட்டும் இந்தப்பாடலை அவர் குரலில் கேட்கும்போது தெளிவாக இருக்கும் மனதில் கூட இல்லாத தவிப்பு சோகம் எல்லாம் வந்துவிட்டது போல் இருக்கும்....பாடல் தொடக்கத்தில் வரும் ஆலாவில அப்படியே உயிரை உருக்கிச்சென்றுவிடுவார் ஜானகி...


அடுத்ததாக தன் அன்புக்குரியவனை தேடித்தவிக்கும் ஒரு பெண்ணின் தவிப்பை வெளிப்படுத்தும் இப்பாடல் எத்தனை வருசம் கடந்தாலும் எல்லோர் மனதிலும் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருக்கிறது.ஆம்..இந்தபாடலிலும் வரும் ஆலாவின் அழகை விபரிக்க வார்த்தைகளே இல்லை......இந்தப்பாடலை விரும்பாத பெண்கள் யாருமே இருக்கமாட்டார்கள் என்பதே எனது கருத்து....அருமையான பாடல் வரிகள்..இசைஞானியின் அற்புதமான இசையமைப்பு...அதற்கும் மேலாக பாடலுக்கு உயிர் கொடுத்து பாடியிருப்பார் ஜானகி அம்மா...."காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத்தேடுதே.."


அடுத்தாக வரும் இந்தப்பாடல் இடம்பெற்ற திரைப்படத்தை நான் பார்க்கவில்லை..ஆனால் பாடல் வரிகளைப்பார்க்கும்போது காதலில் தோல்வியடைந்த ஒரு பெண்ணின் சோகத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாகவே எனக்கு தெரிகிறது......அழுவதாக இல்லாமல் தழுதழுத்த குரலில் சோகத்தை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார் பாருங்கள்...


இந்தப்பாடலில் சோகத்தை அழுகையாகவே வெளிப்படுத்தியிருப்பார்...பொதுவாக ஜானகி அம்மா பாடும்போது முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டுவதில்லையாம்..குரலில் மட்டும் அத்தனை நடிப்பும் இருக்குமாம்..ஆனால் இந்தப்பாடலை கேட்கும் எங்கள் கண்களில் கண்ணீரை வரவைத்து விடுகிறார்...


சோகம் சந்தோசம் தவிப்பு இவை மட்டுமல்ல வித்தியாசமான வில்லங்கமான பாடல்களைப்பாடுவதிலும் வல்லவர் அவர்...எஸ்.பி.பி உடன் இணைந்து பாடிய இந்தப்பாடலில் வித்தியாசமான உணர்வை நடிப்பை தன் குரலில் காட்டியிருக்கிறார் கேட்டுப்பாருங்கள்..."செங்குருவி செங்குருவி "


இவை மட்டுமல்ல மழலைக்குரலிலும் பாடுவதிலும் வல்லவர் அவர்...
டாடி டாடி ஒ...மை டாடி
பேபி பேபி...ஒ..மை பேபி
எனது கானம்...
இந்தப்பாடல்களில் அவரது மழலைக்குரல் அழகை நாங்கள் ரசிக்கலாம்...தற்போது இந்தப்பாடல்களை உங்களோடு பகிர்ந்துகொள்ளமுடியாமைக்கு வருந்துகிறேன்...

என்றும் வாழும் கானங்கள் தந்த எங்கள் இசைராணி பல்லாண்டு வாழவேண்டும் என்று இறைவனைப்பிரார்த்திப்போம்...