Friday, May 20, 2016

வைகாசி விசாகம்21.05.2016 வைகாசி விசாகத் திருநாளாம். முருகக் குழந்தையின் பிறந்தநாள். தமிழ்நாட்டுப் பயணத்தின் இன்னொரு சிறிய பகுதியை எழுதலாம் என்று தோன்றியது.

ஊர் ஊராக நாடோடிகள் போல பயணஞ்செய்த நாட்கள் அவை. ஆனால் அத்தனை கோவில்களையும் தரிசித்துவிடவேண்டும் என்ற பேராசை பெருங்கனவுக்கு முன்னால் பயணக்களைப்பு, அலுப்பு,சலிப்பு எல்லாம் ஒரு பொருட்டாகவில்லை.

முதல் நாள் இரவு மதுரையில் தங்கி அதிகாலை ஐந்துமணிக்கே எழுந்துசென்று மீனாட்சி அம்மனைத் தரிசித்துவிட்டு புறப்படும் வழியில் தான் எம்மை அழைத்துச்சென்ற உறவுக்காரர் சொன்னார் அப்பொழுதே தஞ்சாவூருக்கு புறப்படலாம் என்று.சில தவறான புரிதல்களால் மதுரையில் வேறு ஆலயங்களைப் பார்ப்பதில் எனக்கு ஆர்வமில்லை என்று முடிவுகட்டி மற்ற இடங்களுக்கான பயணத்திட்டத்தை அவரே போட்டுக்கொண்டார். அங்கேயே இருந்துகொண்டு அருகில் இருக்கும் முருகனை(திருப்பரங்குன்றம்) தரிசிக்காமல் செல்வதில் உடன்பாடில்லை. திட்டம் போட்டு சிலபல ஏற்பாடுகளையும் செய்துவிட்டதால் அப்போதே அங்கிருந்து புறப்படவேண்டும் என்பதில் அவரும் பிடிவாதமாகே இருந்தார். அடியேனும் விடுவதாக இல்லை. ஓரிருதடவைகள் கேட்டுப்பார்த்து கடைசியில் முருகனைப் பார்த்தேயாகவேண்டும் என்று அழாக்குறையாக சொல்லிமுடித்தேன். அவரும் வேறுவழியில்லாமல் ஒப்புக்கொண்டார்.

முருகக் குழந்தைக்கு இந்த சின்ன இதயத்தில் ஒரு சின்ன இடம் ஒதுக்கியிருக்கிறேன் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தேன். பத்துமுழம் பாய்விரித்து நீட்டி நிமிர்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறான் என்ற உண்மை அப்போது தான் புரிந்தது. :)

திருப்பரங்குன்றம் சென்றது மட்டுமல்ல அப்படியே திருச்செந்தூருக்கும் போகலாம் என்று கேட்டுப்பார்த்தேன். ஏனோ தெரியவில்லை. மறுப்பேதும் சொல்லாமல் உடனே சரியென்றுவிட்டார். அதனால் தஞ்சாவூர்ப் பயணம் ஒரு நாள் தள்ளிப்போடப்பட்டது. திட்டமிடல் குறைபாட்டினால் புறப்பட்ட இடத்துக்கே திரும்பவும் பயணித்து கொஞ்சம் நேரவிரயமானது என்னவோ உண்மைதான்.

 நீண்ட பயணத்தில் எட்டுக்குடி முருகனையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியிருந்தது. அவ்வளவு கூட்டமில்லை. யாரோ ஒரு பெரியவர் குடும்பத்தோடு வந்து முருகனைத் தரிசித்துக்கொண்டிருந்தார். குறையேதும் இருப்பதாக தெரியாத அழகான குடும்பம்.சங்கீத வித்துவானோ ஆசிரியரோ தெரியவில்லை. "சந்தனமும் ஜவ்வாதும் சேர்ந்து மணங்கமழ" பாடலை அவர் பாடியதை  கேட்டிருந்தால் பாடகர் யேசுதாஸ் கூட மெய்சிலிர்த்திருப்பார். வயல்களுக்கு நடுவில் குளக்கரையில் (குளம் இருந்ததாகத்தான் ஞாபகம்) அமைந்த அழகான கோயில் அது. 


நடந்த சம்பவங்கள் எல்லாம் மறந்துபோய்விடுவதற்குள் முழுப்பயணக் கட்டுரையையும் எழுதிமுடித்துவிட வரங்கொடு முருகா...! :)

நிற்கும் என் உருவைக் காட்டி ஞேயமோடு அருளில் கூட்டிச்
சிற்பரம் அளித்தி தேவ தேவனே சரணம் - நாளும்

பொற்பதம் விழைவார் போற்றும் புண்ணியா சரணம் எம்மான்
அற்புத அருணைப் பேரான் அத்தனே சரணம் அன்றே.