Friday, December 10, 2010

மனம் கவர்ந்த நாயகன்

தவிர்க்கமுடியாத சிலகாரணங்களால் பதிவுலகில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.எழுதி எழுதி மட்டுமல்ல எழுதாமல் மௌனமாக இருந்து கூட உங்களை கொல்ல முடியும் என்று நிரூபிப்பதற்காக தான்  என்று  வைத்துக்கொள்ளுங்களேன்.:P (நீ எழுதவில்லை என்று இங்கு யார் கவலைப்பட்டார்கள் என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்கும்  கேட்கிறது.சரி.விடுங்கள்.தனிப்பட்ட ரீதியில் அதை பேசித்தீர்த்துக்கொள்வோம்.;)

பதிவு எழுதியே ஆகவேண்டும் என்று யாரும் கொலை மிரட்டல் விடுத்திருந்தால் கூட "முடிந்ததை செய்துகொள்ளுங்கள்" என்று என்வழியில்  போய்க்கொண்டே இருந்திருப்பேன்.என் அபிமானப்பதிவர்களில் ஒருவர் மணிமேகலா.பதிவுலகில் என் அன்புத்தோழியும் கூட.அவர் விடுத்ததோ பதிவு  எழுதியே ஆகவேண்டும் என்ற அன்பு மிரட்டல்.வேறு வழியில்லை.பணிந்துவிட்டேன் தோழி உங்கள் அன்புக்கு.:)


நீண்டகாலமாக பதிவு எழுதாதனால் எழுத நினைத்தால் ஆயிரத்தெட்டு தலைப்பு மனதுக்குள் வந்து நிற்கிறது. :)அதில் ஒன்றை இப்போது தெரிவுசெய்து எழுதுகிறேன்.எத்தனையோ திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன்.சில படங்களில் வரும் கதாபாத்திரங்களை  இரசித்துப்பார்த்திருக்கிறேன்.ஆனால் சினிமாவில் வரும்  நாயகர்கள் எல்லாம் சினிமாவில் மட்டும் தான் நாயகனாக இருப்பதுபோன்ற மன  உணர்வு அடிக்கடி என் மனதில் தோன்றும்.அதனால் நல்ல கதையம்சம் உள்ள பொழுதுபோக்கான திரைப்படங்கள் வரும்போது படத்தை ரசிப்பதோடு  மட்டும் நிறுத்திக்கொள்வேன்.எந்த சினிமா நாயகன் மீதோ நாயகி மீதோ தனிப்பட்ட அபிமானத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. யாரும்  வெள்ளித்திரை என்ற மாயையை தாண்டி அப்படி என் மனதை பெரிதாக கவரவும் இல்லை...:).ஆனால் எத்தனையோ அடி திரையரங்கில் எத்தனையோ  வர்ணஜாலங்கள் காட்டி கவரமுடியாத என் மனப்போக்கை வெறும் எழுத்துக்களால் ஆட்டிப்படைத்துவிட்டார் எழுத்தாளர் அமரர் கல்கி தன்  பொன்னியின் செல்வன் என்ற நாவலில்.நீங்கள் பொன்னியின் செல்வன் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.இந்தப்பதிவை தொடர்ந்து வாசித்துச்செல்ல அந்த நாவல் படித்த அனுபவம் அவசியமானது என்று கருதுகிறேன்.

இந்தப்பதிவை பொன்னியின் செல்வன் நாவல் பற்றிய விமர்சனம் என்று யாராவது பிழையாக விளங்கிக்கொண்டு ஏமாந்துபோனால் அத்ற்கு நான்  பொறுப்பல்ல.:).இந்த பதிவு நாவலின் நாயகன் பேரரசன் இராஜராஜ சோழன் பாத்திரத்தைப்பற்றியது மட்டுமே.கல்கியின் எழுத்துக்களோடு என்றோ  ஒரு காலத்தில் உண்மையாக நடந்த சம்பவங்கள் என்ற நினைப்பும் தான் இந்த பாத்திரத்தில் அளவுகடந்த அபிமானத்தை எனக்கு  ஏற்படுத்தியிருக்கிறது என்று நம்புகிறேன்.சரித்திர ஆராய்ச்சியின் அடிப்படையிலே தன்னுடைய கற்பனை வர்ணனை திறமைகளையும் சேர்த்து  கல்கி இந்த நாவலை படைத்திருக்கிறார்.அவர் குறிப்பிட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்துத்தான் என் அபிமான நாயகனின் புகழ்பாட  இருக்கிறேன்.


இளம் வயதிலேயே எதிரிப்படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரு வீரன்,தேவர்களை நிகர்த்த அழகுடைய ஒரு அரசிளங்குமாரன், பல தேசங்களை  ஒரு குடைக்கீழ் ஆண்ட மன்னாதிமன்னன் இவை போதாதா அருண்மொழிவர்மனை அனைவருக்கும் பிடித்துப்போவதற்கு. ஆம்.இந்த அடிப்படைதகுதிகளை  தாண்டி பல குண இயல்புகளை கல்கி தன் நாவலினூடு சொல்லிச்செல்கிறார்.உண்மையைச்சொன்னால் பொன்னியின்செல்வன் நாவல் ஒரு தடவை மட்டும் தான்  முழுமையாக வாசித்திருக்கிறேன்.ஆனால் எனக்குப்பிடித்த காட்சிகள் கட்டங்களை திரும்பதிரும்ப வாசித்து மகிழ்வேன்.அவற்றை விலாவாரியாக  விளக்கிச்சொல்வற்கு தொடர்பதிவு தேவையென்பதால் இந்தப்பதிவில் பொன்னியின் செல்வரை மட்டும் என்னோடு அழைத்துவருகிறேன்.

கல்கி பொன்னியின் செல்வரை அறிமுகம் செய்யும் இடத்திலேயே "இந்த கதைக்கு பெயர் தந்த அரசிளங்குமாரரை தமிழகத்தின் சரித்திரத்திலேயே ஈடு இணைசொல்லமுடியாத வீரரை....."என்றவாறான வர்ணனை மூலமாக இராஜராஜ மன்னனை  எங்கள் உள்ளத்தில் செதுக்கிவிடுவார்.

வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் பொன்னியின் செல்வரை சந்திக்க இலங்கை வரும் காட்சியில் போர் நடந்த அனுராதபுரம் போன்ற இடங்களில் கூட  மக்கள் போர் நடந்ததற்கான சுவடுகள் எதுவுமே இல்லாது களிப்புடன் இருப்பதாக கதையில் காட்டியிருக்கிறார் கல்கி.இன்னொரு நாட்டுக்கு  எதிராகவோ இல்லை இன்னொரு தேசத்துக்கு எதிராகவோ போர் செய்யும்போது என்னென்ன தந்திரோபாயங்களை பாவித்து எதிரிகளை வீழ்த்தலாம் என்பதோடு மட்டும் நின்றுவிடுவதோடு  பொதுமக்கள் அப்பாவிகளை கணக்கில் எடுக்காத மன்னர்கள், தலைவர்கள் மத்தியில் மக்கள் நலனையும் கருத்தில் கொண்ட நீதி  நேர்மை கருணை  உள்ளம் கொண்ட ஒருவனாக பொன்னியின் செல்வர் தனித்துத்தெரிகிறார்.

இன்னொரு காட்சியில் எதிரிகளின் பிடியில் இருந்த சிம்மகிரி கோட்டைக்கு மாறுவேடத்தில் சென்று அங்குள்ள சித்திரங்களை ரசித்ததாக  நாவலில் வருவது மன்னனின் அளவுகடந்த கலை ஈடுபாட்டையே காட்டுகிறது.கலைகளை ரசிக்காத மனங்கள் தான் ஏது சில விதி  விலக்குகளைத்தவிர.இந்தக்காட்சி வெறும் கற்பனையாக இருந்தால் கூட இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலேயே புகழ்பெற்ற சிற்பவேலைப்பாடுகள்  கொண்ட தஞ்சைப்பெரியகோயில் நிர்மாணிக்க காரணமாக இருந்த மன்னன் கலாரசனை இல்லாதவனாக இருந்திருப்பானா என்ன.இயல்பிலேயே கலைகளை  இரசிக்கும் இயல்பு கொஞ்சம் அதிகமென்பதாலோ என்னவோ அவ்வாறு இரசனை உள்ளம் கொண்டவர்களிலும் பிரியம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்..:)

தந்தையார் மக்கள் என அனைவரினதும் ஏகோபித்த ஆதரவு இருந்தும் வயதில் மூத்த தன் சிறிய தந்தைக்கு முடிசூட்டுவதே முறை என்று தன்னுடைய  சிம்மாசனத்தையே தியாகம் செய்ய தயாராக இருந்த அந்த மன்னனுக்கு நிகராக யாரை ஒப்பிடலாம் சொல்லுங்கள்.எல்லோருடைய எதிர்ப்பு இருந்தாலும் அடுத்தவனை கொன்றுபோட்டாவது நானே பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் மனிதர்கள் மத்தியில் பொன்னியின் செல்வனின் பெருந்தன்மையைக்  கோடிட்டுக்காட்டி எங்களையும் மயக்கிவிட்டார் கல்கி.வெறுமனே தியாகம் செய்ய தயாராக இருந்தது  மட்டுமல்ல சொல்லியதுபோலவே அவரின் சிறிய  தந்தையின் ஆட்சிக்காலத்தின் பின்னரே அருண்மொழிவர்மன் முடிசூட்டியதாக சரித்திரம் சொல்கிறது.


இவை மட்டுமல்ல சிறந்த ஒரு பக்திமானாகவும் கல்கி பொன்னியின் செல்வரை காட்டியிருக்கிறார்.தஞ்சைப்பெரியகோவிலே அதற்கு மிகப்பெரிய  வரலாற்றுச்சான்று. இயல்பாகவே கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவள் என்பதால்  இராஜராஜ சோழன் சிறந்த பக்திமானாக கூட விளங்கியிருக்கிறான் என்பது அந்த  பாத்திரத்தின் மேல் எனக்கிருந்த காதலை அதிகரிக்கச்செய்வதாகவே இருக்கிறது.சிவபக்தனாக இருந்தால்கூட  ஏனைய மதத்தவர்களையும் குறிப்பாக பௌத்த மதத்தை பெரிதும் ஆதரித்ததாக கல்கி சொல்லிச்செல்கிறார்.

ஒரு இடத்தில் பொன்னியின் செல்வனை பற்றிக்குறிப்பிடும்போது அவரைப்பற்றி எதிர்க்கருத்து உள்ளவர்கள் கூட அவர் முகத்தை பார்க்கும்போது  எதிர்க்கும் தைரியத்தை இழந்துவிடுவதாகச்சொல்கின்ற கல்கியின் வர்ணனை எனக்குப்பிடித்த ஒன்று. இங்கே நான் தவறவிட்ட சில விடயங்கள் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.ஞாபகத்தில் வந்த விடயங்களை மட்டும் பதிவில் உள்ள்டக்கியிருக்கிறேன்.


இத்தனை அழகு,ஆற்றல் குணாதிசயங்கள் நிரம்பிய பொன்னியின் செல்வர் என் மனதை கவர்ந்ததில் அதிசயம் ஏதும் இருக்கிறதா சொல்லுங்கள்..இந்த நாவலை வாசிக்கும்போதெல்லாம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச்சென்று வாழ்ந்துபார்க்கத்தோன்றும்.அந்த மன்னனின் காலத்தில் நாட்டின் அடிமட்ட குடிமகனாகவோ குடிமகளாகவோ தன்னிலும் பிறந்திருந்திருக்க மாட்டேனோ என்ற ஆதங்கம் எனக்குள் எழாமல் இல்லை.


ஏற்கனவே இராஜராஜ மன்னனின் சரித்திரத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து படமாக எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.இப்போது இயக்குனர் மணிரத்னம் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக எங்கேயோ வாசித்த ஞாபகம்.இருந்தாலும் பொன்னியின் செல்வன் நாவலின் இரசிகை என்ற அடிப்படையில் எனது கருத்து நாவலை படமாக எடுப்பதை தவிர்ப்பதே நல்லது என்பது தான் .நாவலை வாசிக்கும்போது எங்கள் இரசனைக்கு ஏற்றவகையில் ஒரு கதாபாத்திரத்தை தோற்றத்தை கற்பனை செய்து வைத்திருப்போம்.அதுவே படத்தில் கொஞ்சம் முரணாகும்போது அதனை முழுமையாக ரசிக்கமுடியாமல் போய்விடும்.அத்தோடு கதையில் வரும் வர்ணனைகள் கொண்ட இட காட்சி அமைப்பை படத்தில் கொண்டுவரமுடியுமா என்றால் சந்தேகம் தான்.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தான்.