Wednesday, February 24, 2010

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?

இயந்திரத்தனமான இன்றைய உலகில் ஓடி ஓடி பணம் சம்பாதிக்கும் அவதியில் எங்கள் நிம்மதி, மகிழ்ச்சி என்பவற்றை பெரும்பாலும் இழந்து தவிக்கிறோம். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வோசிங்டனின் மனைவி மார்த்தா வோசிங்டன், எங்கள் மகிழ்ச்சி நாங்கள் இருக்கும் சூழ்நிலையில் மிகவும் குறைந்த அளவிலேயே தங்கியிருப்பதாகவும் ஒவ்வொரு விடயத்தையும் நாம் எவ்வாறு எடுத்துக்கொள்கிறோம் என்பதில் அதாவது எங்கள் பார்வையில் தான் பெருமளவில் தங்கியிருப்பதாகவும் கூறிய பொன்மொழியொன்றை இணையத்தளத்தில் வாசித்த ஞாபகம்.என் அனுபவத்தில் கூட அவர் கூறியது மிகவும் உண்மை என்று அறிந்திருக்கிறேன்.அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள் நாங்கள் எங்களை வெற்றியாளர் என்று நினைத்தால் உண்மையிலேயே வெற்றியாளர் ஆகின்றோம் என்று.அதற்காக நினைத்தால் மட்டும் அப்படி ஆகிவிடமுடியுமா என்று நீங்கள் என்னிடம் கேட்கக்கூடும்.யார் அவ்வாறு திடமாக நம்புகிறார்கள்.உண்மையான ஊக்கம்,அர்ப்பணிப்பு,விடாமுயற்சி,தன்னம்பிக்கை உள்ள ஒருவனே அவ்வாறான ஒரு திட நம்பிக்கையைக்கொண்டிருப்பான். மற்றவர்கள் நான் இதில் வெற்றி பெறுவேனோ இல்லை தோற்றுவிடுவேனோ என்று சந்தேகத்துடனயே இருப்பார்கள்.வெற்றி மட்டுமல்ல எங்கள் மகிழ்ச்சியும் கூட எங்கள் எண்ணங்களில் தான் தங்கியிருக்கிறது.பிரச்சினையில் இருக்கும்போது கூட நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக எங்கள் மனது நம்பினால் உண்மையிலேயே மகிழ்ச்சியுள்ளவர்களாக மாறுவோம்.பிரச்சினைகளை யோசித்து எதுவும் நடக்கப்போவதில்லை என்ற சந்தர்ப்பத்தில் எதற்காக சோகத்தை வரவழைத்து சுயபச்சாதாபத்தையோ இல்லை மற்றையவர்களின் கழிவிரக்கத்தையோ தேடவேண்டும்.நண்பர் புல்லட்டின் பதிவு ஒன்றில் கூட இது சம்பந்தமாக ஒரு சம்பவத்திற்கான எங்கள் மனதின் மறுதாக்கம் பற்றி ஆராய்ந்திருந்தார்.


 "யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்........"என்ற பாடல் வரி தான் இங்கே என் ஞாபகத்துக்கு வருகிறது.எம்மில் பெரும்பாலோனோர் கொண்டிருக்கக்கூடிய தவறான எண்ணம் என்னவென்றால் கவலைகள்,கஸ்டங்கள் வரும்போது ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று ஏங்கித்தவிப்பதுதான்.தெருவில் படுத்துறங்கும் பிச்சைக்காரன் தொடக்கம் பங்களாவில் பஞ்சணையில் படுத்துறங்கும் கோடீசுவரன் வரைக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஏதோவொரு வகையில் வாழ்க்கையில் போராட்டம் இருக்கத்தான் செய்யும்.இதை நாம் முதலில் புரிந்துகொண்டாலே எமக்குள்ள கவலையில் பாதி குறைந்து விடும்.

எங்கள் வாழ்க்கையில் ஏதாவதொரு பிரச்சினையை எதிர்கொள்ள நேரும்போது "இவ்வாறு நடந்துவிட்டதே " என்று ஏங்கித்தவித்தே எங்கள் ஆயுளில் பாதியைக்கழித்துவிடுகிறோம்.நடந்ததை நினைத்து ஏங்குவதால் இனி நடக்கப்போகும் எதையும் எம்மால் மாற்றிவிடமுடியாது.எனவே எதற்காக இந்த ஏக்கம் தவிப்பு என்று நம்மை நாமே வருத்திக்கொள்ளவேண்டும்(இங்கு நான் சொல்வது பொதுவான விடயங்களை மட்டுமே.நெருங்கிய உறவொன்றின் பிரிவு,இழப்பு போன்ற உணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களை இந்த வகுப்புக்குள் அடக்கிவிடமுடியாது....அந்தக்காயங்களை ஆற்றுவதற்கு காலம் தான் சிறந்த மருந்து).நாவல் ஆசிரியர் ரமணி சந்திரன் அவர்களின் எழுத்துக்களில் கதைகளில் எனக்கு பிடித்த முக்கியமான விடயமே அவர் கதைகளில் வரும் எந்த கஸ்டம் வரும்போதும் சலித்துவிடாமல் வாழ்க்கையோடு போராடிவெற்றிபெறும் அவரின் நாயகிகள் தான்.முன்பெல்லாம் நான் கூட இதே தவறைத்தான் செய்துவந்திருக்கிறேன்.சிறிய கஸ்டம் வரும்போதும் மனமொடிந்து அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் சோர்ந்து உட்கார்ந்துவிடுவேன்.ஆனால் அனுபவப்பாடங்கள் மூலமாக என்னை நானே வெகுவாக மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு பலவாறு சொன்னாலும் நடைமுறைப்படுத்துவதென்பது அவ்வளவு இலகுவானதன்று.கஸ்டங்கள் கவலைகள் வரும்போது மனம் சோர்ந்துபோய்விடுவது தவிர்க்கமுடியாத ஒன்றே.எனவே முழுக்க முழுக்க அவற்றை மறந்துவிடமுடியாவிட்டாலும் குறைந்தபட்சம் கவலை என்னும் கறையான் எங்கள் மனப்புத்தகத்தை அரித்துவிடாமல் பார்க்கவேண்டியது எங்கள் பொறுப்பாகும்.அதற்காக பிரச்சினைகள் வரும்போது யாரையும் ஓடியொளியும்படி நான் சொல்லவில்லை.தைரியமாக எந்த சவாலையும் எதிர்கொள்ளுங்கள்.தீர்க்கக்கூடிய வழிவகைகளை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்துங்கள்.அதற்கு அப்பால் அவற்றையெல்லாம் மனதில்போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். 




இவ்வளவு நேரமும் பிரச்சினைகளில் இருந்து அவற்றின் தாக்கங்களிலிருந்து எவ்வாறு விலகி இருக்கலாம் என்று பார்த்தோம்.இத்தனையையும் தாண்டி எங்கள் மனதைக்காயப்படுத்தக்கூடிய சம்பவங்கள் நிகழக்கூடும்.அவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்ப்போம்.

ஓய்வாக இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்று சொல்வார்கள்.ஆகவே மனதுக்கு சிறிதும் ஓய்வு கொடுக்காது எந்த நேரமும் ஏதாவது உங்களுக்குப்பிடித்த வேலையைச்செய்தவண்ணம் இருங்கள்.எழுத்துத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் நிறைய வாசிக்கலாம்.அது மட்டுமல்ல குடில்(blog)போன்றவற்றை அமைத்து உங்கள் உணர்வுகளை படைப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.மனதுக்கு ஆறுதல் தரக்கூடிய விடயங்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று இருக்கக்கூடும்.நானென்றால் மனதுக்குப்பிடித்த பாடல்களைக்கேட்பேன்.சில நேரங்களில் வாய்விட்டு பாடுவதும் உண்டு.(இந்த விசப்பரீட்சையை உங்கள் வீட்டில் செய்யமுன் அதற்குரிய சூழல் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.ஏனென்றால் ஒரு கிலோ பஞ்சு வாங்கி வீட்டுக்காரருக்கு கொடுத்து கழுதைகள் உள்ளே புகாத வண்ணம் குளியலறைக்கதவு,யன்னல்கள் பலமாக இருக்கின்றன என்பவற்றையெல்லாம் பரிசோதித்துவிட்டே நான் அதை செய்வேன்...ஹி..ஹி..ஹி... ).சில நேரங்களில் உணர்வுகளை கவிதையாக (கவிதை என்ற பெயரில் வரும் கிறுக்கல்கள் தான்) வடிப்பேன்....இப்போதெல்லாம் ஓய்வாக இருக்கும் நேரங்களில் என்னுடைய நினைப்பு முழுவதும் என்னுடைய குடிலில் அடுத்து என்ன எழுதலாம் என்பது பற்றி தான்..:) சிலருக்கு சித்திரம் வரைவதில் ஆர்வம் இருக்கக்கூடும்.இன்னும் சிலருக்கு இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் இருக்கும்.எதுவாயிருந்தாலும் உங்கள் மனதுக்கு திருப்தி சந்தோசம் அளிக்கக்கூடிய விடயங்களை தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.




அடுத்ததாக உங்கள் பிரச்சினைகளை மனம்விட்டு யாரிடமாவது சொல்லுங்கள்.ஆனால் கேட்பவர் உங்கள் உணர்வுகளைப்புரிந்துகொள்ளவில்லை என்றால் அதனால் வரும் காயத்தை ஆற்றுவதற்கு எந்த மருந்தும் இல்லை.எனவே அதற்கு ஏற்றவாறு உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்களை உறவுகளை தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்றாகும்.இன்று உலகில் தற்கொலைசெய்யும் பலரின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் தீவிரமான பிரச்சினையைக்கொண்டிருந்திருப்பார்கள் என்பதைவிட தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு பேசமுடியாதவர்களாகவே பெரும்பாலும் இருந்திருப்பார்கள்.எனவே இந்தச்சந்தர்ப்பத்தில் உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளையும் முன்வைக்க விரும்புகிறேன்.உங்கள் உறவினர்கள்,நண்பர்கள் ஏன் தெரியாதவர்களாக இருந்தால் கூட தங்கள் பிரச்சினைகளை மனம்திறந்து உங்களிடம் பேசவரும்போது அவர்களுடைய பிரச்சினைகள் தவிப்புக்களை காதுகொடுத்து கேளுங்கள்.குறைந்தபட்சம் கேட்கிறமாதிரி நடிக்கவாவது செய்யுங்கள்.(அவர்கள் அறியாவண்ணம்).நீங்கள் அவ்வாறு செவிமடுப்பதாக அவர்கள் நம்பும்போது அவர்களின் மனதில் உள்ள பாரம் பாதியாகக்குறைந்துவிடும்.

எங்கள் சந்தோசத்தை கெடுக்கும் இன்னொரு முக்கியமான எதிரி ஒப்பீடு.நண்பர்களோடு ,கூட வேலைபார்க்கின்றவர்களோடு எங்களை ஒப்பீடு செய்வது.இறைவனின் படைப்பில் நாங்கள் எல்லோருமே தனித்துவமானவர்கள்.எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்குரிய கடமையை சரிவரச்செய்யுங்கள்.எங்களோடு நாங்களே போட்டிபோட்டு ஒவ்வொரு நாளும் எங்களை நாங்கள் வளர்த்துக்கொள்ளலாம்.ஆரோக்கியமான வளர்ச்சிக்காக மற்றவர்களோடு போட்டிபோடலாம்.அதில் பிழையில்லை.ஆனால் மற்றவர்களின் வளர்ச்சியைபார்த்து மனம் வெந்துபோவதற்காக அல்ல.பெரியவர்கள் சொல்வார்கள் "உனக்கு கீழ் இருக்கும் கோடி நினைத்து நிம்மதி தேடு "என்று.எங்களை விட உயரத்தில் இருப்பவர்களை பார்த்து மனம் நோவதை விட்டு எங்களை விடவும் குறைந்த மட்டத்தில் இருப்பவர்களை நினைத்துப்பார்த்து நிம்மதி அடையவேண்டும் என்று.என்னதான் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இதை கடைப்பிடிப்பது என்பது கொஞ்சம் கடினமான விடயம் தான்.அதற்குரிய மனப்பக்குவம் இலகுவில் வந்துவிடாது.

இறைவனின் படைப்புக்களிலேயே உன்னதமானது மனிதப்பிறவி.எம்மில் பலர் அந்த மகத்துவத்தை புரியாமலே இருக்கிறோம்.பிரச்சினைகள் சோதனைகள் வரும்போது தைரியமாக அவற்றை எதிர்கொள்ளுங்கள்.அந்த சவாலை நீங்கள் சமாளித்து வெற்றிகொள்ளும்போது எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மகிழ்ச்சி திருப்தி உங்களுக்குள் ஏற்படுவதை உணர்வீர்கள்.என் அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன்.ஆம்......

"பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை".......இந்தப்பாடல் வரிகளை எப்போதும் உங்கள் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

இத்தனை விளக்கங்களுடன் கூறிய எல்லா கருத்துக்களையும் கவிஞர் இந்தப்பாடலில் அழகாக அடக்கித்தந்திருக்கிறார்.

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே அங்குமிங்கும் கொட்டிக்கிடக்கு
கண்ணிரண்டு செவியும் திறந்து வைத்தால் சுத்தி சுத்தி இன்பமிருக்கு
புயல் வந்து மையம் கொண்டாலும் பூவின் இதழில் புன்னகை இருக்கு
உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது..........

இருட்டைக்கண்டு மலைப்பது மடமை
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை
ஆதவன் செய்யும் வேலை தன்னை
அகலும் செய்துவிடும்

மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி அழுவது கிடையாது
உன் நெஞ்சிலே சாந்தி கொள் உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது
மனித ஜாதி ஒன்று தான் சிரிக்கத்தெரிந்தது.....

இவ்வாறாகத்தொடர்ந்து செல்கிறது பாடல்.இந்த அற்புதமான வரிகளுக்கு சொந்தக்காரர் யார் என்று நினைக்கிறீர்கள்...அவர் வேறு யாருமல்ல.....
எங்கள் வைரவரிக்கவிஞர் கவிப்பேரரசுவே தான்......

Thursday, February 18, 2010

எனது கானங்கள்

சில பாடல்கள் கேட்கும்போது காதில் தேன்பாயும்...அத்தோடு சரி...சில பாடல்கள் கேட்கும்போது மனதை வருடிச்செல்லும்...ஒன்று இரண்டு பாடல்கள் தான் உயிரை தொட்டு செல்லும் தன்மையுடையன...அவ்வாறு உயிரைத்தொட்டுச்செல்லும் பாடல்களைத்தருவதில் என் பட்டியலில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் இசைஞானிதான்.இந்தப்பாடலும் அவ்வாறு உயிரைத்தொட்டுச்செல்லும் பாடல்களில் ஒன்று...

இந்தப்பாடல் இடம்பெற்ற திரைப்படத்தை நான் பார்த்ததில்லை.பாடல் எச்சந்தர்ப்பத்தில் இடம்பெற்றது என்பதும் எனக்கு தெரியவில்லை...ஆனாலும் அது என்னவோ தெரியவில்லை..."ஓ..ஜனனி....என் ஸ்வரம் நீ "என்ற அந்த ஒற்றை வரியைக்கேட்டதுமே என் உயிர் உருகிக்கரைந்துவிடும்.... பாடல் இசைக்கத்தொடங்கும்போது கூட்டை விட்டு வெளியேறும் உயிர் பாடல் ஒலித்து ஓயும் வரை திரும்பிவர மறுத்துவிடும்.காரணம் இசைஞானியின் உயிரை உருக்கும் மெட்டு என்றே நான் கருதுகிறேன்......வாலிபக்கவிஞர் வாலியின் அர்த்தம் பொதிந்த ஆழமான வரிகள் இசைஞானிக்கு அடியெடுத்துக்கொடுக்கிறது.

"மாறும் எந்நாளும் காட்சிகள் மாறும் அப்போது பாதைகள் கேளடி.....பாதை இல்லாத யாத்திரை மேகம் இல்லாத வான்மழை ஏதடி..."என்று நாயகன் கேள்வியோடு முடிக்கும்போது இல்லை என்று பதில் சொல்வது போல் இசைஞானி ஒரு புல்லாங்குழல் இசை(எனக்கு தெரிந்தவரை அது புல்லாங்குழல் தான்..:)) கொடுத்திருப்பார் பாருங்கள்....அற்புதமாக இருக்கும்...
எஸ்.பி.பி.இன் குரலை ஒத்த குரலுக்குரியவர் பாடகர் மனோ.எஸ்.பி.பி பாடிய எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது குறைந்த அளவிலான பாடல்களைப்பாடியிருந்தாலும் அத்தனையும் மனதை விட்டு நீங்காத பாடல்கள் என்பதற்கு இந்தப்பாடலே பெரிய சான்று...
சோகமான பாடல்களில் ஒரு சுகம் இருக்கும் என்று சொல்வார்கள்.இந்தப்பாடலும் அப்படித்தான்.....



இசைஞானிக்கு அடுத்ததாக நான் வெகுவாக இரசிப்பது தேனிசைத்தென்றல் மற்றும் எஸ்.ஏ.ராஜ்குமார் அவர்களின் இசையை தான்..."உன்னைக்கொடு என்னைத்தருவேன்"படத்துக்காக இடம்பெற்ற இப்பாடலையும் அதன் அருமையான இசைக்காகவும் மனதைக்கவரும் எளிமையான பாடல் வரிகளுக்காகவும் நான் வெகுவாக இரசித்திருக்கிறேன்.....

பொதுவாக எந்த ஆணுமே தனக்கு வரப்போகின்றவள் தனக்கு இரண்டாவது அன்னையாக இருக்கவேண்டுமென்றே எதிர்பார்ப்பான்.பெண்களும் ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல.தனக்கு கணவனாக வரப்போகின்றவனை தனது பிள்ளையாக தனது தாயாக என்று ஒவ்வொரு அவதாரத்தில் பார்க்கவே விரும்புவாள்.அந்த உணர்வு வெளிப்பாடு இந்தப்பாடலிலும் இருக்கிறது...

"காற்றில் தூசும் வந்து உந்தன் கண்ணில் பட்டால் பூங்காற்றை நான் கூண்டில் ஏற்றுவேன்....
வெயில் காலம் வந்தால் கண்ணின் இமைகள் இரண்டை உனக்காக குடையாக மாற்றுவேன்..."

இந்த வரிகளில் கவிஞரின் கற்பனைக்குதிரை எங்கள் உள்ளத்தையும் சேர்த்து இழுத்துச்சென்றுவிடுகிறது...

பாடலின் ஒவ்வொரு வரிகளும் எனக்கு பிடித்தமானவையே..அதிலும் "என்னைக்கிள்ள எனக்கே தான் சம்மதங்கள் தரமாட்டாய்" என்ற வரியை சிறு சிணுங்கலுடன்(சின்ன சிரிப்புடன்) சின்னக்குயில் பாடி முடிப்பது மிகவும் இரசிக்கும்படியாக இருக்கிறது...

பாடலுக்கு மகுடம் வைப்பதுபோல உன்னிகிருஷ்ணன்,சித்ராவின் ஜோடிக்குரல்கள்.....கேட்பவர்களைக்கவர்ந்திழுப்பதில்
எந்த அதிசயமும் இல்லை.




இசைஞானியின் அருமையான வார்ப்புக்களில் இந்தப்பாடலும் ஒன்று....காதல்,வெறுப்பு,தவிப்பு,சோகம் போன்ற எல்லா உணர்வுகளையும் கடந்து என்னை மறந்து எப்போதுமே நான் இரசிக்கும் பாடல் இது..இயற்கையைப்பற்றி நிறையப்பாடல்கள் வந்திருந்தாலும் இந்தபாடலில் எனக்கு எப்போதுமே ஒரு தனிப்பிரியம் உண்டு.கவிஞரின் கற்பனை வரிகள் ஒவ்வொன்றும் மிகவும் இரசிக்கும்படியாகவே இருக்கிறது...இருந்தாலும் என்னை கொள்ளை கொண்ட வரிகள் இவையே....

"அற்புதம் என்ன உரைப்பேன்
இங்கே வர எப்பவும் என்னை மறப்பேன்
கற்பனை கொட்டி குவிப்பேன்
இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுப்பேன்..."

பாடல் முழுவதும் வரும் புல்லாங்குழல் இசை,கேட்கும்போது காதில் பாலும் தேனும் கலந்து பாய்கிறது.பாடலைப்பற்றி நான் குறிப்பிடாத குறிப்பிட அவசியமில்லாத விடயம் ஒன்று இங்கே இருக்கிறது..ஆம்..மணி மகுடம் வைத்தது போல வரும் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் குரல் தான் அது..

TamilWire.com - Vanna Vanna Pookal - Ila Nenje Vaa .mp3
Found at bee mp3 search engine
Tamilish

தமிழும் நானும்

சிறு வயதிலிருந்தே வாசிப்பு எனக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாகவே இருந்துவருகிறது.அதே போல் நிறைய எழுதவேண்டும் எனது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று கொள்ளை ஆசை......பாடசாலையில் படிக்கும் காலத்தில் போட்டிகளில் பங்குபற்றி அந்த தாகத்தை ஓரளவு தீர்த்திருக்கிறேன்.பல்கலைக்கு வந்தபின்னர் அவ்வாறான வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை.வாய்ப்பு கிட்டவில்லை என்பதை விட கிடைத்த வாய்ப்புக்களை நான் சரிவரப்பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.

எமது ஊரில் இருக்கும்போது எங்கள் மொழியின் அருமையை அதன் மேல் எங்களுக்கு உள்ள பற்றை நாங்கள் புரிந்துகொள்வதில்லை.(எனது அனுபவத்தை சொல்கிறேன்.உங்களுக்கு எப்படியோ தெரியாது).மாறாக பிற மொழி ஆதிக்கம் உள்ள இடத்துக்கு செல்லும்போது தான் அந்த அருமை எங்களுக்கு புரியும்.எமது மொழியில் யாராவது கதைக்கும்போது காதில் தேன் பாய்வது போல் இருக்கும்...இதை இலங்கையில் இருக்கும் நான் சொல்வதை விட வெளிநாடுகளில் குறிப்பாக எம்மவர் அரிதாக வாழும் இடங்களில் வசிப்பவர்கள் அதிகமாகவே உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்."சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா...எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா?இந்த தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா...".என்று சும்மாவா சொன்னார்கள்.

நேரம் கிடைக்கும்பொழுதில் எல்லாம் கூகிள் தேடலில் சென்று தமிழ் இணையத்தளங்களுக்கு சென்று பார்ப்பேன்....ஆயுள் முழுவதும் .வாசித்தாலும் இணையத்தில் உள்ள அத்தனை தமிழ் ஆக்கங்களையும் வாசித்து முடித்து விட முடியுமா என்று யோசித்து சலித்தே விட்டேன்.இணையம்,நாகரீகம் என்று உலகத்தின் அசுர வளர்ச்சியைக்கண்டு எங்கே எங்கள் தமிழ் அழிந்து விடுமோ என்று கலங்கியவர்களும் உண்டு தான்."தமிழ் இனி மெல்லச்சாகும்" என்ற கூற்று இரு பொருள்படும்.ஒன்று தமிழ் மெல்ல சாகும் மற்றையது தமிழ் மெல்ல அச்சாகும்....ஆம்..இன்றைய இணையத்தில் தமிழின் பயன்பாட்டை எடுத்து நோக்கும்போது எங்கள் தமிழ் அச்சாகிவிட்டது வெளிப்படை உண்மை.

இந்தப்பெரிய உலகத்தில் தமிழ் பேசும் அத்தனை நெஞ்சங்களுடனும் எனது உணர்வுகளைப்பகிர்ந்துகொள்ள முடியாவிட்டாலும் எமக்கென்று ஒரு சின்னக்கூட்டில் என் நண்பர்களோடு என் படைப்புக்களை பகிர்ந்துகொள்வதில் அளவில்லா ஆனந்தம் அடைகிறேன்.......

எனது டயரி (diary) குறிப்புக்கள் -எவன் மனிதன்????

 எமது அன்றாட வாழ்வில் எத்தனையோ விதமான மனிதர்களை நாம் சந்திக்கின்றோம்.என் வாழ்விலும் அவ்வாறு நான் சந்தித்த என்னைப்பாதித்த
மனிதர்கள்,சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.தினமும் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் டயரியில் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை என்றாலும் சில சம்பவங்கள் மனதின் பக்கங்களில் ஆழமாகப்பதிந்துவிடுவதால் அவற்றை என் ஞாபகத்திலிருந்து சுலபமாக அழிக்க முடிவதில்லை.இவற்றை வாசிக்கும்போது உலகம் போகின்ற போக்கில் இதெல்லாம் ஒரு விடயமா என்று நீங்கள் எண்ணக்கூடும்.என்னைப்பொறுத்
தவரையில் ஒருவன் எவ்வளவு தான் பணம் புகழ் பதவி அந்தஸ்து பெற்றிருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட
சமூகத்துக்கு மற்றைய மனிதர்களுக்கு ஒரு நல்ல மனிதனாக இருப்பதையே மிகப்பெரிய கௌரவமாகக்கருதுகிறேன்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன் 155 பஸ்ஸில் பயணம் செய்யும் ஒரு நாள்.நான் பஸ்ஸில் ஏறி மூன்றோ நான்கோ தரிப்பிடங்கள் கழிந்த நிலையில் ஒரு தரிப்பிடத்தில் இளம்பெண்ணொருவர் கைக்குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினார். சாதாரணமாக எனக்கென்றால் கையில் கொஞ்சம் பாரம் கூடிய பை இருந்தாலே ஏறுவதும் ஏறியபின் இருக்கை கிடைக்கவில்லை என்றால் அதை வைத்துக்கொண்டு அல்லாடுவதுமாக என் பாடு பெரும்திண்டாட்டம் தான்.அப்படியிருக்கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அந்த பெண்ணுக்கு எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும் என்று என்னால் உணரக்கூடியதாக இருந்தது.நான் சொல்ல வந்த விடயம் என்னவென்றால் யாரும் எழுந்து அந்த பெண்ணுக்கு இடம்கொடுக்க முன்வரவில்லை என்பதுதான்.பொதுவாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் நடத்துனர் வந்து சத்தம் போட்டு முன்னுக்கு இருப்பவரை காலி செய்யவைத்து அந்த இடத்தைகொடுப்பதுண்டு.அன்றைக்கென்று
அவரையும் காணவில்லை.இத்தனைக்கும் நாம் வருத்தப்பட வேண்டிய வெட்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால் 155 பஸ்சில் பயணிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் எம்மவர்கள்.”யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன” என்ற எண்ணமா அல்லது “யாராவது எழுந்து இடம்கொடுக்கட்டுமே” என்ற தாராள மனப்பான்மையா என்று எனக்கு விளங்கவேயில்லை.இந்த இடத்தில் நான் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்..இதே சம்பவம் 100 பஸ்சிலோ அல்லது 101 இலோ நடந்திருந்தால் குறைந்தது ஒருத்தராவது எழுந்து இடம் கொடுத்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. 6 வருட கொழும்பு வாழ்க்கையில் எமது சகோதர இனத்தவரிடமிருந்து கற்றுக்கொண்ட நல்ல இயல்புகளில் இதுவும் ஒன்று.எம்மவர்களை குறைத்துச்சொல்லவேண்டும் என்று எனக்கொன்றும் ஆசையில்லை மாறாக வருத்தம் தான். ஆனால் உண்மை என்று ஒன்று இருக்கிறதே. அவர்களில் அவ்வாறான நல்ல பண்பு கொண்டவர்கள் 100 இற்கு 60 என்றால் எம்மில் 100 இற்கு 20 மட்டுமே என்பது எனது அனுபவக்கணிப்பு.

இவ்வளவும் சொல்கிறாயே நீ எழுந்து இடம் கொடுத்திருக்கலாமே என்று நீங்கள் கேட்பது என் காதிலும் விழுகிறது.அன்று நான் அதைச்செய்யாவிட்டால் இன்று உங்கள் முன் இதை சொல்வதற்கேஅருகதையில்லாதவளா
இருந்திருப்பேன்.அன்றைக்கு நான் அமர்ந்திருந்த இருக்கை பஸ்சின் வாசல் பக்கத்துக்கு எதிர்ப்பக்கமுள்ள வரிசையில் இரண்டாவது நிரையில் யன்னல் கரை இருக்கை.அன்றைக்கென்று பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருக்கைகளையும் சுற்றி நிறைய பேர் நின்றுகொண்டிருந்தார்கள்.அந்த மூலையில் இருந்து பெரும் சிரமப்பட்டு வெளியேறி அந்த இடத்தை கொடுக்கவேண்டியிருந்தது.இவ்வளவும் நடக்கும் வரை அந்த பெண் குழந்தையுடன் நிச்சயமாக அல்லாடி இருப்பார். இதை பார்க்கும்போது ஏன் ஒருத்தருக்கு கூட அந்த இரக்கம் ஏற்படவில்லை என்று என்னால் விளங்கமுடியவில்லை.

மற்றவர்களுக்கு பணம் பொருள் கொடுத்துதான் உதவிசெய்யவேண்டும் என்று இல்லை.எம்மால் முடிந்தவரை இவ்வாறான சிறிய உதவி தன்னிலும் செய்யமுடியுமாயின் அது கூட பெரிய விடயம்தான்.அதில் கிடைக்கின்ற சந்தோசமே தனி. பெரும்பாலான பஸ்களில் பார்த்தால் இந்த வாசகம் எழுதப்பட்டிருக்கும்.
"Please do give the seat to some one who needs more than you do."
எம்மில் எத்தனை பேர் அதை வாசித்திருக்கிறோம்......எத்தனை பேர் அதை பின்பற்றுகிறோம்......

இது போன்ற வேறு சில சம்பவங்களையும் இந்த குறிப்பில் உள்ளடக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.எழுதத்தொடங்கியபின் அது தொடர்கதையாகவே நீண்டு செல்வதால் மிகுதியுடன் அடுத்தகுறிப்பில் உங்களைச்சந்திக்கலாம் என்று எண்ணுகிறேன்.:)

இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது இந்தப்பாடல் தான் என் ஞாபகத்துக்கு வருகிறது...."மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்..................."


கூப்பிடும் தூரத்தில் வாழ்க்கை - வைரமுத்து கவிதை

சின்ன வயதில் வானொலியில் இந்த கவிதையை கேட்ட ஞாபகம்....நீண்ட காலத்தின் பின்னர் இணையத்தில் இதனைத்தேடிப்பிடித்து உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.....வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயன்று அதிலும் தோற்றிருக்கும் ஒரு இளைஞனுக்கு கூறும் அறிவுரையாக அமைந்த கவிதை இது..வைரமுத்துவின் வைரவரிகளில்...........


தற்கொலை புரியப்போய்
மரணம் மறுதலிக்க
வாழ்க்கைக்குள் மீண்டும்
துப்பப்பட்டவனே

சொல்

பேய்களின் விருந்துமண்டபமாய்
மனசு உனக்கு மாறியதெப்படி?

மூளையில் எப்போது
முள்முளைத்து உனக்கு?

மரணத்தின் கர்ப்பப்பையில்
கலைந்து போனவனே

நீ
செத்திருந்தால்
ஊர் அழுதிருக்கும்

சாகவில்லை
நீயே அழுகிறாய்

கைக்குட்டை இந்தா
கண்களைத் துடை

உயிரின் உன்னதம்
தெரியுமா உனக்கு?

மனிதராசியின்
மகத்துவம் தெரியுமா?

உயிர் என்பது
ஒருதுளி விந்தின்
பிரயாணம் இல்லையப்பா

அது
பிரபஞ்சத்தின் சுருக்கம்

உன்னை அழித்தால்
பிரபஞ்சத்தின்
பிரதியை அழிக்கிறாய்

பிரபஞ்சத்தை அழிக்க
உனக்கேதப்பா உரிமை?

வாழ்க்கை உன்னை
பூமிக்கு அனுப்பியபோது

கைந்நிறையப் பூக்கள்

இப்போதென்ன...
பைந்நிறைய
சவப்பெட்டி ஆணிகள்...?


வாழ்க்கையோடு
உடன்பாடு

மனிதரோடுதான்
முரண்பாடா?

மனிதரைக் கழித்தாலும்
பூமி மிச்சப்படுமடா பாவி

படித்ததில் பிடித்தது- வைரமுத்துவின் வைரவரிகள்

பூக்களும் காயம் செய்யும்

போடி போடி கல்நெஞ்சி!

மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி ந

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்

இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகித

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.