Monday, May 31, 2010

அன்புள்ள ராஜாவுக்கு

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் ஒரு பதிவை என் வலைப்பக்கத்தில் இட்டேன்.அதனால் அடுத்த பதிவை கொஞ்சம் இளைப்பாறிவிட்டு  எழுதலாமே என்று யோசித்தபோது தான் என் மனக்கண்ணில் வந்து நின்றது ஜுன் 2.ஆம்..அன்று என்ன விசேசம் அப்படி??ஏதாவது நினைவு தினமா?மகளிர் தினம்..குழந்தைகள் தினம்..ஆண்கள் தினம்(;))....இல்லை.எங்கள் இசை ஜாம்பவான்,இசை ராஜா, இசை ஞானி,பண்ணைபுரம் தந்த இசைக்குயில் இளையராஜா இந்த பூமியில் உதித்த தினம்.


ஆரம்ப காலத்தில் திரைப்படங்கள் இசையமைப்பாளர் பற்றிய அறிவு இல்லாத சின்ன வயதிலிருந்தே பாடல்கள் கேட்பதில் பாடுவதில் எனக்கு தனிப்பிரியம் இருந்தது.அதிலேயும் ஒரு குறிப்பிட்ட சில பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒரு சிலிர்ப்பு எனக்குள் இருக்கும். காலப்போக்கில் தான் புரிந்துகொண்டேன் அந்தப்பாடல்கள் எல்லாமே இசைஞானியுடையது என்று.மனது பாரமாக இருக்கும் சில நேரங்களில் ஆயிரம் சொந்தங்கள் அருகில் இருந்து தரமுடியாத ஆறுதலை இசைஞானியின் சில பாடல்கள் தந்திருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு மேடை இசை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் இளையராஜா பேசும்போது "உங்கள் இசைக்காக உயிரை கூட தர தயாராக இருக்கிறோம் என்று சில ரசிகர்கள் தொடர்புகொண்டு சொன்னதாக அதில் குறிப்பிட்டிருந்தார்."..ஆம்..அவ்வாறு உங்களை தொடர்புகொண்டு சொன்னவர்கள் ஒரு சிலர் மட்டுமே.ஆனால் உலகமெங்குமே இன்னும் என்னைப்போல எத்தனையோ ரசிகர்கள் உங்கள் இசையை உயிராக நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்.ஒரே ஒரு மனவருத்தம் இருக்கிறது.முன்பு போல் தமிழ் திரையுலகில் உங்கள் பாடல்களை அதிகம் காணமுடியவில்லை.இயக்குனர்கள் உங்கள் இசையை பயன்படுத்த முன்வரவில்லை என்றால் இழப்பு உங்களுக்கல்ல..தமிழ் திரையுலகுக்கும் என்போன்ற ரசிகர்களுக்கும் தான்...


என்றும் வாழும் இசை முத்துக்கள் தந்த எங்கள் ராகதேவன் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு  இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் எங்கள் இசை மன்னனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

எங்கள் இசைஞானிக்கு என்னுடைய கிறுக்கல் ஒன்றை அன்புப்பரிசாக வழங்கலாம் என்று நினைக்கிறேன்.

அதிகாலை நேரமென்ன
அந்திசாயும் நேரமென்ன
எந்தன் உள்ளம் நாடும்
இன்னிசை நாதமது
உந்தன் இசை மெட்டன்றி
வேறேதும் உண்டோ

துள்ளிக்குதிக்கும் நேரங்களில்
துள்ளி வருவதும் உந்தன் இசை தான்
கண்கள் பனிக்கும் நேரங்களில்
உயிரோடு உருகுவதும்
உந்தன் இசை அன்றோ

அறியாத வயதில் கேட்ட
அன்னையின் தாலாட்டு
எந்தன் நினைவில் இல்லை
"ஓ..பாப்பா... லாலி"-என உருகும்
உந்தன் மெல்லிசை தாலாட்டில்
உறங்கிய நாட்கள் எத்தனையோ
 
ஆயிரம் மன்னர் வந்தாலும்-சோழகுல
ஆதவன் ராஜராஜன் அன்றோ-அது போல்
ஆயிரம் பேர் வந்தாலும்-எம்
இசை நாதன்-தமிழ்
இசை ராஜராஜன்-எங்கள்
இளையராஜனன்றோ...

சொல்லிக்கொண்டே போனால்
சொற்கடல் கூட
வற்றிவிடக்கூடும் தமிழில்
உன் பெருமை சொல்ல
ஒரு கோடி வார்த்தைகளை
ஒன்றாக திரட்டினாலும்
என்னால் முடியாதையா

தென்னவனே
இசை மன்னவனே-தமிழ்
இசை வல்லவனே-இசை வெள்ளமதில்
உயிர் கொன்றவனே-எம்
இராக தேவனே
நீ வாழ்க
உன் இசை வாழ்க
ஆண்டாண்டு காலம்
அழியாப்புகழ் கொண்டு வாழ்க

Thursday, May 27, 2010

புலம்பெயர் உறவுகளும் புதைந்திருக்கும் மன உணர்வுகளும்

எம் புலம்பெயர் உறவுகளின் மன உணர்வுகளை ஏக்கங்களை வெளிப்படுத்தும் பாடல் தொகுப்பாக எங்கள் மூத்த பதிவர் கானா பிரபா அண்ணாவின்
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ பதிவு அமைந்திருந்தது.பாடல்களாக அந்த உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.அந்தப்பதிவை வாசிக்கும்போது நகைச்சுவை உணர்வோடு அதை வாசிக்க முயற்சித்தபோதும் ஏதோ ஒரு பாரம் நெஞ்சை நிறைத்தது உண்மைதான்.

இங்கு நான் அறிந்த தெரிந்த விடயங்களை சம்பவங்களை அடிப்படையாக வைத்து  இந்தப்பதிவை எழுதுகிறேன்.இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.இந்தப்பதிவுகள் எல்லாமே என் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக மட்டுமே.எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து நான் எழுதவில்லை.அங்கீகாரம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்.அதற்காக ஹிட் பதிவை கொடுக்கவேண்டுமென நினைத்து எந்த பதிவையும் நான் இதுவரைக்கும் எழுதவில்லை.இனியும் எழுதப்போவதுமில்லை.எனது கடந்த ஒரு பதிவுக்கு
மிகவும் கீழ்த்தரமான முறையில் முகப்புத்தகத்தில் விமர்சனம் எழுதியிருந்தார்கள்.அதற்கு எனது நெருங்கிய நண்பர் ஒருவரும் ஆமோதித்து கருத்து கூறியிருந்தார் என்பது மனவருத்தத்துக்குரிய விடயம் தான்.அவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க,நாங்கள் விடயத்துக்கு வருவோம்.
வெளி நாடு என்றதுமே எங்கள் எல்லோருடைய நினைப்பும் அது என்னவோ செல்வம் கொழிக்கும் சொர்க்க பூமி என்று தான்.ஆனால் உண்மை அதுவல்ல என்பது எம் உறவுகளின் கருத்துக்களை கேட்கும்போது தெரிகிறது.என்ன தான்  வசதியாக இருந்தாலும் சொந்த பந்தங்களை பிரிந்து தனிமையே துணையென இருக்கும் அந்த வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு சொர்க்கமாக இல்லை என்பதே எனது கருத்து.

எம்மவர்களிடம் தாராளமாக புழங்குவது, தாராளமாக புழங்கும் வார்த்தையும் கூட இது "வெளிநாட்டு காசு".எம்மவர்கள் சொல்வார்கள் "அவன் இலண்டனில் மாதம் 5 லட்சம் உழைக்கிறான்.அவர்களுக்கென்ன.."என்று.
இந்த வெளி நாட்டு பணம் எல்லாம் பெரிய தொகையாக எம்மை வந்து சேர்வது நாணயமாற்று வீதத்தால் மட்டுமே.அங்கே அவர்களின் அந்த வருமானம் சிலவேளைகளில் அவர்களின் செலவுக்கே போதுமானதாக இருக்காது.இந்த அடிப்படையை எம்மில் பெரும்பாலோனோர் குறிப்பாக மூத்த தலைமுறையினர் புரிந்துகொள்வது குறைவு என்பதே எனது கருத்து.அவர்களுக்கு புரியும்படியாக எடுத்துச்சொல்லாமல் விடுவது எம் தவறும் கூடத்தான்.அதை விட வருத்தத்துக்குரியது எம்மில் பெரும்பாலானவர்கள் அவர்களை பணம் கொட்டும் இயந்திரமாகப்பார்ப்பதுதான்.எனக்கு தெரிந்த அக்கா ஒருவர் திருமணம் முடித்து வெளி நாடு ஒன்றுக்கு சென்றார்.குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதால் தந்தை இல்லாத குடும்பத்தை பார்க்கும் பொறுப்பு மட்டுமல்ல தனது தங்கைகளை கரைசேர்க்கவேண்டிய பொறுப்பும் அந்த பெண்ணுக்குக்குத்தான்.தனது படிப்பையும் அங்கே தொடர்ந்து கொண்டு பகுதி நேரமாக வேலை செய்து என்று கடினமான வாழ்க்கையை தான் அந்தப்பெண் வாழ்கிறார்.இத்தனைக்கும் அவரின் சகோதரிகள் இங்கே சந்தையில் புதிதாக வரும் ஆடம்பர உடைகளை உடுத்துவதும் அழகு பார்ப்பதும் என்று அவர்களின் தரமே வேறு.இது குறிப்பிட்ட ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் கூட பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான்.அங்கே அவர்கள் இரவு பகலாக உழைத்து பணத்தை அனுப்ப இங்கே உள்ளவர்கள் அதை எவ்வாறு செல்வழிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

சில நாடுகளை எடுத்துக்கொண்டால் படித்த படிப்புக்கு அங்கே வேலை எடுப்பது கடினம் என்பதால் மூளைக்கு வேலையெதுவும் அற்ற படிப்புக்கு சம்பந்தமே இல்லாத தொழிலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எம் இளைஞர்களுக்கு.என்னதான் வெளியே சொல்லிக்கொள்ளாவிட்டாலும் கூட அவர்களின் உள்மனதில் ஏதோ ஒரு வகையில் உளவியல் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.
 

கடந்த வருட பொருளாதார நெருக்கடி நேரம்.அதிக சம்பளம் வாங்கும் மென்பொருள் துறையில் உள்ளவர்களே வேலை இழப்பு,சம்பள பிரச்சினை என்று நிதி நெருக்கடியில் திண்டாடிய காலம் அது.மென்பொருள் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் வேலையை இழந்த சோதனைக்குரிய காலம் அது.இங்கே எனக்கு தெரிந்த ஆன்ரி ஒருவரின் மகன் வெளி நாட்டில் வேலை செய்கிறார்.அந்த நேரத்தில் அவர்களுக்கும் அந்த தாக்கம் இருந்திருக்கும்போலும்.ஓரிரு மாதங்களாக வீட்டிற்கு பணம் அனுப்பவில்லையாம்.அதை மிகுந்த மனவருத்தத்தோடு அந்த ஆன்ரி என்னிடம் தெரிவித்தார்.அவரின் நினைப்பு என்னவென்றால் மகன் ஊதாரித்தனமாக பணத்தை செலவுசெய்கிறாரோ என்று.இங்கே இருக்கின்ற பல தாய் தந்தையருக்கு இப்படியான நிலைமை சிலவேளைகளில் புரிவதில்லை.அவர்களுக்கு சொல்லிப்புரிய வைக்கவேண்டியது எம் கடமை இல்லையா?அதை விடுத்து அவர்களை நொந்துகொள்வதில் ஆகப்போவது எதுவுமில்லை.

என்னதான் பணம் வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும் அன்பு தான் மனித வாழ்க்கைக்கு அடிப்படை..படிப்புக்காக ஊரைவிட்டு வந்து வாழ்ந்த நகர வாழ்க்கையில் தனிமையின் வலியை உணர்ந்த நாட்கள் எத்தனையோ.அவ்வாறு இருக்க நாடு விட்டு நாடு சென்று வசிக்கும் எம் உறவுகளின் மன நிலையை என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது.நண்பர்கள் சொந்தங்கள் என்று பல பேர் இருந்தாலும் எம்மில அக்கறைகொண்டு எம்மை கவனிக்க தங்களுக்கென்று ஒரு சொந்தத்தை எதிர்பார்ப்பது மனித இயல்பு.அம்மா,அப்பா,சகோதரங்கள்,மனைவி,குழந்தைகள் என்று குடும்பத்தோடு இருப்பவர்களுக்கு இந்த மனத்தாக்கத்தின் அளவு குறைவாக தான் இருக்கும்.




ஆகவே வெளி நாட்டில் உள்ள எம் உறவுகளை பணம் காய்ச்சி மரங்களாக பார்க்காமல் உணர்வுகள் உள்ள மனிதர்களாக பார்ப்போம்.

Saturday, May 15, 2010

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?

எனது முந்தைய பதிவு ஒன்றில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பது பற்றி எழுதியிருந்தேன்.இந்தப்பதிவில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான
வழிமுறைகளை பற்றி குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.இந்த மன அழுத்தம் என்பது உறவுகளினால் வரலாம்..அலுவலகத்தில் கூட வேலை
செய்பவர்களால் ஏற்படலாம்..எதுவாயிருந்தாலும் மன அழுத்தம் குறிப்பிட்ட அளவைத்தாண்டும்போது அதுவே பல நோய்களுக்கு காரணமாவது மட்டுமல்ல மனிதனை மன நோயாளியாகவே மாற்றிவிடக்கூடும்.
ஒரு நாள் என் அலுவலக நண்பி ஒருத்தி சொன்னார் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தினமும் குத்துச்சண்டை பயிற்சி செய்வது போல் செய்வாராம்..ஏனென்று கேட்டால் மன அழுத்தத்தை குறைப்பதற்காக என்று...அதனை செய்து பார்த்ததில்லை என்றாலும் கூட அதன் பயனை என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது...ஆண்களுக்கு இது மிகவும் பொருத்தமான வழி முறை என்பது எனது கருத்து..

அதனை விட மன அழுத்தத்தை குறைப்பதற்கு நான் எப்போதும் கடைப்பிடிக்கும் வழிகளில் ஒன்று வாய் விட்டு அழுவது தான்.அழுபவன் கோழை என்று நீங்கள் சொல்லக்கூடும்.மற்றவர்களுக்கு முன்னால் அழவேண்டும் என்ற அவசியம் இல்லை.மற்றவர்களுக்கு முன்னால் அதனை செய்யும்போது அவர்களுக்கு சங்கடமாக கஸ்டமாக இருக்கக்கூடும்.அதனால் தனிமையில் அதற்கேற்ற நேரம் காலம் பார்த்து நடைமுறைப்படுத்துவது நன்மைபயக்கும் என்று நினைக்கிறேன்....:).நான் இங்கே சொல்லும் கருத்தை மெய்ப்பிப்பது போல் ஒரு காட்சி "மொழி" படத்தில் இடம்பெற்றிருந்தது அந்த படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும்.
இறுதியாக நான் குறிப்பிடும் இந்த வழிமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.பொதுவாக குத்துப்பாடல்கள் கேட்கும்போது தான் ஆடத்தோன்றும் என்று எல்லோரும் சொல்வார்கள்.நான் அதில் விதிவிலக்கோ என்னவோ தெரியவில்லை..மனசுக்கு இதமான சில
மெல்லிசைப்பாடல்களைக்கேட்கும்போது கூட ஆடவேண்டும் போல் தோன்றும்.இயல்பாக எந்த நோக்கமும் இன்றி தான் அவ்வாறு ஆட ஆரம்பித்தேன்..ஆனால் உண்மையிலேயே கவலையை நீக்குவதில் மன அழுத்தத்தை குறைப்பதில் இசைக்கலையைப்போல் நடனக்கலைக்கும் கூட பெரிய பங்கு இருக்கிறது...மன அழுத்தம் குறைவது மட்டுமல்ல உடற்பயிற்சி நிலையம் செல்லாமலே உடலுக்கு சிறந்த பயிற்சியாகவும் இது அமையும்..நீங்களும் முயற்சி செய்துபாருங்கள்.அதை விட முக்கியமான அனுகூலம் பெண் பார்க்க வருபவர்கள் பெண்ணுக்கு ஆடத்தெரியுமா என்று கேட்டால் முழிக்க வேண்டிய அவசியமில்லை..;)(பெண்களுக்கு கூட பொருத்தமாக இருக்கும்:))