Saturday, May 24, 2014

ஐயனின் மாதோட்டம்

எல்லாவற்றுக்கும் நேரகாலம் வரவேண்டும் என்பார்கள். உண்மைதான் போலும்.கடந்தவருடம் கூட தமிழ் நாட்டின் பலகோயில்களைத்தரிசிக்கும் பாக்கியம் கிட்டியிருந்தது.ஆனால் பக்கத்தில் இருக்கும் திருக்கேதீச்சரம் ஆலயத்துக்குச்செல்லும் வாய்ப்பு கடந்த கிழமை தான் கைகூடியிருந்தது. அதேபோல் இந்தியப்பயணம் குறித்த விரிவான பயணக்கட்டுரை எழுதவும் இன்னும் நேரகாலம் வரவில்லை என்று நினைக்கிறேன்.  :P :)

நாங்கள் சென்றது திருவிழா,விசேடம் எதுவுமற்ற சாதாரணமான நாளிலாக இருந்தாலும் கூட வெள்ளிக்கிழமை என்பதால் ஒரு சிறிய சிறப்பு வழிபாடு இருந்தது என்று நினைக்கிறேன்.

பாடசாலைப்பிள்ளைகள் பெருந்திரளாக வந்து பூசையை தரிசித்தபின்னர் சிவபுராணமும் திருக்கேதீச்சர திருப்பதிகமும் பாடினார்கள். பண்ணோடு பக்திமயமாக அவர்கள் பாடும்போது அந்நியன் படக்காட்சிதான் மனதில் தோன்றியது. 



"சங்கீத உபாசகர்லாம் ஒன்னா சேர்ந்து தியாகராஜ கீர்த்தனைகள் பாடுறச்சே மனசெல்லாம் கரைஞ்சு பெருமாளயே நேரில பாத்தமாதிரி ஆயிடும்" 

அதே உணர்வு தான் என் மனதிலும் தோன்றியது. பாடிமுடிக்கும்வரை அங்கேயே இருந்துவிட்டுத்தான் எழுந்துவந்தேன்.:)

கூடவே பள்ளிக்கூடகால ஞாபகமும் வந்துபோனது. தினமும் திருமுறை ஓதினாலும் வெள்ளிக்கிழமைகளில் விசேடமாக சிவபுராணமும் படிப்பது வழக்கம். திருக்கேதீச்சரம் திருஞானசம்பந்தராலும் சுந்தரமூர்த்தி நாயனாராலும் பாடப்பெற்ற தலம் எனும் சிறப்பைக்கொண்டது. சிறு வயதில் சமயபாடத்திலும் சங்கீதபாடத்திலும் படித்த "நத்தார் படை" தேவாரம் இந்த கேதீச்சரத்தலத்தின் மீது பாடப்பட்ட பாடல்களில் ஒன்று. "செத்தாரெலும்பணிவான் திருக்கேதீச்சரத்தானே" என்று முடியும் பாடல் அது.

கோயில் செல்லும் வழியில் கோயிலுக்கு அருகாமையில் (பாலாவி தீர்த்தத்தின் கரையோடு ஒட்டி) ஒரு இடத்தில் தான் பெருமளவில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த குறுக்குவீதி தற்போது பொதுமக்கள் பாவனைக்குத்தடைசெய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள்.


"கூத்தாடும் பெருமானே குரல் கேட்கவில்லையோ ஈசனே உன்னடி சேர்க்க மனம் வரவில்லையோ"