Thursday, February 18, 2010

எனது டயரி (diary) குறிப்புக்கள் -எவன் மனிதன்????

 எமது அன்றாட வாழ்வில் எத்தனையோ விதமான மனிதர்களை நாம் சந்திக்கின்றோம்.என் வாழ்விலும் அவ்வாறு நான் சந்தித்த என்னைப்பாதித்த
மனிதர்கள்,சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.தினமும் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்தையும் டயரியில் எழுதும் பழக்கம் எனக்கு இல்லை என்றாலும் சில சம்பவங்கள் மனதின் பக்கங்களில் ஆழமாகப்பதிந்துவிடுவதால் அவற்றை என் ஞாபகத்திலிருந்து சுலபமாக அழிக்க முடிவதில்லை.இவற்றை வாசிக்கும்போது உலகம் போகின்ற போக்கில் இதெல்லாம் ஒரு விடயமா என்று நீங்கள் எண்ணக்கூடும்.என்னைப்பொறுத்
தவரையில் ஒருவன் எவ்வளவு தான் பணம் புகழ் பதவி அந்தஸ்து பெற்றிருந்தாலும் அவை எல்லாவற்றையும் விட
சமூகத்துக்கு மற்றைய மனிதர்களுக்கு ஒரு நல்ல மனிதனாக இருப்பதையே மிகப்பெரிய கௌரவமாகக்கருதுகிறேன்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன் 155 பஸ்ஸில் பயணம் செய்யும் ஒரு நாள்.நான் பஸ்ஸில் ஏறி மூன்றோ நான்கோ தரிப்பிடங்கள் கழிந்த நிலையில் ஒரு தரிப்பிடத்தில் இளம்பெண்ணொருவர் கைக்குழந்தையுடன் பஸ்ஸில் ஏறினார். சாதாரணமாக எனக்கென்றால் கையில் கொஞ்சம் பாரம் கூடிய பை இருந்தாலே ஏறுவதும் ஏறியபின் இருக்கை கிடைக்கவில்லை என்றால் அதை வைத்துக்கொண்டு அல்லாடுவதுமாக என் பாடு பெரும்திண்டாட்டம் தான்.அப்படியிருக்கையில் குழந்தையை வைத்துக்கொண்டு அந்த பெண்ணுக்கு எவ்வளவு சிரமமாக இருந்திருக்கும் என்று என்னால் உணரக்கூடியதாக இருந்தது.நான் சொல்ல வந்த விடயம் என்னவென்றால் யாரும் எழுந்து அந்த பெண்ணுக்கு இடம்கொடுக்க முன்வரவில்லை என்பதுதான்.பொதுவாக இவ்வாறான சந்தர்ப்பங்களில் நடத்துனர் வந்து சத்தம் போட்டு முன்னுக்கு இருப்பவரை காலி செய்யவைத்து அந்த இடத்தைகொடுப்பதுண்டு.அன்றைக்கென்று
அவரையும் காணவில்லை.இத்தனைக்கும் நாம் வருத்தப்பட வேண்டிய வெட்கப்படவேண்டிய விடயம் என்னவென்றால் 155 பஸ்சில் பயணிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் எம்மவர்கள்.”யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன” என்ற எண்ணமா அல்லது “யாராவது எழுந்து இடம்கொடுக்கட்டுமே” என்ற தாராள மனப்பான்மையா என்று எனக்கு விளங்கவேயில்லை.இந்த இடத்தில் நான் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட விரும்புகிறேன்..இதே சம்பவம் 100 பஸ்சிலோ அல்லது 101 இலோ நடந்திருந்தால் குறைந்தது ஒருத்தராவது எழுந்து இடம் கொடுத்திருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை. 6 வருட கொழும்பு வாழ்க்கையில் எமது சகோதர இனத்தவரிடமிருந்து கற்றுக்கொண்ட நல்ல இயல்புகளில் இதுவும் ஒன்று.எம்மவர்களை குறைத்துச்சொல்லவேண்டும் என்று எனக்கொன்றும் ஆசையில்லை மாறாக வருத்தம் தான். ஆனால் உண்மை என்று ஒன்று இருக்கிறதே. அவர்களில் அவ்வாறான நல்ல பண்பு கொண்டவர்கள் 100 இற்கு 60 என்றால் எம்மில் 100 இற்கு 20 மட்டுமே என்பது எனது அனுபவக்கணிப்பு.

இவ்வளவும் சொல்கிறாயே நீ எழுந்து இடம் கொடுத்திருக்கலாமே என்று நீங்கள் கேட்பது என் காதிலும் விழுகிறது.அன்று நான் அதைச்செய்யாவிட்டால் இன்று உங்கள் முன் இதை சொல்வதற்கேஅருகதையில்லாதவளா
இருந்திருப்பேன்.அன்றைக்கு நான் அமர்ந்திருந்த இருக்கை பஸ்சின் வாசல் பக்கத்துக்கு எதிர்ப்பக்கமுள்ள வரிசையில் இரண்டாவது நிரையில் யன்னல் கரை இருக்கை.அன்றைக்கென்று பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இருக்கைகளையும் சுற்றி நிறைய பேர் நின்றுகொண்டிருந்தார்கள்.அந்த மூலையில் இருந்து பெரும் சிரமப்பட்டு வெளியேறி அந்த இடத்தை கொடுக்கவேண்டியிருந்தது.இவ்வளவும் நடக்கும் வரை அந்த பெண் குழந்தையுடன் நிச்சயமாக அல்லாடி இருப்பார். இதை பார்க்கும்போது ஏன் ஒருத்தருக்கு கூட அந்த இரக்கம் ஏற்படவில்லை என்று என்னால் விளங்கமுடியவில்லை.

மற்றவர்களுக்கு பணம் பொருள் கொடுத்துதான் உதவிசெய்யவேண்டும் என்று இல்லை.எம்மால் முடிந்தவரை இவ்வாறான சிறிய உதவி தன்னிலும் செய்யமுடியுமாயின் அது கூட பெரிய விடயம்தான்.அதில் கிடைக்கின்ற சந்தோசமே தனி. பெரும்பாலான பஸ்களில் பார்த்தால் இந்த வாசகம் எழுதப்பட்டிருக்கும்.
"Please do give the seat to some one who needs more than you do."
எம்மில் எத்தனை பேர் அதை வாசித்திருக்கிறோம்......எத்தனை பேர் அதை பின்பற்றுகிறோம்......

இது போன்ற வேறு சில சம்பவங்களையும் இந்த குறிப்பில் உள்ளடக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.எழுதத்தொடங்கியபின் அது தொடர்கதையாகவே நீண்டு செல்வதால் மிகுதியுடன் அடுத்தகுறிப்பில் உங்களைச்சந்திக்கலாம் என்று எண்ணுகிறேன்.:)

இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது இந்தப்பாடல் தான் என் ஞாபகத்துக்கு வருகிறது...."மனிதன் மனிதன் எவன் தான் மனிதன்..................."


1 comments:

Unknown said...

//எம்மவர்களை குறைத்துச்சொல்லவேண்டும் என்று எனக்கொன்றும் ஆசையில்லை மாறாக வருத்தம் தான்.//

உண்மை வரிகள் , எம்மர்களை குறை சொல்வதென்பது , எம்மீது நாமே பூசிக்கொள்ளும் கரி. அதற்காக எம் ஆதங்கம் எதனையும் ஆத்திரமாக வெளிப்படுத்தக்கூடாது என்பதற்கில்லை. இது மாதிரியான விடயங்கள் நிறையவெ இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள்.

Post a Comment