பல ஆண்டுகளுக்கு முன் சென்ற தென்னிந்திய தலயாத்திரையில் திருச்செந்தூர் கோயிலுக்கும் செல்லும் பாக்கியம் கிட்டியிருந்தது. திருப்பரங்குன்றம் கோயில் சென்றது பற்றி இங்கே கொஞ்சம் எழுதியிருக்கிறேன். திருப்பரங்குன்றத்திலிருந்து(மதுரையிலிருந்து) நேராக திருச்செந்தூருக்கு பேருந்தில் சென்றோம். செல்லும் வழியில் மதுரையை அண்டிய ஒரு சின்ன கிராமத்தில் பேருந்து நின்றபோது அங்கே இருந்த சிறிய கடையொன்றில் பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் கொஞ்சம் நிறையவே வாங்கி கட்டிக்கொண்டேன்.மதியம் சாப்பாடு எங்கேயாவது கிடைக்குமா என்ற சந்தேகம் தான்.
போகும் வழியில் பேருந்தில் ஒரு பெண்மணி செல்லும் வழியில் தான் தங்கள் ஊர் இருப்பதாகவும் அந்த ஊரில் உள்ள அம்மன் கோயிலை தரிசித்து செல்லுமாறும் வேண்டிக்கொண்டார். நேரப்பற்றாக்குறை காரணமாக அவர் வேண்டுகோளை நிறைவேற்றமுடியவில்லை. 6 , 7 மணித்தியால பயணத்தின் பின் திருச்செந்தூர் கோயிலை சென்றடைந்தோம்.
எல்லா முருகன் கோயிலிலும் இருப்பது ஒரே முருகன் தான் என்றாலும் திருச்செந்தூர் முருகன் மீது தனிப்பற்று உண்டு. அதற்கு முக்கிய காரணம் பிரபலமான "திருச்செந்தூரின் கடலோரத்தில்... " என்ற அற்புதமான பாடல். அதைவிட "செந்தூர் கந்தையா..." என்று பல மனதை உருக்கும் பாடல்கள் செந்தூர் முருகன் மீது பாடப்பட்டிருக்கிறது. பாடிய புலவருக்கு முருகனே முத்துமாலை கொடுத்த திருச்செந்தூர் தல அற்புதம் எங்கேயோ வாசித்தது எப்போதும் பசுமையாக மனதில் இருக்கிறது.
பல நினைவுகளை மீட்டிகொண்டே திருச்செந்தூர் கோயிலை அடைந்தோம். கோயிலை நெருங்கும்போதே லேசான வயிற்றுவலி. எங்கே மாதாமாதம் வரும் பிரச்சினை வந்து கோயில் அருகிலேயே செல்லமுடியாமல் போய்விடுமோ என்று பயந்துவிட்டேன். இத்தனை மைல் தாண்டி ஆர்வமாக அவனை பார்க்கவந்தும் முருகனுக்கு என்னவோ அழைக்க தோன்றவில்லை என்று பெருவருத்தமாக இருந்தது. பஜ்ஜி சொஜ்ஜியால் வந்த வயிற்றுவலி என்று புரிந்தபோது பெருமகிழ்ச்சிதான். பஸ்ஸில் கூட வந்த பெண்மணி இவ்வளவு பஜ்ஜி சொஜ்ஜி எதற்கு என்று கேட்டபோதே இப்படி ஏதும் ஆகும் என்று எதிர்பார்த்திருக்க வேண்டும்.
கோயிலுக்குள் சென்றோம். வயிற்றுவலியால் நடக்கமுடியவில்லை என்பதால் கடலில் கால்நனைத்தபின் கடற்கரை அருகே உள்ள மண்டபத்தின் ஒரு தூணோடு சாய்ந்துவிட்டேன். கூட வந்த உறவுக்காரர்கள் கோயிலுக்கு உள்ளே சென்று வழிபட்டு திருநீறு கொண்டுவந்து தந்தார்கள். வழிபட்டு முடித்து செருப்பு கழட்டிவிட்ட இடத்திருந்து எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். அங்கே ஏற்பட்ட அனுபவம் இன்னும் மனவருத்தத்தை கூட்டியது. அந்நியர்களாக இருந்தாலும் முருகன் சந்நிதியில் அந்நியர்கள் போல் நடத்தியது வருத்தமாக இருந்தது.
கோயிலை விட்டு வெளியேறி கோயிலுள்ளே சென்று வணங்கமுடியவில்லையே என்ற வருத்தத்துடனே நடந்தபோது பாதையோரத்தில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.பொதுவாகவே சாத்திரத்தில் பெரும் ஈடுபாடு உண்டு. கூட வந்த உறவுக்காரர் கையை காட்ட சொன்னதுமே கையை நீட்டிகொண்டேன். "திருச்செந்தூர் தேவர்களும் குரு பகவானும் வந்து வழிபட்டுச்சென்ற தலம். திருச்செந்தூர் மண்ணிலே கால் வைத்தாலே பெரும் புண்ணியம் . கோயிலினுள்ளே சென்று வணங்க வேண்டுமென்ற அவசியமில்லை" என்று என் மனக்குறையை அறிந்தவர் போலவே அந்தப்பெரியவர் பேசியபோது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. பலவிடயங்களைப்பற்றி சொன்னார். பெரியவர்களை மதிக்கும் பண்பு இருப்பதாக சொன்னார். வயிற்று வலியோடு எல்லா மனவருத்தமும் சேர்ந்து அப்போது தான் கூட வந்த உறவுக்கார பெரியவரை திட்டிக்கொண்டு வந்தேன். எத்தனை தவறு செய்தாலும் தன் பிள்ளையை விட்டுக்கொடுக்காத தாய் போல அந்த பெரியவர் பேசியபோது மகிழ்ச்சியாகவும் குற்ற உணர்வாகவும் இருந்தது. பணத்துக்காக குறி சொல்பவர்போல தெரியவில்லை. சொல்லிமுடித்தபின் ஏதாவது தந்தால் தா தராவிட்டால் போ என்ற தோரணையில் இருந்தார்.
எது எப்படியோ அவரிடம் பேசியபின் வயிற்றுவலி மனவருத்தம் எல்லாம் காணாமல் போனது போல் ஒரு உணர்வு. அங்கிருந்து தஞ்சாவூர் நோக்கி எங்கள் பயணத்தை தொடங்கினோம்.
0 comments:
Post a Comment