எம் புலம்பெயர் உறவுகளின் மன உணர்வுகளை ஏக்கங்களை வெளிப்படுத்தும் பாடல் தொகுப்பாக எங்கள் மூத்த பதிவர் கானா பிரபா அண்ணாவின்
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ பதிவு அமைந்திருந்தது.பாடல்களாக அந்த உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.அந்தப்பதிவை வாசிக்கும்போது நகைச்சுவை உணர்வோடு அதை வாசிக்க முயற்சித்தபோதும் ஏதோ ஒரு பாரம் நெஞ்சை நிறைத்தது உண்மைதான்.
இங்கு நான் அறிந்த தெரிந்த விடயங்களை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப்பதிவை எழுதுகிறேன்.இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.இந்தப்பதிவுகள் எல்லாமே என் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக மட்டுமே.எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து நான் எழுதவில்லை.அங்கீகாரம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்.அதற்காக ஹிட் பதிவை கொடுக்கவேண்டுமென நினைத்து எந்த பதிவையும் நான் இதுவரைக்கும் எழுதவில்லை.இனியும் எழுதப்போவதுமில்லை.எனது கடந்த ஒரு பதிவுக்கு
மிகவும் கீழ்த்தரமான முறையில் முகப்புத்தகத்தில் விமர்சனம் எழுதியிருந்தார்கள்.அதற்கு எனது நெருங்கிய நண்பர் ஒருவரும் ஆமோதித்து கருத்து கூறியிருந்தார் என்பது மனவருத்தத்துக்குரிய விடயம் தான்.அவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க,நாங்கள் விடயத்துக்கு வருவோம்.
வெளி நாடு என்றதுமே எங்கள் எல்லோருடைய நினைப்பும் அது என்னவோ செல்வம் கொழிக்கும் சொர்க்க பூமி என்று தான்.ஆனால் உண்மை அதுவல்ல என்பது எம் உறவுகளின் கருத்துக்களை கேட்கும்போது தெரிகிறது.என்ன தான் வசதியாக இருந்தாலும் சொந்த பந்தங்களை பிரிந்து தனிமையே துணையென இருக்கும் அந்த வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு சொர்க்கமாக இல்லை என்பதே எனது கருத்து.
எம்மவர்களிடம் தாராளமாக புழங்குவது, தாராளமாக புழங்கும் வார்த்தையும் கூட இது "வெளிநாட்டு காசு".எம்மவர்கள் சொல்வார்கள் "அவன் இலண்டனில் மாதம் 5 லட்சம் உழைக்கிறான்.அவர்களுக்கென்ன.."என்று.
இந்த வெளி நாட்டு பணம் எல்லாம் பெரிய தொகையாக எம்மை வந்து சேர்வது நாணயமாற்று வீதத்தால் மட்டுமே.அங்கே அவர்களின் அந்த வருமானம் சிலவேளைகளில் அவர்களின் செலவுக்கே போதுமானதாக இருக்காது.இந்த அடிப்படையை எம்மில் பெரும்பாலோனோர் குறிப்பாக மூத்த தலைமுறையினர் புரிந்துகொள்வது குறைவு என்பதே எனது கருத்து.அவர்களுக்கு புரியும்படியாக எடுத்துச்சொல்லாமல் விடுவது எம் தவறும் கூடத்தான்.அதை விட வருத்தத்துக்குரியது எம்மில் பெரும்பாலானவர்கள் அவர்களை பணம் கொட்டும் இயந்திரமாகப்பார்ப்பதுதான்.எனக்கு தெரிந்த அக்கா ஒருவர் திருமணம் முடித்து வெளி நாடு ஒன்றுக்கு சென்றார்.குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதால் தந்தை இல்லாத குடும்பத்தை பார்க்கும் பொறுப்பு மட்டுமல்ல தனது தங்கைகளை கரைசேர்க்கவேண்டிய பொறுப்பும் அந்த பெண்ணுக்குக்குத்தான்.தனது படிப்பையும் அங்கே தொடர்ந்து கொண்டு பகுதி நேரமாக வேலை செய்து என்று கடினமான வாழ்க்கையை தான் அந்தப்பெண் வாழ்கிறார்.இத்தனைக்கும் அவரின் சகோதரிகள் இங்கே சந்தையில் புதிதாக வரும் ஆடம்பர உடைகளை உடுத்துவதும் அழகு பார்ப்பதும் என்று அவர்களின் தரமே வேறு.இது குறிப்பிட்ட ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் கூட பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான்.அங்கே அவர்கள் இரவு பகலாக உழைத்து பணத்தை அனுப்ப இங்கே உள்ளவர்கள் அதை எவ்வாறு செல்வழிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்.
சில நாடுகளை எடுத்துக்கொண்டால் படித்த படிப்புக்கு அங்கே வேலை எடுப்பது கடினம் என்பதால் மூளைக்கு வேலையெதுவும் அற்ற படிப்புக்கு சம்பந்தமே இல்லாத தொழிலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எம் இளைஞர்களுக்கு.என்னதான் வெளியே சொல்லிக்கொள்ளாவிட்டாலும் கூட அவர்களின் உள்மனதில் ஏதோ ஒரு வகையில் உளவியல் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.
கடந்த வருட பொருளாதார நெருக்கடி நேரம்.அதிக சம்பளம் வாங்கும் மென்பொருள் துறையில் உள்ளவர்களே வேலை இழப்பு,சம்பள பிரச்சினை என்று நிதி நெருக்கடியில் திண்டாடிய காலம் அது.மென்பொருள் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் வேலையை இழந்த சோதனைக்குரிய காலம் அது.இங்கே எனக்கு தெரிந்த ஆன்ரி ஒருவரின் மகன் வெளி நாட்டில் வேலை செய்கிறார்.அந்த நேரத்தில் அவர்களுக்கும் அந்த தாக்கம் இருந்திருக்கும்போலும்.ஓரிரு மாதங்களாக வீட்டிற்கு பணம் அனுப்பவில்லையாம்.அதை மிகுந்த மனவருத்தத்தோடு அந்த ஆன்ரி என்னிடம் தெரிவித்தார்.அவரின் நினைப்பு என்னவென்றால் மகன் ஊதாரித்தனமாக பணத்தை செலவுசெய்கிறாரோ என்று.இங்கே இருக்கின்ற பல தாய் தந்தையருக்கு இப்படியான நிலைமை சிலவேளைகளில் புரிவதில்லை.அவர்களுக்கு சொல்லிப்புரிய வைக்கவேண்டியது எம் கடமை இல்லையா?அதை விடுத்து அவர்களை நொந்துகொள்வதில் ஆகப்போவது எதுவுமில்லை.
என்னதான் பணம் வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும் அன்பு தான் மனித வாழ்க்கைக்கு அடிப்படை..படிப்புக்காக ஊரைவிட்டு வந்து வாழ்ந்த நகர வாழ்க்கையில் தனிமையின் வலியை உணர்ந்த நாட்கள் எத்தனையோ.அவ்வாறு இருக்க நாடு விட்டு நாடு சென்று வசிக்கும் எம் உறவுகளின் மன நிலையை என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது.நண்பர்கள் சொந்தங்கள் என்று பல பேர் இருந்தாலும் எம்மில அக்கறைகொண்டு எம்மை கவனிக்க தங்களுக்கென்று ஒரு சொந்தத்தை எதிர்பார்ப்பது மனித இயல்பு.அம்மா,அப்பா,சகோதரங்கள்,மனைவி,குழந்தைகள் என்று குடும்பத்தோடு இருப்பவர்களுக்கு இந்த மனத்தாக்கத்தின் அளவு குறைவாக தான் இருக்கும்.
ஆகவே வெளி நாட்டில் உள்ள எம் உறவுகளை பணம் காய்ச்சி மரங்களாக பார்க்காமல் உணர்வுகள் உள்ள மனிதர்களாக பார்ப்போம்.
11 comments:
//வெளி நாட்டில் உள்ள எம் உறவுகளை பணம் காய்ச்சி மரங்களாக பார்க்காமல் உணர்வுகள் உள்ள மனிதர்களாக பார்ப்போம்//
சரியாக சொல்லி உள்ளீர்கள் தோழி
தலைவலியும் பல்வலியும் தனக்கு வ்ந்தால் தான் தெரியும் என்பர்கள்.அதுபோல இந்த பதிவு என்னை போன்று அயல் நாட்டில் இருபவனகு தான் தெரியும்,இதன் வேதனை என்னவென்று.
தங்களின் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன். வெளிநாடுகளில் குளிரினுள்ளும், கொட்டும் பனிக்கும் மத்தியிலும் நாங்கள் படும் கஸ்டங்கள் இங்கிருந்து எம் உறவுகளுக்கு அனுப்பும் பணங்களினூடக வெளிப்படுத்தப்படுவதில்லை.
உதாரணமாக ஊரில் யாராவது வெளிநாட்டில் இருக்கிறார்கள் என்றால் ‘ஹலோ என்றதும் கிலோவிலை கிடைக்கும்’ என்று எம்மவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் உறவினர்களை, வீட்டாரை நக்கலடிப்பார்கள்.
இன்னொரு விடயம் நன்றாகப் படித்தாலும் வேலை தேடி எடுப்பது என்பது மிகவும் கடினமான விடயம் தான். நானறிய ''master's degree முடித்த நண்பர்கள் பலர் ‘pizza கடைகளிலும், cleaning வேலைகளிலும் வேலை செய்வதைக் கண்டுள்ளேன்.
யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பணங்களும், யாழ்பாணத்தின் பணக்காரத் திமிரும், அதி உயர் சீதங்களும் இந்த வெளி நாட்டினர்களின் பணத்தினை வைத்தே நிர்ணயிக்கப்படுகின்றன.
இந்தளவு கருத்துக்களையும் முன்வைக்கும் நானும் ஒரு ‘வெளி நாட்டில் வாழும் சாதாரண மாணவன்’
கருத்துக்கு நன்றிகள் மகராஜன்..உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ளகூடியதாக இருக்கிறது.
உண்மை தான் கமல்...வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி..
ஒன்றை விட்டால் தான் ஒன்றை பெற முடியும். ஆகவே இலங்கையைவிட்டு போகிறவருக்கு எதோ ஒன்று இலங்கையைவிட முன்னிலைப்படுத்துகிற விசயம் ஒன்று கட்டாயம் இருக்கும். அந்த விடயத்தின் அனுகூலங்களை அனுபவிக்கின்ற வேளையில் சுதந்திரம் அன்பு, பாசம் ஆகியவற்றை இழக்க வேண்டி வரும். அது தான் இந்த உலகத்தின் நியதி.
//ஒன்றை விட்டால் தான் ஒன்றை பெற முடியும். ஆகவே இலங்கையைவிட்டு போகிறவருக்கு எதோ ஒன்று இலங்கையைவிட முன்னிலைப்படுத்துகிற விசயம் ஒன்று கட்டாயம் இருக்கும். அந்த விடயத்தின் அனுகூலங்களை அனுபவிக்கின்ற வேளையில் சுதந்திரம் அன்பு, பாசம் ஆகியவற்றை இழக்க வேண்டி வரும். அது தான் இந்த உலகத்தின் நியதி. //
உண்மைதான்.சுய முன்னேற்றத்துக்காக,உறவுகளுக்காக இவ்வாறு உழைக்கும் அவர்களை அவர்களின் உணர்வுகளை சொந்தங்கள் உணரவேண்டும் மதிக்க வேண்டும் என்பதை தான் இங்கு சொல்லவருகிறேன்...
ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க தாருஹாசினி..இருபக்க நிலையையும் உணர முடிகிறது. இங்கும் தமிழ்நாட்டில், வளைகுடா நாடுகளுக்குச் சென்று அடிமட்ட வேலைகளை மேற்கொள்வோர் மற்றும் அவர்தம் குடும்பங்கள் நீங்கள் சொல்லுவது போலத்தான் இருக்கின்றன!
வாருங்கள் சந்தனமுல்லை.முதன்முறையாக என்னுடைய குடில் பக்கம் வந்திருக்கிறீர்கள்.
உங்கள் கருத்தை கேட்கும்போது அங்கேயும் இதே நிலைமை இருக்கிறது என்பதை அறியும்போது மனவருத்தமாக தான் இருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..:)
கண்ணியமானதும் மென்மையானதுமான புரிந்துணர்வுள்ள நோக்கு!
ஆறுதலாக வருகிறேன் இன்னொரு நாள்.முழுவதுமாகப் எல்லாவற்றையும் படிக்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணிமேகலா...:)
தாருகாசினி,
உங்கள் இடுகை எனக்கு பிடித்துக் கொண்டது. நானும் வெளிநாட்டில் தான் இருக்கிறேன்.
ஊர்ச் சிந்தனைகள் அடிக்கடி வரும்
அம்மன் கோயில், நிலாக்கால நடைப்பயனங்கள்.
வாசிக சாலை மூடியபிறகும் மாலையில் சைக்கிள் வண்டியில் ஒருகால் ஊண்டி நண்பைகளுடன் மணிக்கணக்காப் பேசிக் கழித்த காலங்கள்.
வளமெல்லாம் அள்ளித்தந்த வன்னி மக்கள் வாழ்விழந்து, மானமிழந்து நிற்கிறார்களோ அதுவும் நெங்சை உருக்கும்.
பொன் பாலராஜன்
கனாடா
Post a Comment