Friday, January 18, 2013

அன்பே வா அருகிலே

நீண்டகாலத்தின்பின் ஒரு பதிவு எழுதவேண்டும் என்று இன்று தோன்றியிருக்கிறது.ஓரிரு நாட்களுக்குமுன் தற்செயலாக பார்க்கக்கிடைத்த "இதயம் தொட்ட இசைஞானி" நிகழ்ச்சியின் youtube video தொகுப்பில் இளையராஜாவின் இசையில் வந்த எத்தனையோ பாடல்களை கேட்கக்கிடைத்திருந்தது. அந்த நிகழ்ச்சி பார்த்தது  உண்மையிலேயே ஒரு பரவசமான அனுபவம். அன்று அந்த நிகழ்ச்சியில் பாடக்கேட்ட "அன்பே வா அருகிலே"பாடல் இப்போதெல்லாம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறேன்.ஏற்கனவே ஓரிரு தடவைகள் ஜேசுதாஸ் அவர்களின் குரலில் வந்த அந்தப்பாடலைக்கேட்டிருக்கிறேன்..ஆனால் அதே மெட்டில் பாடல் வரிகள் வேறாக அமைந்த பெண்குரல் பாடல் ஜானகியம்மா பாடியது மிகவும் பரிச்சயமான பாடல்.. 

 பாடல் இடம்பெற்ற திரைப்படம் "கிளிப்பேச்சு கேட்கவா" இதுவரைக்கும் பார்த்ததில்லை.ஆனால் படத்தில் வந்த ஒரு சில பாடல் காட்சிகளை வைத்துப்பார்க்கும்போது எனக்குப்புரிந்த கதைக்கரு இதுதான்.தவறென்றால் தெரிந்தவர்கள் திருத்திவிடுங்கள்.நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் ஆழமாக நேசிக்கிறார்கள்.இடையில் ஏதோ ஒரு காரணத்தால் நாயகி இறந்துவிடுகிறார். அந்தச்சந்தர்ப்பத்தில் ஜேசுதாஸ் குரலில் இந்தப்பாடல் வருகிறது. 

 "இத்தனை நாள் வாய்மொழிந்த சித்திரமே இப்பொழுது மௌனம் ஏன் தானோ

 மின்னலென மின்னிவிட்டு கண்மறைவாய் சென்றுவிட்ட மாயம் நீதானோ"

  

 இறந்தபின்னர் கூட நெருங்கிய உறவுகள் அதிகம் நேசித்தவர்களைத்தேடி ஆவியாக வருவார்கள் என்று கூறப்படுவதுண்டு.இங்கேயும் ஆவியாக தன் அன்புக்குரியவனை தேடிவருகிறார் நாயகி. இந்த உடம்பு என்பது உண்மையிலே வெறும் கூடு தான்..ஆசை,விருப்பம்,பற்று,பாசம் எல்லாமே ஆன்மாவில் தானே கலந்திருக்கிறது. சில உறவுகள் ஆத்ம பந்தங்கள் உடல் மரித்தாலும் ஜென்மங்கள் தாண்டியும் தொடரக்கூடியவை என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை. இந்தப்பாடல் காட்சியில் அமானுஷ்யசக்தி கண்டு பதறும் நாயகனைப்பார்க்கையில் கொஞ்சம் பரிதாபமாகவும் இருக்கும். 

"வைகையென பொய்கையென மையலிலே எண்ணியது கானல் நீர்தானோ" 
 "என்னை நீயும் கூட எண்ணக்கோலம் போட்டேன்..மீண்டும் கோலம் போட உன்னைத்தானே கேட்டேன்" 

என்று உருகிமருகிவிட்டு அந்தப்பெண் ஆவியாக தேடிவரும்போது ஓடியொளிவது என்ன நியாயம் என்று நீங்களே சொல்லுங்கள் :P :)

"மந்திரமோ தந்திரமோ அந்தரத்தில் வந்து நிற்கும் தேவி நான் தானே
 மன்னவனே உன்னுடைய பொன்னுடலை பின்னிக்கொள்ளும் ஆவி நான் தானே" 

 பாடலைப்பற்றி இசையை பற்றி எதுவுமே பேசவில்லை.பாடலைக்கேட்டுப்பாருங்கள்..அதுவே தன்னைப்பற்றிப்பேசும் :)


2 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்லதொரு பாடல்...

ரொம்ப நாளாச்சு வலைப்பக்கம் தாங்கள் வந்து.... அடிக்கடி எழுதுங்க....

தாருகாசினி said...

நன்றி..இயன்றவரைக்கும் அடிக்கடி இந்தப்பக்கம் வருகிறேன்..:)

Post a Comment