Sunday, March 7, 2010

போற்றுதற்குரிய பெண்

உலக மகளிர் தினமான இன்று உலகமே வியந்து பார்க்கும்படியாக சாதனை படைத்த பெருமைக்குரிய  பெண்கள் பற்றிய தொகுப்பு ஒன்றை தரலாம் என்று நினைத்து பல்வேறு துறைகளிலிருந்தும் சாதனை படைத்த பெண்களில் முக்கியமான ஒரு சிலரின் தகவல்களையும் திரட்டி வைத்திருந்தேன்....ஆனால் கடந்த பதிவில் பெரும்பாலான நண்பர்களால் முன்வைக்கப்பட்ட நீளப்பிரச்சினையை கருத்தில்கொண்டு முக்கியமான ஒருவரை மட்டும் இந்தப்பதிவில் உள்ளடக்கலாம் என்று நினைக்கிறேன்.விண்வெளி வீராங்கனையாக விமானியாக விஞ்ஞானியாக புகழ் பெற்ற அரசியல் தலைவராக என பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் இருந்தாலும் மனிதருக்காக மனித குலத்துக்காக மகத்தான சேவை புரிந்த இந்தப்பெண் தான் என் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இந்தப்பெண்ணின் பெருமைகளை சாதனை என்ற தலைப்பில் குறிப்பிடுவதை விட போற்றுதற்குரியதாக குறிப்பிடுவது சாலப்பொருந்தும் என்று நான் கருதுகிறேன்..


யாருமே அருகில் நெருங்கக்கூட விரும்பாத தொழுநோயாளிகளை கூடவே இருந்து அன்பு செலுத்தி அரவணைத்த கருணை உள்ளம் அவர்.ஒருமுறை விருந்து ஒன்றுக்கு சென்ற அன்னை திரும்பும் நேரத்தில் அங்கே உண்டவர்கள் மிச்சம் மீதியாக விட்டிருந்த உணவுப்பண்டங்களை ஒரு பொதிக்குள் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டிருந்தாராம். "ஏன் அவ்வாறு எச்சில் பண்டங்களை நீங்கள் எடுக்கிறீர்கள்" என்று கேட்டதற்கு  அவரின் பதில் "இந்த உணவுப்பண்டங்களையெல்லாம் கண்ணால் கூட பார்த்திராத எத்தனையோ ஏழைக்குழந்தைகள் இருக்கிறார்கள்.அவர்களுக்காக தான் "என்றவாறு இருந்தது.ஆம்..அவரின் கருணையை அன்பை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை.

அவரின் பொன்மொழிகள் சிலவற்றையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்...
  • உண்ண உணவில்லாமல் இருப்பதை விட யாராலும் தேடப்படாத விரும்பப்படாத கவனிக்கப்படாத மறக்கப்பட்ட ஒருவராக இருப்பதே மிகப்பெரிய வறுமையாகும்.
  • தலைவன் ஒருவனுக்காக காத்திராதீர்கள்.உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை நீங்களே வழிநடத்திச்செல்லுங்கள்.
  • ஏழைகள் மட்டுமல்ல பணக்காரர்கள் கூட அன்புக்காக கவனிப்புக்காக தங்களுக்கென்று ஒரு சொந்தத்துக்காக  ஏங்கும் தாகம் பசி உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.
  • நீங்கள் மனிதர்களின் குறை நிறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தால் அவர்களில் அன்பு செலுத்துவதற்கு உங்களுக்கு நேரம் கிடைக்காது போய்விடும்.
இதுவரை நான் குறிப்பிட்டுக்கூறிய இந்தப்பெண் யார்.....?

இன நிற மத சாதி பேதங்களை கடந்து எல்லா மனிதருக்குமே பொதுவாக பிடித்தமான ஒருவர் ஈன்ற தாய் தான்.ஆனால் எந்த அன்னையும் பொதுவாக மற்றவர்களை விட தன் பிள்ளையில் தான் கூட பிரியமாக இருப்பாள்.ஆனால் நோயுற்ற வறிய கைவிடப்பட்ட மக்கள் அனைவருக்குமே அன்னையாக இருந்தவர் இந்தப்பெண்..அவர் தான் என்றும் எங்கள் போற்றுதலுக்குரிய அன்னை தெரேசா அவர்கள்....

 1910 ம் ஆண்டு ஆவணி மாதம் 26ம் திகதி அல்பேனிய நாட்டில் பிறந்த அன்னை தெரசா தனது 18 ஆவது வயதில் திருத்துவ சகோதரிகள் குடும்பத்தில் இணைந்துகொண்டு 1931 ம் ஆண்டு இந்தியாவில் தனது பணியைத்தொடங்கினார்.1931 தொடக்கம் 1948 வரையான காலப்பகுதியில் கல்கத்தா புனித மரியாள் கல்லூரியில் கற்பித்த அன்னை தெரசா அக்காலப்பகுதியில் கல்கத்தாவின் சேரிப்புறத்தில் வறுமையாலும் நோயினாலும் அவதிப்படும்  மக்களின் துன்பங்களைப்பார்த்து பார்த்து தனது  வாழ்க்கைப்பாதையையே மாற்றிக்கொள்ள தீர்மானித்தார்.மேலிடத்தின் அனுமதியுடன் தனது கற்பித்தல் தொழிலை விடுத்து வறுமையின் பிடியில் சிக்கிய மக்களுக்காக தனது சேவையினை தொடங்கினார்.அவர் தனது சேவையினை தொடர்ந்து ஆற்றுவற்குரிய நிதிவளம் அவரிடம் இல்லாதிருந்தபோதும் கடவுள் மேல் பாரத்தைப்போட்டு சேரிப்புறப்பிள்ளைகளுக்காக பாடசாலை ஒன்றை ஆரம்பித்து  தனது பணியைத் தொடங்கினார்.காலப்போக்கில் தொண்டர்கள் நிதிவளம் படைத்தவர்கள் அவரோடு இணைந்துகொண்டு பேருதவிபுரிந்ததால் அவர் தனது சேவையினை விரிவுபடுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.இவ்வாறாக தனது பணியைத்தொடர்ந்த அன்னை அவர்கள் 1950 ம் ஆண்டு ஐப்பசி மாதம் 7 ஆம் திகதி  அநாதரவான மக்களுக்கான தர்மஸ்தாபனமொன்றை ஆரம்பித்தார்.ஆதரவற்ற கைவிடப்பட்ட மக்களுக்கு அன்பு காட்டி அரவணைக்கும் இல்லமாக இந்த அமைப்பு திகழ்ந்தது.இன்று ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, அவுஸ்திரேலியா என எல்லாக்கண்டங்களிலும் உள்ள நாடுகளிலும் கிளைகளைக்கொண்டு பரந்துவிரிந்த அமைப்பாக இது திகழ்கிறது.இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படுபவர்கள், அகதிகள், எயிட்ஸ் நோயாளிகள், வதிவிடமற்றவர்கள், போதைவஸ்துவுக்கு அடிமையானவர்கள் என பலவேறு தரப்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை புரிந்து வருகிறது.

அன்னையின் புனிதப்பணிகளுக்காக பல்வேறுபட்ட விருதுகளை அவர் வென்றிருக்கிறார்.உலக சமாதானம் புரிந்துணர்வுக்கான நேரு விருது(1972) உலகின் மிகப்பெரிய கௌரவ விருதான நோபல் பரிசு(1979) என்பவை இங்கே குறிப்பிடத்தக்கவையாகும்.நோபல் பரிசை அவர் ஏற்றுக்கொண்டபோது அவர் ஆற்றிய உரையின் சுருக்கத்தை இதோ இங்கே தந்திருக்கிறேன்...

"I choose the poverty of our poor people. But I am grateful to receive (the Nobel) in the name of the hungry, the naked, the homeless, of the crippled, of the blind, of the lepers, of all those people who feel unwanted, unloved, uncared-for throughout society, people that have become a burden to the society and are shunned by everyone."

மனிதகுலம் கண்ட அந்த மகத்தான பெண்ணைப்பற்றி உங்களுடன் பகிர்ந்துகொண்டதில் நான் மிகவும் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.அக்கிரமங்கள் மலிந்துவிட்ட இன்றைய உலகில் மீண்டும் ஒரு அன்னைதெரேசா உதிக்க வேண்டும்  மனித நேயத்தை  வளர்க்கவேண்டும்  என்பதே இன்றைய நாளில் எங்கள் பிரார்த்தனையாக இருக்கட்டும்...

தகவல்கள்-இணையம்

(எல்லோருக்கும் தெரிந்தவராக இருந்தாலும் கூட இந்த தினத்தில் அவரைப்பற்றி அவர் காட்டிய வழிகளை நினைவுகூர்வது  பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.........:))

13 comments:

மயூ மனோ (Mayoo Mano) said...

சிறு வயதில் கிறிஸ்துவப் பாடசாலையில் படிக்கும் போது அன்னையை போல ஆகுவேனென்று சொல்லித் திரிந்தது நினைவுக்கு வருகிறது. அவரின் கால் தூசிக்கு கூட நாமில்லை...பகிர்வுக்கு நன்றி..

Anonymous said...

"MAGALIRDINA VAZTHUKKAL"

Karunaji

புல்லட் said...

உண்மை ஹாசினி.. கள்ளச்சாமிகள் நிறைந்த உலகில் பணம் புகழுக்காக ஆசைப்படாமல் உதவி உயர்ந்த பேருள்ளம் அது ..

இன்னும் கொஞ்ச காலத்தில நாங்கள் சமஉரிமை பதிவுகள் போடுவேண்டி வரலாம்.. அப்ப இப்பிடி ஆறுதல் பின்னூட்டங்கள் நீங்கள் பொடவேணும் சரியோ? :P

தாருகாசினி said...

வருகைக்கு நன்றிகள் நதியானவள்.....:)

///சிறு வயதில் கிறிஸ்துவப் பாடசாலையில் படிக்கும் போது அன்னையை போல ஆகுவேனென்று சொல்லித் திரிந்தது நினைவுக்கு வருகிறது.///

எனக்குள் அப்படி ஒரு கொள்கையும் இதுவரைக்கும் இருக்கேல்லை...ஆனா இந்தப்பதிவை எழுதும்போது இந்த சராசரி வாழ்க்கையை விடுத்து அப்பிடி ஒரு வாழ்க்கைக்கு போனால் என்ன என்று ஒரு கணம் நான் நினைத்தது என்னவோ உண்மைதான்....:)

தாருகாசினி said...

பெயர் தெரியாத வாழ்த்து தெரிவித்த நண்பருக்கு நன்றிகள்...வெறுமனே வாழ்த்து தெரிவிப்பதை விடுத்து பெண்களை அவர்களின் உணர்வுகளை மதிக்க முன்வந்தால் அதுதான் எங்களுக்கு தரக்கூடிய பெரிய சன்மானம்....:)

தாருகாசினி said...

///இன்னும் கொஞ்ச காலத்தில நாங்கள் சமஉரிமை பதிவுகள் போடுவேண்டி வரலாம்.. அப்ப இப்பிடி ஆறுதல் பின்னூட்டங்கள் நீங்கள் பொடவேணும் சரியோ? :P/////

புல்லட்! ஆண்களுக்கு என்று ஒரு தினம் இருந்தால் அந்த நாளில் சாதனை செய்த பெருமைக்குரிய ஆண்களைப்பற்றியும் பதிவு போட நான் தயங்கமாட்டேன்...நல்ல விஷயங்கள் யார் செய்தாலும் வேறுபாடில்லாமல் ஏற்று கொள்வது தான் என் கொள்கை....அதையே தான் மற்றவர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்....:)

அப்புறம் நம்ம பதிவுக்கு பாவம் மினக்கட்டு எழுதியிருக்கீங்க எண்டு ஆறுதலுக்கு ஒரு பின்னூட்டம் போட்டிருக்கன் எண்டு சொல்லாம சொல்றீங்க...ம்ம்ம்....கவனிச்சு கொள்றன்....:)

Unknown said...

மகளிர் தினத்தின் பதிவாக அன்னை திரேஷாவின் நினைவுகளை கொண்டு வந்தமைக்கு நன்றி
மகளிர் தின வாழ்த்துக்கள் ஹாசினி

தாருகாசினி said...

மிக்க நன்றிகள் கரவைக்குரல் .......உங்கள் குடில் பக்கம் நேரம் கிடைக்குபோது வருகிறேன்....:)

archchana said...

// அக்கிரமங்கள் மலிந்துவிட்ட இன்றைய உலகில் மீண்டும் ஒரு அன்னைதெரேசா உதிக்க வேண்டும் மனித நேயத்தை வளர்க்கவேண்டும் என்பதே இன்றைய நாளில் எங்கள் பிரார்த்தனையாக இருக்கட்டும்...//
அதே தான் .
(இரண்டாவதாக போட்ட படம் முகாம் வாழ்வை ஞாபக படுத்துகிறது.)

தாருகாசினி said...

வருகைக்கு நன்றிகள் அர்ச்சனா....இதிலாவது என் கருத்தோடு ஒத்திருக்கிறீர்கள்....:)...ம்ம்....எங்கள் மக்களின் அந்த அவலத்தையும் இந்த சந்தர்ப்பத்தில் கோடிட்டு காட்டலாம் என நினைத்தேன்.....

கருணையூரான் said...

ஆமாம் அது ஒரு பொருத்தமான விடயம் தான் காசினி அக்கா ..சுருக்கமாக அழகாக தந்துள்ளீர்கள் ...

///அக்கிரமங்கள் மலிந்துவிட்ட இன்றைய உலகில் மீண்டும் ஒரு அன்னைதெரேசா உதிக்க வேண்டும் மனித நேயத்தை வளர்க்கவேண்டும் என்பதே இன்றைய நாளில் எங்கள் பிரார்த்தனையாக இருக்கட்டும்/// அன்னைதெரேசா உதிக்க வேண்டும் என யோசிக்காதிங்க.. நானும் ஒரு அன்னைதெரேசாவாக வரவேண்டும் என யோசியுங்கள்... இதை ஒவ்வொருவரும் செய்தால் உலகம் தானே திருந்தும்

தாருகாசினி said...

மிக்க நன்றிகள் தம்பி....

///அன்னைதெரேசா உதிக்க வேண்டும் என யோசிக்காதிங்க.. நானும் ஒரு அன்னைதெரேசாவாக வரவேண்டும் என யோசியுங்கள்... இதை ஒவ்வொருவரும் செய்தால் உலகம் தானே திருந்தும்///

ஆம்....நான் கூட அதை மாற்றி போடவேண்டும் என்று யோசித்தேன் தான்...ஏனென்றால் அன்னை தெரேசாவே சொல்லியிருக்கிறார் இவ்வாறு.....
"தலைவன் ஒருவனுக்காக காத்திராதீர்கள்.உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை நீங்களே வழிநடத்திச்செல்லுங்கள்."


அதை நினைவுபடுத்தியமைக்கு நன்றிகள்.....

தமிழ்ப்பெண்கள் said...

தமிழ்ப்பெண்கள்

TAMIL PENKAL - www.tamilpenkal.co.cc
தமிழ்ப்பெண்கள் : பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை Center for Tamil Female Bloggers www.tamilpenkal.co.cc

Post a Comment