Wednesday, February 24, 2010

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?

இயந்திரத்தனமான இன்றைய உலகில் ஓடி ஓடி பணம் சம்பாதிக்கும் அவதியில் எங்கள் நிம்மதி, மகிழ்ச்சி என்பவற்றை பெரும்பாலும் இழந்து தவிக்கிறோம். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வோசிங்டனின் மனைவி மார்த்தா வோசிங்டன், எங்கள் மகிழ்ச்சி நாங்கள் இருக்கும் சூழ்நிலையில் மிகவும் குறைந்த அளவிலேயே தங்கியிருப்பதாகவும் ஒவ்வொரு விடயத்தையும் நாம் எவ்வாறு எடுத்துக்கொள்கிறோம் என்பதில் அதாவது எங்கள் பார்வையில் தான் பெருமளவில் தங்கியிருப்பதாகவும் கூறிய பொன்மொழியொன்றை இணையத்தளத்தில் வாசித்த ஞாபகம்.என் அனுபவத்தில் கூட அவர் கூறியது மிகவும் உண்மை என்று அறிந்திருக்கிறேன்.அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள் நாங்கள் எங்களை வெற்றியாளர் என்று நினைத்தால் உண்மையிலேயே வெற்றியாளர் ஆகின்றோம் என்று.அதற்காக நினைத்தால் மட்டும் அப்படி ஆகிவிடமுடியுமா என்று நீங்கள் என்னிடம் கேட்கக்கூடும்.யார் அவ்வாறு திடமாக நம்புகிறார்கள்.உண்மையான ஊக்கம்,அர்ப்பணிப்பு,விடாமுயற்சி,தன்னம்பிக்கை உள்ள ஒருவனே அவ்வாறான ஒரு திட நம்பிக்கையைக்கொண்டிருப்பான். மற்றவர்கள் நான் இதில் வெற்றி பெறுவேனோ இல்லை தோற்றுவிடுவேனோ என்று சந்தேகத்துடனயே இருப்பார்கள்.வெற்றி மட்டுமல்ல எங்கள் மகிழ்ச்சியும் கூட எங்கள் எண்ணங்களில் தான் தங்கியிருக்கிறது.பிரச்சினையில் இருக்கும்போது கூட நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக எங்கள் மனது நம்பினால் உண்மையிலேயே மகிழ்ச்சியுள்ளவர்களாக மாறுவோம்.பிரச்சினைகளை யோசித்து எதுவும் நடக்கப்போவதில்லை என்ற சந்தர்ப்பத்தில் எதற்காக சோகத்தை வரவழைத்து சுயபச்சாதாபத்தையோ இல்லை மற்றையவர்களின் கழிவிரக்கத்தையோ தேடவேண்டும்.நண்பர் புல்லட்டின் பதிவு ஒன்றில் கூட இது சம்பந்தமாக ஒரு சம்பவத்திற்கான எங்கள் மனதின் மறுதாக்கம் பற்றி ஆராய்ந்திருந்தார்.


 "யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம்........"என்ற பாடல் வரி தான் இங்கே என் ஞாபகத்துக்கு வருகிறது.எம்மில் பெரும்பாலோனோர் கொண்டிருக்கக்கூடிய தவறான எண்ணம் என்னவென்றால் கவலைகள்,கஸ்டங்கள் வரும்போது ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று ஏங்கித்தவிப்பதுதான்.தெருவில் படுத்துறங்கும் பிச்சைக்காரன் தொடக்கம் பங்களாவில் பஞ்சணையில் படுத்துறங்கும் கோடீசுவரன் வரைக்கும் ஒவ்வொருத்தருக்கும் ஏதோவொரு வகையில் வாழ்க்கையில் போராட்டம் இருக்கத்தான் செய்யும்.இதை நாம் முதலில் புரிந்துகொண்டாலே எமக்குள்ள கவலையில் பாதி குறைந்து விடும்.

எங்கள் வாழ்க்கையில் ஏதாவதொரு பிரச்சினையை எதிர்கொள்ள நேரும்போது "இவ்வாறு நடந்துவிட்டதே " என்று ஏங்கித்தவித்தே எங்கள் ஆயுளில் பாதியைக்கழித்துவிடுகிறோம்.நடந்ததை நினைத்து ஏங்குவதால் இனி நடக்கப்போகும் எதையும் எம்மால் மாற்றிவிடமுடியாது.எனவே எதற்காக இந்த ஏக்கம் தவிப்பு என்று நம்மை நாமே வருத்திக்கொள்ளவேண்டும்(இங்கு நான் சொல்வது பொதுவான விடயங்களை மட்டுமே.நெருங்கிய உறவொன்றின் பிரிவு,இழப்பு போன்ற உணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களை இந்த வகுப்புக்குள் அடக்கிவிடமுடியாது....அந்தக்காயங்களை ஆற்றுவதற்கு காலம் தான் சிறந்த மருந்து).நாவல் ஆசிரியர் ரமணி சந்திரன் அவர்களின் எழுத்துக்களில் கதைகளில் எனக்கு பிடித்த முக்கியமான விடயமே அவர் கதைகளில் வரும் எந்த கஸ்டம் வரும்போதும் சலித்துவிடாமல் வாழ்க்கையோடு போராடிவெற்றிபெறும் அவரின் நாயகிகள் தான்.முன்பெல்லாம் நான் கூட இதே தவறைத்தான் செய்துவந்திருக்கிறேன்.சிறிய கஸ்டம் வரும்போதும் மனமொடிந்து அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் சோர்ந்து உட்கார்ந்துவிடுவேன்.ஆனால் அனுபவப்பாடங்கள் மூலமாக என்னை நானே வெகுவாக மாற்றிக்கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு பலவாறு சொன்னாலும் நடைமுறைப்படுத்துவதென்பது அவ்வளவு இலகுவானதன்று.கஸ்டங்கள் கவலைகள் வரும்போது மனம் சோர்ந்துபோய்விடுவது தவிர்க்கமுடியாத ஒன்றே.எனவே முழுக்க முழுக்க அவற்றை மறந்துவிடமுடியாவிட்டாலும் குறைந்தபட்சம் கவலை என்னும் கறையான் எங்கள் மனப்புத்தகத்தை அரித்துவிடாமல் பார்க்கவேண்டியது எங்கள் பொறுப்பாகும்.அதற்காக பிரச்சினைகள் வரும்போது யாரையும் ஓடியொளியும்படி நான் சொல்லவில்லை.தைரியமாக எந்த சவாலையும் எதிர்கொள்ளுங்கள்.தீர்க்கக்கூடிய வழிவகைகளை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்துங்கள்.அதற்கு அப்பால் அவற்றையெல்லாம் மனதில்போட்டு குழப்பிக்கொள்ளாதீர்கள். 
இவ்வளவு நேரமும் பிரச்சினைகளில் இருந்து அவற்றின் தாக்கங்களிலிருந்து எவ்வாறு விலகி இருக்கலாம் என்று பார்த்தோம்.இத்தனையையும் தாண்டி எங்கள் மனதைக்காயப்படுத்தக்கூடிய சம்பவங்கள் நிகழக்கூடும்.அவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பத்தில் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி பார்ப்போம்.

ஓய்வாக இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்று சொல்வார்கள்.ஆகவே மனதுக்கு சிறிதும் ஓய்வு கொடுக்காது எந்த நேரமும் ஏதாவது உங்களுக்குப்பிடித்த வேலையைச்செய்தவண்ணம் இருங்கள்.எழுத்துத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் நிறைய வாசிக்கலாம்.அது மட்டுமல்ல குடில்(blog)போன்றவற்றை அமைத்து உங்கள் உணர்வுகளை படைப்புக்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.மனதுக்கு ஆறுதல் தரக்கூடிய விடயங்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று இருக்கக்கூடும்.நானென்றால் மனதுக்குப்பிடித்த பாடல்களைக்கேட்பேன்.சில நேரங்களில் வாய்விட்டு பாடுவதும் உண்டு.(இந்த விசப்பரீட்சையை உங்கள் வீட்டில் செய்யமுன் அதற்குரிய சூழல் இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.ஏனென்றால் ஒரு கிலோ பஞ்சு வாங்கி வீட்டுக்காரருக்கு கொடுத்து கழுதைகள் உள்ளே புகாத வண்ணம் குளியலறைக்கதவு,யன்னல்கள் பலமாக இருக்கின்றன என்பவற்றையெல்லாம் பரிசோதித்துவிட்டே நான் அதை செய்வேன்...ஹி..ஹி..ஹி... ).சில நேரங்களில் உணர்வுகளை கவிதையாக (கவிதை என்ற பெயரில் வரும் கிறுக்கல்கள் தான்) வடிப்பேன்....இப்போதெல்லாம் ஓய்வாக இருக்கும் நேரங்களில் என்னுடைய நினைப்பு முழுவதும் என்னுடைய குடிலில் அடுத்து என்ன எழுதலாம் என்பது பற்றி தான்..:) சிலருக்கு சித்திரம் வரைவதில் ஆர்வம் இருக்கக்கூடும்.இன்னும் சிலருக்கு இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் இருக்கும்.எதுவாயிருந்தாலும் உங்கள் மனதுக்கு திருப்தி சந்தோசம் அளிக்கக்கூடிய விடயங்களை தேர்ந்தெடுத்து செய்யுங்கள்.
அடுத்ததாக உங்கள் பிரச்சினைகளை மனம்விட்டு யாரிடமாவது சொல்லுங்கள்.ஆனால் கேட்பவர் உங்கள் உணர்வுகளைப்புரிந்துகொள்ளவில்லை என்றால் அதனால் வரும் காயத்தை ஆற்றுவதற்கு எந்த மருந்தும் இல்லை.எனவே அதற்கு ஏற்றவாறு உங்கள் நம்பிக்கைக்குரிய நண்பர்களை உறவுகளை தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்றாகும்.இன்று உலகில் தற்கொலைசெய்யும் பலரின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் தீவிரமான பிரச்சினையைக்கொண்டிருந்திருப்பார்கள் என்பதைவிட தங்கள் பிரச்சினைகளை மனம் விட்டு பேசமுடியாதவர்களாகவே பெரும்பாலும் இருந்திருப்பார்கள்.எனவே இந்தச்சந்தர்ப்பத்தில் உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோளையும் முன்வைக்க விரும்புகிறேன்.உங்கள் உறவினர்கள்,நண்பர்கள் ஏன் தெரியாதவர்களாக இருந்தால் கூட தங்கள் பிரச்சினைகளை மனம்திறந்து உங்களிடம் பேசவரும்போது அவர்களுடைய பிரச்சினைகள் தவிப்புக்களை காதுகொடுத்து கேளுங்கள்.குறைந்தபட்சம் கேட்கிறமாதிரி நடிக்கவாவது செய்யுங்கள்.(அவர்கள் அறியாவண்ணம்).நீங்கள் அவ்வாறு செவிமடுப்பதாக அவர்கள் நம்பும்போது அவர்களின் மனதில் உள்ள பாரம் பாதியாகக்குறைந்துவிடும்.

எங்கள் சந்தோசத்தை கெடுக்கும் இன்னொரு முக்கியமான எதிரி ஒப்பீடு.நண்பர்களோடு ,கூட வேலைபார்க்கின்றவர்களோடு எங்களை ஒப்பீடு செய்வது.இறைவனின் படைப்பில் நாங்கள் எல்லோருமே தனித்துவமானவர்கள்.எந்த இடத்தில் நீங்கள் இருக்கிறீர்களோ அந்த இடத்திற்குரிய கடமையை சரிவரச்செய்யுங்கள்.எங்களோடு நாங்களே போட்டிபோட்டு ஒவ்வொரு நாளும் எங்களை நாங்கள் வளர்த்துக்கொள்ளலாம்.ஆரோக்கியமான வளர்ச்சிக்காக மற்றவர்களோடு போட்டிபோடலாம்.அதில் பிழையில்லை.ஆனால் மற்றவர்களின் வளர்ச்சியைபார்த்து மனம் வெந்துபோவதற்காக அல்ல.பெரியவர்கள் சொல்வார்கள் "உனக்கு கீழ் இருக்கும் கோடி நினைத்து நிம்மதி தேடு "என்று.எங்களை விட உயரத்தில் இருப்பவர்களை பார்த்து மனம் நோவதை விட்டு எங்களை விடவும் குறைந்த மட்டத்தில் இருப்பவர்களை நினைத்துப்பார்த்து நிம்மதி அடையவேண்டும் என்று.என்னதான் இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் இதை கடைப்பிடிப்பது என்பது கொஞ்சம் கடினமான விடயம் தான்.அதற்குரிய மனப்பக்குவம் இலகுவில் வந்துவிடாது.

இறைவனின் படைப்புக்களிலேயே உன்னதமானது மனிதப்பிறவி.எம்மில் பலர் அந்த மகத்துவத்தை புரியாமலே இருக்கிறோம்.பிரச்சினைகள் சோதனைகள் வரும்போது தைரியமாக அவற்றை எதிர்கொள்ளுங்கள்.அந்த சவாலை நீங்கள் சமாளித்து வெற்றிகொள்ளும்போது எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட மகிழ்ச்சி திருப்தி உங்களுக்குள் ஏற்படுவதை உணர்வீர்கள்.என் அனுபவத்தில் நான் உணர்ந்திருக்கிறேன்.ஆம்......

"பூலோகம் ஆனந்தத்தின் எல்லை இந்த பூமிக்கு கண்ணீர் சொந்தம் இல்லை".......இந்தப்பாடல் வரிகளை எப்போதும் உங்கள் மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

இத்தனை விளக்கங்களுடன் கூறிய எல்லா கருத்துக்களையும் கவிஞர் இந்தப்பாடலில் அழகாக அடக்கித்தந்திருக்கிறார்.

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே அங்குமிங்கும் கொட்டிக்கிடக்கு
கண்ணிரண்டு செவியும் திறந்து வைத்தால் சுத்தி சுத்தி இன்பமிருக்கு
புயல் வந்து மையம் கொண்டாலும் பூவின் இதழில் புன்னகை இருக்கு
உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது..........

இருட்டைக்கண்டு மலைப்பது மடமை
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை
ஆதவன் செய்யும் வேலை தன்னை
அகலும் செய்துவிடும்

மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும் பட்டாம்பூச்சி அழுவது கிடையாது
உன் நெஞ்சிலே சாந்தி கொள் உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது
மனித ஜாதி ஒன்று தான் சிரிக்கத்தெரிந்தது.....

இவ்வாறாகத்தொடர்ந்து செல்கிறது பாடல்.இந்த அற்புதமான வரிகளுக்கு சொந்தக்காரர் யார் என்று நினைக்கிறீர்கள்...அவர் வேறு யாருமல்ல.....
எங்கள் வைரவரிக்கவிஞர் கவிப்பேரரசுவே தான்......

28 comments:

அண்ணாமலையான் said...

gud post... congrats

மயூ மனோ (Mayoo Mano) said...

அருமையான படைப்பு அக்கா...ஆழமான கருத்துக்களைப் போகிற வழியில இந்தா பிடி என்று தூவிவிட்டுப் போகிற மாதிரி இருந்தது..

இடைக்குள்ள சுவாசிச்சீங்களா? அப்பாடா... :)

Congratzma...

Anonymous said...

nice

nl said...

ம்ம்ம்ம்............... இதுக்கெல்லாம் நான் தானே ரோல் மொடல்.... சும்மா ரீல் விடக்கூடாது... என்னை பாத்து நல்லா வந்த ஆக்களில் ஒருவர் என்று உன்னை பெருமையா சொல்லிகிறேன்...
ஹ ஹ ஹா.......

ஆர்வா said...

சூப்பர் பதிவுங்க

archchana said...

//..கவலைகள்,கஸ்டங்கள் வரும்போது ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது என்று ஏங்கித்தவிப்பதுதான்...//
உள்ளதை உள்ளபடி தானே நினைக்க முடியும்.

//..ஓய்வாக இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்று சொல்வார்கள்.ஆகவே மனதுக்கு சிறிதும் ஓய்வு கொடுக்காது எந்த நேரமும் ஏதாவது உங்களுக்குப்பிடித்த வேலையைச்செய்தவண்ணம் இருங்கள்..//
அதற்காக தான் எல்லோருடைய blog உம் வாசிக்கிறேன். ஆனால் முடியவில்லை.
இதெல்லாம் எழுதவும் வாசிக்கவும் சரியாக இருக்கும். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை.
இழப்பின் வலியை அனுபவித்தவனால் தான் அதன் தாக்கத்தின் கொடுமையை உணர முடியும்.
எனினும் தங்கள் பதிவு நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

தாருகாசினி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் அண்ணாமலையான்...

தாருகாசினி said...

நதியானவள்! உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றிகள்.3 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி தான் இந்த ஆக்கத்தை கொண்டுவந்திருக்கிறேன்...நிறையவே மூச்சு விட்டிருக்கிறேன்.....:)

தாருகாசினி said...

பெயர் தெரியா நண்பருக்கும் நன்றிகள்....

தாருகாசினி said...

வாருங்கள் அர்ச்சனா....இங்கே நான் சொன்ன கருத்துகளில் கிட்டத்தட்ட எல்லாமே என் சொந்த வாழ்வில் அனுபவித்து கடைப்பிடித்து என்னால் நடைமுறைப்படுத்தகூடியதாக இருந்தவை தான்..அந்த நம்பிக்கையில் தான் மற்றவர்களாலும் முடியும் என்று எதிர்பார்த்து எழுதி இருக்கிறேன்....:)

///உள்ளதை உள்ளபடி தானே நினைக்க முடியும்.////
உங்கள் மனதில் உள்ளது உங்களுக்கு தெரியும்.....மற்றவர்களின் மனதில் சந்தோசம் தான் நிரம்பி வழிகிறது என்று எவ்வாறு கண்டுபிடித்தீர்கள்.......வேண்டுமென்றால் நீங்கள் சந்தோசமாக நல்லா இருக்கிறதா நினைக்கிற ஒருத்தருடன் ஒரு மணித்தியாலம் மனம் விட்டு பேசிப்பாருங்கள் ...அப்போது புரியும் கஷ்டம் கவலை எல்லோருக்கும் பொதுதான் என்று...

////இதெல்லாம் எழுதவும் வாசிக்கவும் சரியாக இருக்கும். ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை.
இழப்பின் வலியை அனுபவித்தவனால் தான் அதன் தாக்கத்தின் கொடுமையை உணர முடியும்.////
இங்கே இழப்பு என்று எதை சொல்கிறீர்கள் என்று சரியாக விளங்கவில்லை...நீங்கள் சொல்வது உறவுகளின் இழப்பு என்றால் அதைப்பற்றி அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கிறேன்....இதோ (இங்கு நான் சொல்வது பொதுவான விடயங்களை மட்டுமே.நெருங்கிய உறவொன்றின் பிரிவு,இழப்பு போன்ற உணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களை இந்த வகுப்புக்குள் அடக்கிவிடமுடியாது....அந்தக்காயங்களை ஆற்றுவதற்கு காலம் தான் சிறந்த மருந்து)..இருந்தாலும் ஏதோ நீங்கள் சொல்வதை பார்த்தால் நீங்கள் மட்டும் தான் பெரிய இழப்பை சந்தித்தவர் போல்...(உங்களை குறைகூறவில்லை...)..உங்கள் இடத்திலிருந்து பார்க்கும்போது உங்கள் பிரச்சினை உங்களுக்கு பெரிதாக தெரியும் ...அதே போல் தான் மற்றவர்களுக்கும்....

தாருகாசினி said...

வாருங்கள் வானம்பாடி.....ஆமா நீங்க தானே என்னோட ரோல் மொடல்...அப்பிடி சொல்லிதிரியிறீங்க எண்டு கேள்விப்பட்டன் ...:)

தாருகாசினி said...

கவிதை காதலன்! வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க....:)

Kaipillai said...

சாதாரண தரப்பரீட்சையில் "எண்ணமே வாழ்க்கை" என்ற தலைப்பில் கட்டுரை வரைக எனக்கேட்கப்பட்டதற்கு எழுதப்பட்டதோ என்ற சந்தேகம் கிளம்பும்படியான பாணியில் வரைந்து இருந்தாலும் விக்ரமன் படவசனங்கள் போல அடிக்கடி விதைக்கப்பட்டிருக்கும் செண்டிமெண்ட் கருத்துக்கள் மனதை நச் என்று தொட்டுவிட்டுச்செல்கின்றன.
மார்த்தா வோசிங்டனை விட பில் கிளிங்டன் மனைவி தான் "எந்த வகையான சூழ்நிலையிலும் அந்த மேட்டர கூட சின்ன மேட்டரா எடுத்து" மனமகிழ்சி குறையாம இருந்தவ.அதால அவ சொன்ன கருத்தை போட்டிருந்தா இத விட பொருந்தியிருக்கும் என்பது அடியேன் கருத்து.
அத்தோட துணைக்கு புல்லடையும் கூப்பிட்டு தமிழ் புளொக்கர் உலக அடியாழம் பார்க்கிறதெண்டு முடிவு பண்ணிட்டியள் போல. கவனம் கவனம்.

தாருகாசினி said...

வாருங்கள் கைப்பிள்ளை! உங்களிடம் பிடித்த விடயமே உள்ளதை உள்ளபடி நேரே சொல்வதுதான்...

////சாதாரண தரப்பரீட்சையில் "எண்ணமே வாழ்க்கை" என்ற தலைப்பில் கட்டுரை வரைக எனக்கேட்கப்பட்டதற்கு எழுதப்பட்டதோ என்ற சந்தேகம் கிளம்பும்படியான பாணியில் வரைந்து இருந்தாலும்////
அந்தளவு மோசமாவா இருக்கு??

///மார்த்தா வோசிங்டனை விட பில் கிளிங்டன் மனைவி தான் "எந்த வகையான சூழ்நிலையிலும் அந்த மேட்டர கூட சின்ன மேட்டரா எடுத்து" மனமகிழ்சி குறையாம இருந்தவ.அதால அவ சொன்ன கருத்தை போட்டிருந்தா இத விட பொருந்தியிருக்கும் என்பது அடியேன் கருத்து.////
இணையத்தில் நான் பார்த்தது அவருடைய கருத்தை மட்டுமே ....எனக்கு தெரிந்த பொன்மொழியை வைத்து எழுதினேன்..தகவலுக்கும் கருத்துக்கும் நன்றிகள் :)

///அத்தோட துணைக்கு புல்லடையும் கூப்பிட்டு தமிழ் புளொக்கர் உலக அடியாழம் பார்க்கிறதெண்டு முடிவு பண்ணிட்டியள் போல. கவனம் கவனம்.////
இரு தினங்களுக்கு முதல் வாசித்த புல்லட்டின் பதிவுக்கும் எனது பதிவுக்கும் சம்பந்தம் இருப்பதுபோல் தோன்றியதால் அந்த இணைப்பைகொடுத்தேன்...அது ஏன்...புல்லட் என்றதுமே அப்பிடி ஒரு ரியாக்சன் உங்களிடமிருந்து....?:)

புல்லட் said...

அருமையான பதிவு ஹாசினி.. ஆனால் சற்று பெரிதாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.. ஒரே பந்தியில் சுவையான பல கறிகளை பரிமாறும்போது எதைச்சுவைப்பது என்று தெரியாது போய்விடுகிறது.. ஆனால் அனைத்தும் தனித்தனியே சுவையானவை..

நான் நீ மட்டுமல்ல சகலரும் வாழ்க்கையில் போராடுகிறார்கள்.. கசப்பான காலங்களை மறந்துவிடவேண்டும், ஓய்வாக இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் , அடுத்தவர் பிரச்சனையை அமைதியாக செவி மடுக்கவேண்டும், ஓப்பீடு எனும் எதிரி என்று பயங்கரமான பலவிடயங்களை நானென்றால் தனித்தனிப்பதிவாக எழுதி விளையாடியிருப்பேன்.. :)

மிகவும் பிரயோசனமான பதிவு.. கையாளும் தலைப்புக்களை குறைத்து அளவைச்சுருக்கும்போது மேலும் பலரைச்சென்றடையும்..

வாழ்த்துக்கள்.. :)

archchana said...

//ஏதோ நீங்கள் சொல்வதை பார்த்தால் நீங்கள் மட்டும் தான் பெரிய இழப்பை சந்தித்தவர் போல்...//
இப்படியான comment தாங்கள் மட்டுமல்ல பலர் எனக்கு சொல்லியிருக்கிறார்கள்.
நீங்கள் சொல்வது உறவுகளின் இழப்பு என்றால் அதைப்பற்றி அடைப்புக்குறிக்குள் கொடுத்திருக்கிறேன்....இதோ (இங்கு நான் சொல்வது பொதுவான விடயங்களை மட்டுமே.நெருங்கிய உறவொன்றின் பிரிவு,இழப்பு போன்ற உணர்வு சம்பந்தப்பட்ட விடயங்களை இந்த வகுப்புக்குள் அடக்கிவிடமுடியாது....அந்தக்காயங்களை ஆற்றுவதற்கு காலம் தான் சிறந்த மருந்து).
அது சரி எனக்கும் தெரிகிறது. ஆனாலும் உதாரணமாக இப்படி இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் வன்னியில் வசதியாக இருந்த ஒரு பெண்ணிற்கு வீட்டின் ஒரு கல் கூட அடையாளத்திற்கு இல்லை.கையிலே எதுவுமே சொத்துக்கள் கொண்டுவரவில்லை. குறித்த ஒரு காலப்பகுதியிற்குள் சொந்த தம்பி கட்டாயத்தின்பேரிலும் சாப்பாடு இல்லாமல் சித்தப்பாவும் கண் முன்னே உறவினர் பலரும் இறந்துவிட்டனர். கட்டிய கணவனையும் சித்தியின் மகனையும் காணவில்லை.எந்நேரமும் அப்பாவை தேடும் பிள்ளைகள் கேட்கும் பதில் சொல்லமுடிய கேள்விகள், இப்படி துன்பமே தொடர் கதையானால் .......
மார்த்தா வோசின்டனும் கிலாறியும் பின்பக்கமாக தான் ஓட வேண்டிவரும்.

ஆதிரை said...

தாருகாசினி,

நல்லதொரு பதிவு. புல்லட் சொன்னது போன்று, விடயங்களைச் சுருக்கி இருந்தால் என்னைப் போல பஞ்சி பிடித்தவனுக்கு உதவியாக இருக்கும்

தாருகாசினி said...

உங்கள் ஆரோக்கியமான விமர்சனத்துக்கு மிக்க நன்றிகள் புல்லட்..

///ஆனால் சற்று பெரிதாகிவிட்டதோ என்று தோன்றுகிறது.. ////

என் எண்ணத்தில் தோன்றிய எல்லாவிடயங்களையும் உள்ளடக்க வேண்டும் என்று குறியாக இருந்ததால் நீளத்தை பற்றி கொஞ்சம் அக்கறைப்படாமல் தான் இருந்துவிட்டேன்..:)

///கையாளும் தலைப்புக்களை குறைத்து அளவைச்சுருக்கும்போது மேலும் பலரைச்சென்றடையும்..///

உங்கள் ஆலோசனைகள் கருத்துக்களை இனிவரும் பதிவுகளில் கவனத்தில் கொள்கிறேன்....:)

தாருகாசினி said...

///நல்லதொரு பதிவு. புல்லட் சொன்னது போன்று, விடயங்களைச் சுருக்கி இருந்தால் என்னைப் போல பஞ்சி பிடித்தவனுக்கு உதவியாக இருக்கும்///

கருத்துக்கு மிக்க நன்றிகள் ஆதிரை...அதே பதில் தான் ....இனிவரும் பதிவுகளில் நீளத்தை கவனத்தில்கொண்டு எழுதுகிறேன்....:)

தாருகாசினி said...

/////ஆனாலும் உதாரணமாக இப்படி இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் வன்னியில் வசதியாக இருந்த ஒரு பெண்ணிற்கு வீட்டின் ஒரு கல் கூட அடையாளத்திற்கு இல்லை.கையிலே எதுவுமே சொத்துக்கள் கொண்டுவரவில்லை. குறித்த ஒரு காலப்பகுதியிற்குள் சொந்த தம்பி கட்டாயத்தின்பேரிலும் சாப்பாடு இல்லாமல் சித்தப்பாவும் கண் முன்னே உறவினர் பலரும் இறந்துவிட்டனர். கட்டிய கணவனையும் சித்தியின் மகனையும் காணவில்லை.எந்நேரமும் அப்பாவை தேடும் பிள்ளைகள் கேட்கும் பதில் சொல்லமுடிய கேள்விகள், இப்படி துன்பமே தொடர் கதையானால் .......
////

அர்ச்சனா! ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு....:)
இங்கு நான் ஆராய்ந்தது எமது அன்றாட வாழ்வில் நடைபெறும் சம்பவங்களை பற்றி தான்..வன்னி இடப்பெயர்வு போன்ற அவலச்சம்பவங்களை இங்கே நான் கூறிய விளக்கங்களுக்குள் அடக்கிவிடமுடியாது....அந்த துன்பியல் சம்பவத்தில் இருந்து மீள்வது எப்படி என்பது பற்றி தனியொரு தலைப்பின் கீழ் வேண்டுமென்றால் ஆராயலாம்...விளக்கம் போதும் என நினைக்கிறேன்....:)

///மார்த்தா வோசின்டனும் கிலாறியும் பின்பக்கமாக தான் ஓட வேண்டிவரும்.///

அவர்கள் குறிப்பிட்டது கூட எமது அன்றாட வாழ்வில் நாம் எதிர்நோக்கும் சவால்கள் பிரச்சினைகள் பற்றி தான்...பாவம் அவர்களை வம்புக்கு இழுக்காதீர்கள் :)

வந்தியத்தேவன் said...

அருமையான பதிவு புல்லட் ஆதிரை சொன்னது போல் கொஞ்சம் நீளம் வாழ்க்கை என்பது போராட்டம் அதனை மகிழ்ச்சியுடன் போராடினால் எதையும் சாதிக்கலாம்.

தாருகாசினி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் வந்தி அண்ணா! அதே பழைய பல்லவி தான்...இனிவரும் பதிவுகளில் நீளத்தை கவனத்தில்கொண்டு எழுதுகிறேன்....:)

கருணையூரான் said...

///சில நேரங்களில் உணர்வுகளை கவிதையாக (கவிதை என்ற பெயரில் வரும் கிறுக்கல்கள் தான்) வடிப்பேன்....///எங்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்களேன்..

பலர் பலவகையான ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருக்கின்றார்கள்...வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்


குடிலுக்கை வந்து சிறிது காலத்துக்குள் இவ்வளவு பிரபல்யமாகிடிங்களே
அந்த இரகசியத்தை சொல்லுங்களேன்
நாங்களும் ஆகலாமெலோ

தாருகாசினி said...

கருணையூர் தம்பி! வருகைக்கு நன்றிகள் ....

///சில நேரங்களில் உணர்வுகளை கவிதையாக (கவிதை என்ற பெயரில் வரும் கிறுக்கல்கள் தான்) வடிப்பேன்....///எங்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்களேன்../////
நேரம் வரும்போது கட்டாயம் பகிர்ந்துகொள்கிறேன்....

///குடிலுக்கை வந்து சிறிது காலத்துக்குள் இவ்வளவு பிரபல்யமாகிடிங்களே
அந்த இரகசியத்தை சொல்லுங்களேன்
நாங்களும் ஆகலாமெலோ///
அந்த ராணுவ ரகசியமெல்லாம் இப்பிடி பப்ளிக் ல சொல்லேலாது...தனியா உங்கள சந்திக்கேக்க சொல்றன்...:) :) :)

Kiruthigan said...

அருமை..
இதைதானே எல்லோரும் தேடுகின்றோம்..

யசோதா.பத்மநாதன் said...

பயனுள்ள கருத்துக்களை மிக அழகாக - உள்ளார்ந்த அன்போடும் உண்மையான அக்கறையோடும்,பொறுப்போடும் எழுதி இருக்கிறீர்கள் ஹாஷினி.

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

உங்கள் வலைப் பக்கம் வந்ததில் மகிழ்ச்சி.

தாருகாசினி said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் Cool Boy!

தாருகாசினி said...

வாருங்கள் மணிமேகலா!உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி...

ஒரு சில தினங்களுக்கு முன் தான் உங்கள் வலைப்பக்கம் வந்தேன்...சில பதிவுகள் ஓரிரு வரிகள் மட்டும் தான்..ஆனால் ஆழமான கருத்துக்கள்...வள்ளுவரின் திருக்குறள் மாதிரி...மிகவும் ரசித்தேன்...எனக்கென்னவோ எங்கள் இருவரதும் அலைவரிசை ஒத்திருப்பது போல் ஒரு எண்ணம்...:)

Post a Comment