Sunday, October 23, 2011

அன்னைக்கோர் பதிவாஞ்சலி

இலங்கையிலுள்ள எனக்குத்தெரிந்த ஒரு சில அம்மன் ஆலயங்களை மனதில் வைத்து இந்த கிறுக்கலை வரைந்திருக்கிறேன்..ஆம் என் கிறுக்கல் தொல்லையில் இருந்து என் தாயும் தப்பவில்லை என்பது உங்களுக்கு வருத்தம் தரலாம்.பிள்ளையின் தொல்லையை அன்னை பொறுப்பாள் தானே..:)

எனக்கு மட்டுமல்ல இந்த உலகத்தில் வாழும் அத்தனை உயிர்களுக்கும் அன்னையாக அகிலத்தை ஆளும் என் தாய் அகிலாண்ட ஈஸ்வரிக்காக இந்தப்பதிவு...


பன்றியின் தலை தந்து
பக்தனை காத்த
பன்றித்தலைச்சி தாயே
மட்டுவிலூர் வாழும் மாரியும் நீயே
மலை சூழ் மாத்தளையின் முத்துமாரி தாயே
மனமிரங்க மாட்டாயோ 
மனக்குறைதான் தீராயோ
சிட்டிவேரம் வாழும் என் சிவகாம சுந்தரியே
வலிக்கும் வரை நடந்துவிட்டேன் 
வழி எதுவும் தெரியவில்லை
வந்திடம்மா வழித்துணையாய் என் பகவதித்தாயே
கருணையூர் வாழும் கருணைக்கடலே
புவனத்தை ஆளும் ஈஸ்வரி நீயே
கருணையூர் குடிகொண்ட புவனேஸ்வரித்தாயே
கண் திறந்து பாராயோ
கருணையது பொழியாயோ
அல்லல் தீர்க்க வந்திடம்மா
அல்வாயூர் முத்துமாரி தாயம்மா
அலைகடல் சூழ் நயினைதன் கரையிலமர்ந்தவளே
அரவக்குடைகொண்ட என் நாகபூசணி தாயே
உனை வேண்டிப்பாடுகிறேன் ஒயாது இங்கு
ஓடிவரமாட்டாயோ என் தாயே நீயிங்கு

பாமாலை நிதமுனக்கு சூட்டினேன் என் தாயே
பூவிழி மலர்ந்து பாராயோ உன் மகளை
அன்றாடம் உன்னருளை
மன்றாடி வேண்டினேன்
அன்பு மழை பொழியாயோ
என் அன்னையே அபிராமியே

உன் அன்பு வேண்டும்
எப்போதும் எனக்கிங்கு
கலக்கமிங்கு எனக்கேது
கலங்கரை விளக்கமாய்
காளியே நீயிருக்க
ஒரு காலும் மறவாது
உனை நினைக்கும் வரம் வேண்டும்
தாழாத உன் அன்பு
எப்போதும் உடன் வேண்டும்
இது போதும் தாயே
உந்தன் பேரன்பு
இது போதும் எனக்கு

இப்போது இந்தக்கணம் என் மனதை ஆட்கொண்டுகொண்டிருக்கும் பாடல் கொல்லூர் மூகாம்பிகை தாய் மீது பாடப்பட்ட மலையாளமொழிப்பாடல்.இப்பாடலையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.




Saturday, October 22, 2011

தாலாட்டு பாடல்கள்

சிறிய வயதில் தாயின் தாலாட்டை எல்லோரும் கேட்டிருப்பீர்கள்..என் தாயும் பாடியிருப்பார்.ஆனால் எனக்கு அப்படியான நினைவுகள் எதுவும் ஞாபகத்தில் இல்லை.இங்கு நான் சொல்லவரும் தாலாட்டு பெரியவர்களான பிறகும் நம்மில் பெரும்பாலோனோர் இசையின் தாலாட்டுடன் தான் வாழ்கிறோம் அந்த தாலாட்டில் தான் உறங்குகிறோம்.இங்கு நான் ரசித்த மனதுக்கு இதமான என்னை உறங்கவைக்கும் தாலாட்டுகளில் தற்சமயம் ஞாபகம் வந்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்..

ஓ பாப்பா லாலி பாட்டிலேயே "லாலி" வருகிறது.ஆர்ப்பாட்டமில்லாத அடக்கமான பின்னணி இசை அன்பை பிழிந்து தரும் வார்த்தைகள் அவற்றை உணர்ந்து பாடும் மனோவின் இனியகுரல்..யாருக்கு தான் இந்த தாலாட்டு பிடிக்காமல் போகும்..

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட காதலன் குழந்தை தான் காதலி
ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில் கொதித்ததா குளிர்ந்ததா கூறடி

இதை காப்பதும் என்றும் பார்ப்பதும் இந்த தாய் மனமே

தன் காதலனோ கணவனோ துன்பத்தில் துவளும்போது தாயாக மாறும் பெண்மனம் துன்பம் தனைத்தாக்கும்போது தன் உறவிடமிருந்து தாயன்பை எதிர்பார்த்து நிற்கும்.தாயுள்ளம் படைத்த கணவன் கிடைத்தால் ஒரு பெண்ணுக்கு அதைவிட வேறு என்ன பாக்கியம் இருக்கமுடியும்.

பேரன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளோடு இசைஞானியின் அற்புதமான இசை சேர்ந்து காதில் பாயும்போது பேரிரைச்சலோடு ஆர்ப்பரிக்கும் மன அலைகள் கூட அடங்கி ஓய்ந்துவிடாதா என்ன...




"ஆகாசவாணி நீ தான் என் ராணி சோஜா சோஜா சோஜா தாய் போல நானே  தாலாட்டுவேனே சோஜா சோஜா சோஜா"

இந்தப்பாடலிலும் அதே தாயன்பு இருக்கிறது..உணர்வுகளை குரலில் வெளிப்படுத்துவதில் பாலசுப்ரமணியத்துக்கு அடுத்ததாக எனக்கு பிடித்தவர் ஹரிகரன்...

இந்தப்பாடலில் அதிகம் பிடித்த வரிகள் "அன்னை தந்தையாக உன்னை காப்பேனம்மா அன்பு தந்து உன்னில் என்னை பார்ப்பேனம்மா" டியர் டார்லிங் செல்லம் பட்டு என எத்தனையோ வார்த்தைகள் இருந்தாலும் "அம்மா" என்ற வார்த்தையில் ஏதோமாயமந்திரம் கலந்த ஒரு அன்பு இருப்பது போல் ஒரு உணர்வு..

அம்மா என்ற வார்த்தையே அன்பின் வடிவமாக இருப்பதாலோ என்னவோ அம்மா என்று யாரும் அழைத்தால் ஆழமான அன்பை உணர்கிறேன்..

எத்தனையோ சொந்தங்கள் இருந்தாலும் உணர்வுகளை புரிந்து உயிருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் வெகுசிலராக தான் இருப்பார்கள்..
"உயிருக்கு அருகினில் இருப்பது நான்  தானே இதயத்தின் சிகரத்தில் இருப்பவள் நீ தானே "

எல்லாவற்றுக்கும் மேலாக சந்தர்ப்பம் அறிந்து தேவா தந்த அற்புதமான மெல்லிசைதான் இந்தப்பாடலின் அடி நாதம்..
 

5 பாடல்கள் போடலாம் என்று ஆரம்பத்தில் நினைத்தேன்.ஆனால் பதிவின் நீளம் கூடுவது போல் இருப்பதால் இரண்டு பாடல்களோடு நிறுத்திக்கொள்(ல் :P))கிறேன்..

twitter ல் ஒரு பாட்டுக்கு 5 tweets வீதம் இரண்டு பாட்டுக்கும் 10 tweets போட்டு பின் தொடர்பவர்களை கொல்லாமல் ஒட்டுமொத்தமாக பதிவிடுதல் நலம் என நினைக்கிறேன்..விரும்பியவர்கள் மட்டும் கொலைக்களத்தில் மாட்டலாம் இல்லையா..:)

Friday, December 10, 2010

மனம் கவர்ந்த நாயகன்

தவிர்க்கமுடியாத சிலகாரணங்களால் பதிவுலகில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.எழுதி எழுதி மட்டுமல்ல எழுதாமல் மௌனமாக இருந்து கூட உங்களை கொல்ல முடியும் என்று நிரூபிப்பதற்காக தான்  என்று  வைத்துக்கொள்ளுங்களேன்.:P (நீ எழுதவில்லை என்று இங்கு யார் கவலைப்பட்டார்கள் என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்கும்  கேட்கிறது.சரி.விடுங்கள்.தனிப்பட்ட ரீதியில் அதை பேசித்தீர்த்துக்கொள்வோம்.;)

பதிவு எழுதியே ஆகவேண்டும் என்று யாரும் கொலை மிரட்டல் விடுத்திருந்தால் கூட "முடிந்ததை செய்துகொள்ளுங்கள்" என்று என்வழியில்  போய்க்கொண்டே இருந்திருப்பேன்.என் அபிமானப்பதிவர்களில் ஒருவர் மணிமேகலா.பதிவுலகில் என் அன்புத்தோழியும் கூட.அவர் விடுத்ததோ பதிவு  எழுதியே ஆகவேண்டும் என்ற அன்பு மிரட்டல்.வேறு வழியில்லை.பணிந்துவிட்டேன் தோழி உங்கள் அன்புக்கு.:)


நீண்டகாலமாக பதிவு எழுதாதனால் எழுத நினைத்தால் ஆயிரத்தெட்டு தலைப்பு மனதுக்குள் வந்து நிற்கிறது. :)அதில் ஒன்றை இப்போது தெரிவுசெய்து எழுதுகிறேன்.எத்தனையோ திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன்.சில படங்களில் வரும் கதாபாத்திரங்களை  இரசித்துப்பார்த்திருக்கிறேன்.ஆனால் சினிமாவில் வரும்  நாயகர்கள் எல்லாம் சினிமாவில் மட்டும் தான் நாயகனாக இருப்பதுபோன்ற மன  உணர்வு அடிக்கடி என் மனதில் தோன்றும்.அதனால் நல்ல கதையம்சம் உள்ள பொழுதுபோக்கான திரைப்படங்கள் வரும்போது படத்தை ரசிப்பதோடு  மட்டும் நிறுத்திக்கொள்வேன்.எந்த சினிமா நாயகன் மீதோ நாயகி மீதோ தனிப்பட்ட அபிமானத்தை ஏற்படுத்திக்கொள்வதில்லை. யாரும்  வெள்ளித்திரை என்ற மாயையை தாண்டி அப்படி என் மனதை பெரிதாக கவரவும் இல்லை...:).ஆனால் எத்தனையோ அடி திரையரங்கில் எத்தனையோ  வர்ணஜாலங்கள் காட்டி கவரமுடியாத என் மனப்போக்கை வெறும் எழுத்துக்களால் ஆட்டிப்படைத்துவிட்டார் எழுத்தாளர் அமரர் கல்கி தன்  பொன்னியின் செல்வன் என்ற நாவலில்.நீங்கள் பொன்னியின் செல்வன் ஏற்கனவே வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.இந்தப்பதிவை தொடர்ந்து வாசித்துச்செல்ல அந்த நாவல் படித்த அனுபவம் அவசியமானது என்று கருதுகிறேன்.

இந்தப்பதிவை பொன்னியின் செல்வன் நாவல் பற்றிய விமர்சனம் என்று யாராவது பிழையாக விளங்கிக்கொண்டு ஏமாந்துபோனால் அத்ற்கு நான்  பொறுப்பல்ல.:).இந்த பதிவு நாவலின் நாயகன் பேரரசன் இராஜராஜ சோழன் பாத்திரத்தைப்பற்றியது மட்டுமே.கல்கியின் எழுத்துக்களோடு என்றோ  ஒரு காலத்தில் உண்மையாக நடந்த சம்பவங்கள் என்ற நினைப்பும் தான் இந்த பாத்திரத்தில் அளவுகடந்த அபிமானத்தை எனக்கு  ஏற்படுத்தியிருக்கிறது என்று நம்புகிறேன்.சரித்திர ஆராய்ச்சியின் அடிப்படையிலே தன்னுடைய கற்பனை வர்ணனை திறமைகளையும் சேர்த்து  கல்கி இந்த நாவலை படைத்திருக்கிறார்.அவர் குறிப்பிட்ட சம்பவங்களை அடிப்படையாக வைத்துத்தான் என் அபிமான நாயகனின் புகழ்பாட  இருக்கிறேன்.


இளம் வயதிலேயே எதிரிப்படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரு வீரன்,தேவர்களை நிகர்த்த அழகுடைய ஒரு அரசிளங்குமாரன், பல தேசங்களை  ஒரு குடைக்கீழ் ஆண்ட மன்னாதிமன்னன் இவை போதாதா அருண்மொழிவர்மனை அனைவருக்கும் பிடித்துப்போவதற்கு. ஆம்.இந்த அடிப்படைதகுதிகளை  தாண்டி பல குண இயல்புகளை கல்கி தன் நாவலினூடு சொல்லிச்செல்கிறார்.உண்மையைச்சொன்னால் பொன்னியின்செல்வன் நாவல் ஒரு தடவை மட்டும் தான்  முழுமையாக வாசித்திருக்கிறேன்.ஆனால் எனக்குப்பிடித்த காட்சிகள் கட்டங்களை திரும்பதிரும்ப வாசித்து மகிழ்வேன்.அவற்றை விலாவாரியாக  விளக்கிச்சொல்வற்கு தொடர்பதிவு தேவையென்பதால் இந்தப்பதிவில் பொன்னியின் செல்வரை மட்டும் என்னோடு அழைத்துவருகிறேன்.

கல்கி பொன்னியின் செல்வரை அறிமுகம் செய்யும் இடத்திலேயே "இந்த கதைக்கு பெயர் தந்த அரசிளங்குமாரரை தமிழகத்தின் சரித்திரத்திலேயே ஈடு இணைசொல்லமுடியாத வீரரை....."என்றவாறான வர்ணனை மூலமாக இராஜராஜ மன்னனை  எங்கள் உள்ளத்தில் செதுக்கிவிடுவார்.

வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் பொன்னியின் செல்வரை சந்திக்க இலங்கை வரும் காட்சியில் போர் நடந்த அனுராதபுரம் போன்ற இடங்களில் கூட  மக்கள் போர் நடந்ததற்கான சுவடுகள் எதுவுமே இல்லாது களிப்புடன் இருப்பதாக கதையில் காட்டியிருக்கிறார் கல்கி.இன்னொரு நாட்டுக்கு  எதிராகவோ இல்லை இன்னொரு தேசத்துக்கு எதிராகவோ போர் செய்யும்போது என்னென்ன தந்திரோபாயங்களை பாவித்து எதிரிகளை வீழ்த்தலாம் என்பதோடு மட்டும் நின்றுவிடுவதோடு  பொதுமக்கள் அப்பாவிகளை கணக்கில் எடுக்காத மன்னர்கள், தலைவர்கள் மத்தியில் மக்கள் நலனையும் கருத்தில் கொண்ட நீதி  நேர்மை கருணை  உள்ளம் கொண்ட ஒருவனாக பொன்னியின் செல்வர் தனித்துத்தெரிகிறார்.

இன்னொரு காட்சியில் எதிரிகளின் பிடியில் இருந்த சிம்மகிரி கோட்டைக்கு மாறுவேடத்தில் சென்று அங்குள்ள சித்திரங்களை ரசித்ததாக  நாவலில் வருவது மன்னனின் அளவுகடந்த கலை ஈடுபாட்டையே காட்டுகிறது.கலைகளை ரசிக்காத மனங்கள் தான் ஏது சில விதி  விலக்குகளைத்தவிர.இந்தக்காட்சி வெறும் கற்பனையாக இருந்தால் கூட இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலேயே புகழ்பெற்ற சிற்பவேலைப்பாடுகள்  கொண்ட தஞ்சைப்பெரியகோயில் நிர்மாணிக்க காரணமாக இருந்த மன்னன் கலாரசனை இல்லாதவனாக இருந்திருப்பானா என்ன.இயல்பிலேயே கலைகளை  இரசிக்கும் இயல்பு கொஞ்சம் அதிகமென்பதாலோ என்னவோ அவ்வாறு இரசனை உள்ளம் கொண்டவர்களிலும் பிரியம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்..:)

தந்தையார் மக்கள் என அனைவரினதும் ஏகோபித்த ஆதரவு இருந்தும் வயதில் மூத்த தன் சிறிய தந்தைக்கு முடிசூட்டுவதே முறை என்று தன்னுடைய  சிம்மாசனத்தையே தியாகம் செய்ய தயாராக இருந்த அந்த மன்னனுக்கு நிகராக யாரை ஒப்பிடலாம் சொல்லுங்கள்.எல்லோருடைய எதிர்ப்பு இருந்தாலும் அடுத்தவனை கொன்றுபோட்டாவது நானே பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் மனிதர்கள் மத்தியில் பொன்னியின் செல்வனின் பெருந்தன்மையைக்  கோடிட்டுக்காட்டி எங்களையும் மயக்கிவிட்டார் கல்கி.வெறுமனே தியாகம் செய்ய தயாராக இருந்தது  மட்டுமல்ல சொல்லியதுபோலவே அவரின் சிறிய  தந்தையின் ஆட்சிக்காலத்தின் பின்னரே அருண்மொழிவர்மன் முடிசூட்டியதாக சரித்திரம் சொல்கிறது.


இவை மட்டுமல்ல சிறந்த ஒரு பக்திமானாகவும் கல்கி பொன்னியின் செல்வரை காட்டியிருக்கிறார்.தஞ்சைப்பெரியகோவிலே அதற்கு மிகப்பெரிய  வரலாற்றுச்சான்று. இயல்பாகவே கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவள் என்பதால்  இராஜராஜ சோழன் சிறந்த பக்திமானாக கூட விளங்கியிருக்கிறான் என்பது அந்த  பாத்திரத்தின் மேல் எனக்கிருந்த காதலை அதிகரிக்கச்செய்வதாகவே இருக்கிறது.சிவபக்தனாக இருந்தால்கூட  ஏனைய மதத்தவர்களையும் குறிப்பாக பௌத்த மதத்தை பெரிதும் ஆதரித்ததாக கல்கி சொல்லிச்செல்கிறார்.

ஒரு இடத்தில் பொன்னியின் செல்வனை பற்றிக்குறிப்பிடும்போது அவரைப்பற்றி எதிர்க்கருத்து உள்ளவர்கள் கூட அவர் முகத்தை பார்க்கும்போது  எதிர்க்கும் தைரியத்தை இழந்துவிடுவதாகச்சொல்கின்ற கல்கியின் வர்ணனை எனக்குப்பிடித்த ஒன்று. இங்கே நான் தவறவிட்ட சில விடயங்கள் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.ஞாபகத்தில் வந்த விடயங்களை மட்டும் பதிவில் உள்ள்டக்கியிருக்கிறேன்.


இத்தனை அழகு,ஆற்றல் குணாதிசயங்கள் நிரம்பிய பொன்னியின் செல்வர் என் மனதை கவர்ந்ததில் அதிசயம் ஏதும் இருக்கிறதா சொல்லுங்கள்..இந்த நாவலை வாசிக்கும்போதெல்லாம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச்சென்று வாழ்ந்துபார்க்கத்தோன்றும்.அந்த மன்னனின் காலத்தில் நாட்டின் அடிமட்ட குடிமகனாகவோ குடிமகளாகவோ தன்னிலும் பிறந்திருந்திருக்க மாட்டேனோ என்ற ஆதங்கம் எனக்குள் எழாமல் இல்லை.


ஏற்கனவே இராஜராஜ மன்னனின் சரித்திரத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து படமாக எடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.இப்போது இயக்குனர் மணிரத்னம் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருப்பதாக எங்கேயோ வாசித்த ஞாபகம்.இருந்தாலும் பொன்னியின் செல்வன் நாவலின் இரசிகை என்ற அடிப்படையில் எனது கருத்து நாவலை படமாக எடுப்பதை தவிர்ப்பதே நல்லது என்பது தான் .நாவலை வாசிக்கும்போது எங்கள் இரசனைக்கு ஏற்றவகையில் ஒரு கதாபாத்திரத்தை தோற்றத்தை கற்பனை செய்து வைத்திருப்போம்.அதுவே படத்தில் கொஞ்சம் முரணாகும்போது அதனை முழுமையாக ரசிக்கமுடியாமல் போய்விடும்.அத்தோடு கதையில் வரும் வர்ணனைகள் கொண்ட இட காட்சி அமைப்பை படத்தில் கொண்டுவரமுடியுமா என்றால் சந்தேகம் தான்.
இது என்னுடைய தனிப்பட்ட கருத்து தான்.

Thursday, June 3, 2010

பாடும் நிலாவுக்கு ஒரு வாழ்த்து

மாதங்களில் சிறந்தது மார்கழி என்று சொல்வார்கள்.ஆனால் இந்த வைகாசி மாதத்தில் கூட பல விசேசங்கள் இருக்கிறது போல தெரிகிறது.இப்போது இணையத்தை மேயும்போது தான் அறிந்துகொண்டேன் எங்கள் பாடும் நிலாவின் பிறந்த நாள் ஜுன் 4 இன்று என.இசைஞானியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முற்றாக ஓய்ந்துவிடாத நிலையில் அடுத்த கொண்டாட்டம் இது.இசைஞானியின் இன்னிசைக்கு தன் இனிமையான குரலினாலும் அந்த குரலில் காட்டும் அற்புதமான நடிப்பாலும் மேலும் மெருகூட்டியவர் எங்கள் எஸ்.பி.பி அவர்கள்.



நடிப்புலகின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந் அவர்கள் என்றால் குரல் நடிப்பில் சூப்பர்ஸ்டார் எங்கள் எஸ்.பி.பி தான்.எத்தனை எத்தனை விதமான பாடல்கள் அந்த கின்னஸ் சாதனை மனிதரின் பெருமைகளை இங்கே எடுத்துச்சொல்ல எனக்கு அறிவும் போதாது பதிவில் இடமும் போதாது.


என் விருப்பப்பாடல்கள் பட்டியலில் பெரும்பான்மையானவை இவருடைய பாடல்கள் தான்.அதிலும் தேர்ந்தெடுத்த சில பாடல்களை இந்தப்பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.எங்கள் பாடும் நிலா நூறாண்டு காலம் வாழவேண்டும் என அவரின் அன்பு ரசிகர்கள் சார்பில் என் வாழ்த்துக்களை எங்கள் குரல்வேந்தனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

பாடல்களுக்கு எந்த விளக்கமும் தராவிட்டாலும் கூட எஸ்.பி.பி யின் குரல் பாவங்களே அத்தனை விளக்கங்களையும் தந்துவிடாதா என்ன..

பிரியங்கா படத்திலிருந்து இசைஞானியின் அற்புதமான இசையில் "வனக்குயிலே"



ஏக் துஜே கேலியே படத்திலிருந்து லக்ஸ்மிகாந் பியரிலாலின் இனிய இசையில் "தேரே மேரே"



அவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த பாடல் இது.இசை நிகழ்ச்சியில் அவர் பாடியதை இங்கே கேட்க தேரே மேரே

தென்றலே என்னைதொடு படத்திலிருந்து இசைஞானியின் இனிய இசையில் "கவிதை பாடு குயிலே"



மௌனராகம் படத்திலிருந்து இசைஞானியின் இசையில் "மன்றம் வந்த தென்றலுக்கு"

Monday, May 31, 2010

அன்புள்ள ராஜாவுக்கு

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்னர் தான் ஒரு பதிவை என் வலைப்பக்கத்தில் இட்டேன்.அதனால் அடுத்த பதிவை கொஞ்சம் இளைப்பாறிவிட்டு  எழுதலாமே என்று யோசித்தபோது தான் என் மனக்கண்ணில் வந்து நின்றது ஜுன் 2.ஆம்..அன்று என்ன விசேசம் அப்படி??ஏதாவது நினைவு தினமா?மகளிர் தினம்..குழந்தைகள் தினம்..ஆண்கள் தினம்(;))....இல்லை.எங்கள் இசை ஜாம்பவான்,இசை ராஜா, இசை ஞானி,பண்ணைபுரம் தந்த இசைக்குயில் இளையராஜா இந்த பூமியில் உதித்த தினம்.


ஆரம்ப காலத்தில் திரைப்படங்கள் இசையமைப்பாளர் பற்றிய அறிவு இல்லாத சின்ன வயதிலிருந்தே பாடல்கள் கேட்பதில் பாடுவதில் எனக்கு தனிப்பிரியம் இருந்தது.அதிலேயும் ஒரு குறிப்பிட்ட சில பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒரு சிலிர்ப்பு எனக்குள் இருக்கும். காலப்போக்கில் தான் புரிந்துகொண்டேன் அந்தப்பாடல்கள் எல்லாமே இசைஞானியுடையது என்று.மனது பாரமாக இருக்கும் சில நேரங்களில் ஆயிரம் சொந்தங்கள் அருகில் இருந்து தரமுடியாத ஆறுதலை இசைஞானியின் சில பாடல்கள் தந்திருக்கின்றன.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு மேடை இசை நிகழ்ச்சியின் ஒளிப்பதிவில் இளையராஜா பேசும்போது "உங்கள் இசைக்காக உயிரை கூட தர தயாராக இருக்கிறோம் என்று சில ரசிகர்கள் தொடர்புகொண்டு சொன்னதாக அதில் குறிப்பிட்டிருந்தார்."..ஆம்..அவ்வாறு உங்களை தொடர்புகொண்டு சொன்னவர்கள் ஒரு சிலர் மட்டுமே.ஆனால் உலகமெங்குமே இன்னும் என்னைப்போல எத்தனையோ ரசிகர்கள் உங்கள் இசையை உயிராக நேசிப்பவர்கள் இருக்கிறார்கள்.ஒரே ஒரு மனவருத்தம் இருக்கிறது.முன்பு போல் தமிழ் திரையுலகில் உங்கள் பாடல்களை அதிகம் காணமுடியவில்லை.இயக்குனர்கள் உங்கள் இசையை பயன்படுத்த முன்வரவில்லை என்றால் இழப்பு உங்களுக்கல்ல..தமிழ் திரையுலகுக்கும் என்போன்ற ரசிகர்களுக்கும் தான்...


என்றும் வாழும் இசை முத்துக்கள் தந்த எங்கள் ராகதேவன் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு  இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் எங்கள் இசை மன்னனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

எங்கள் இசைஞானிக்கு என்னுடைய கிறுக்கல் ஒன்றை அன்புப்பரிசாக வழங்கலாம் என்று நினைக்கிறேன்.

அதிகாலை நேரமென்ன
அந்திசாயும் நேரமென்ன
எந்தன் உள்ளம் நாடும்
இன்னிசை நாதமது
உந்தன் இசை மெட்டன்றி
வேறேதும் உண்டோ

துள்ளிக்குதிக்கும் நேரங்களில்
துள்ளி வருவதும் உந்தன் இசை தான்
கண்கள் பனிக்கும் நேரங்களில்
உயிரோடு உருகுவதும்
உந்தன் இசை அன்றோ

அறியாத வயதில் கேட்ட
அன்னையின் தாலாட்டு
எந்தன் நினைவில் இல்லை
"ஓ..பாப்பா... லாலி"-என உருகும்
உந்தன் மெல்லிசை தாலாட்டில்
உறங்கிய நாட்கள் எத்தனையோ
 
ஆயிரம் மன்னர் வந்தாலும்-சோழகுல
ஆதவன் ராஜராஜன் அன்றோ-அது போல்
ஆயிரம் பேர் வந்தாலும்-எம்
இசை நாதன்-தமிழ்
இசை ராஜராஜன்-எங்கள்
இளையராஜனன்றோ...

சொல்லிக்கொண்டே போனால்
சொற்கடல் கூட
வற்றிவிடக்கூடும் தமிழில்
உன் பெருமை சொல்ல
ஒரு கோடி வார்த்தைகளை
ஒன்றாக திரட்டினாலும்
என்னால் முடியாதையா

தென்னவனே
இசை மன்னவனே-தமிழ்
இசை வல்லவனே-இசை வெள்ளமதில்
உயிர் கொன்றவனே-எம்
இராக தேவனே
நீ வாழ்க
உன் இசை வாழ்க
ஆண்டாண்டு காலம்
அழியாப்புகழ் கொண்டு வாழ்க

Thursday, May 27, 2010

புலம்பெயர் உறவுகளும் புதைந்திருக்கும் மன உணர்வுகளும்

எம் புலம்பெயர் உறவுகளின் மன உணர்வுகளை ஏக்கங்களை வெளிப்படுத்தும் பாடல் தொகுப்பாக எங்கள் மூத்த பதிவர் கானா பிரபா அண்ணாவின்
சீமையிங்கு சொர்க்கமென்று யோசிக்காதைங்கோ பதிவு அமைந்திருந்தது.பாடல்களாக அந்த உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்.அந்தப்பதிவை வாசிக்கும்போது நகைச்சுவை உணர்வோடு அதை வாசிக்க முயற்சித்தபோதும் ஏதோ ஒரு பாரம் நெஞ்சை நிறைத்தது உண்மைதான்.

இங்கு நான் அறிந்த தெரிந்த விடயங்களை சம்பவங்களை அடிப்படையாக வைத்து  இந்தப்பதிவை எழுதுகிறேன்.இன்னொரு விடயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.இந்தப்பதிவுகள் எல்லாமே என் உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக மட்டுமே.எந்த அங்கீகாரத்தையும் எதிர்பார்த்து நான் எழுதவில்லை.அங்கீகாரம் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்.அதற்காக ஹிட் பதிவை கொடுக்கவேண்டுமென நினைத்து எந்த பதிவையும் நான் இதுவரைக்கும் எழுதவில்லை.இனியும் எழுதப்போவதுமில்லை.எனது கடந்த ஒரு பதிவுக்கு
மிகவும் கீழ்த்தரமான முறையில் முகப்புத்தகத்தில் விமர்சனம் எழுதியிருந்தார்கள்.அதற்கு எனது நெருங்கிய நண்பர் ஒருவரும் ஆமோதித்து கருத்து கூறியிருந்தார் என்பது மனவருத்தத்துக்குரிய விடயம் தான்.அவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க,நாங்கள் விடயத்துக்கு வருவோம்.
வெளி நாடு என்றதுமே எங்கள் எல்லோருடைய நினைப்பும் அது என்னவோ செல்வம் கொழிக்கும் சொர்க்க பூமி என்று தான்.ஆனால் உண்மை அதுவல்ல என்பது எம் உறவுகளின் கருத்துக்களை கேட்கும்போது தெரிகிறது.என்ன தான்  வசதியாக இருந்தாலும் சொந்த பந்தங்களை பிரிந்து தனிமையே துணையென இருக்கும் அந்த வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு சொர்க்கமாக இல்லை என்பதே எனது கருத்து.

எம்மவர்களிடம் தாராளமாக புழங்குவது, தாராளமாக புழங்கும் வார்த்தையும் கூட இது "வெளிநாட்டு காசு".எம்மவர்கள் சொல்வார்கள் "அவன் இலண்டனில் மாதம் 5 லட்சம் உழைக்கிறான்.அவர்களுக்கென்ன.."என்று.
இந்த வெளி நாட்டு பணம் எல்லாம் பெரிய தொகையாக எம்மை வந்து சேர்வது நாணயமாற்று வீதத்தால் மட்டுமே.அங்கே அவர்களின் அந்த வருமானம் சிலவேளைகளில் அவர்களின் செலவுக்கே போதுமானதாக இருக்காது.இந்த அடிப்படையை எம்மில் பெரும்பாலோனோர் குறிப்பாக மூத்த தலைமுறையினர் புரிந்துகொள்வது குறைவு என்பதே எனது கருத்து.அவர்களுக்கு புரியும்படியாக எடுத்துச்சொல்லாமல் விடுவது எம் தவறும் கூடத்தான்.அதை விட வருத்தத்துக்குரியது எம்மில் பெரும்பாலானவர்கள் அவர்களை பணம் கொட்டும் இயந்திரமாகப்பார்ப்பதுதான்.எனக்கு தெரிந்த அக்கா ஒருவர் திருமணம் முடித்து வெளி நாடு ஒன்றுக்கு சென்றார்.குடும்பத்தில் மூத்த பிள்ளை என்பதால் தந்தை இல்லாத குடும்பத்தை பார்க்கும் பொறுப்பு மட்டுமல்ல தனது தங்கைகளை கரைசேர்க்கவேண்டிய பொறுப்பும் அந்த பெண்ணுக்குக்குத்தான்.தனது படிப்பையும் அங்கே தொடர்ந்து கொண்டு பகுதி நேரமாக வேலை செய்து என்று கடினமான வாழ்க்கையை தான் அந்தப்பெண் வாழ்கிறார்.இத்தனைக்கும் அவரின் சகோதரிகள் இங்கே சந்தையில் புதிதாக வரும் ஆடம்பர உடைகளை உடுத்துவதும் அழகு பார்ப்பதும் என்று அவர்களின் தரமே வேறு.இது குறிப்பிட்ட ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் கூட பெரும்பாலான வீடுகளில் நடப்பதுதான்.அங்கே அவர்கள் இரவு பகலாக உழைத்து பணத்தை அனுப்ப இங்கே உள்ளவர்கள் அதை எவ்வாறு செல்வழிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

சில நாடுகளை எடுத்துக்கொண்டால் படித்த படிப்புக்கு அங்கே வேலை எடுப்பது கடினம் என்பதால் மூளைக்கு வேலையெதுவும் அற்ற படிப்புக்கு சம்பந்தமே இல்லாத தொழிலை செய்யவேண்டிய நிர்ப்பந்தம் எம் இளைஞர்களுக்கு.என்னதான் வெளியே சொல்லிக்கொள்ளாவிட்டாலும் கூட அவர்களின் உள்மனதில் ஏதோ ஒரு வகையில் உளவியல் தாக்கம் இருக்கத்தான் செய்யும்.
 

கடந்த வருட பொருளாதார நெருக்கடி நேரம்.அதிக சம்பளம் வாங்கும் மென்பொருள் துறையில் உள்ளவர்களே வேலை இழப்பு,சம்பள பிரச்சினை என்று நிதி நெருக்கடியில் திண்டாடிய காலம் அது.மென்பொருள் மட்டுமல்ல ஏனைய துறைகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் வேலையை இழந்த சோதனைக்குரிய காலம் அது.இங்கே எனக்கு தெரிந்த ஆன்ரி ஒருவரின் மகன் வெளி நாட்டில் வேலை செய்கிறார்.அந்த நேரத்தில் அவர்களுக்கும் அந்த தாக்கம் இருந்திருக்கும்போலும்.ஓரிரு மாதங்களாக வீட்டிற்கு பணம் அனுப்பவில்லையாம்.அதை மிகுந்த மனவருத்தத்தோடு அந்த ஆன்ரி என்னிடம் தெரிவித்தார்.அவரின் நினைப்பு என்னவென்றால் மகன் ஊதாரித்தனமாக பணத்தை செலவுசெய்கிறாரோ என்று.இங்கே இருக்கின்ற பல தாய் தந்தையருக்கு இப்படியான நிலைமை சிலவேளைகளில் புரிவதில்லை.அவர்களுக்கு சொல்லிப்புரிய வைக்கவேண்டியது எம் கடமை இல்லையா?அதை விடுத்து அவர்களை நொந்துகொள்வதில் ஆகப்போவது எதுவுமில்லை.

என்னதான் பணம் வசதி வாய்ப்புக்கள் இருந்தாலும் அன்பு தான் மனித வாழ்க்கைக்கு அடிப்படை..படிப்புக்காக ஊரைவிட்டு வந்து வாழ்ந்த நகர வாழ்க்கையில் தனிமையின் வலியை உணர்ந்த நாட்கள் எத்தனையோ.அவ்வாறு இருக்க நாடு விட்டு நாடு சென்று வசிக்கும் எம் உறவுகளின் மன நிலையை என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது.நண்பர்கள் சொந்தங்கள் என்று பல பேர் இருந்தாலும் எம்மில அக்கறைகொண்டு எம்மை கவனிக்க தங்களுக்கென்று ஒரு சொந்தத்தை எதிர்பார்ப்பது மனித இயல்பு.அம்மா,அப்பா,சகோதரங்கள்,மனைவி,குழந்தைகள் என்று குடும்பத்தோடு இருப்பவர்களுக்கு இந்த மனத்தாக்கத்தின் அளவு குறைவாக தான் இருக்கும்.




ஆகவே வெளி நாட்டில் உள்ள எம் உறவுகளை பணம் காய்ச்சி மரங்களாக பார்க்காமல் உணர்வுகள் உள்ள மனிதர்களாக பார்ப்போம்.

Saturday, May 15, 2010

மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?

எனது முந்தைய பதிவு ஒன்றில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பது பற்றி எழுதியிருந்தேன்.இந்தப்பதிவில் மன அழுத்தத்தை குறைப்பதற்கான
வழிமுறைகளை பற்றி குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.இந்த மன அழுத்தம் என்பது உறவுகளினால் வரலாம்..அலுவலகத்தில் கூட வேலை
செய்பவர்களால் ஏற்படலாம்..எதுவாயிருந்தாலும் மன அழுத்தம் குறிப்பிட்ட அளவைத்தாண்டும்போது அதுவே பல நோய்களுக்கு காரணமாவது மட்டுமல்ல மனிதனை மன நோயாளியாகவே மாற்றிவிடக்கூடும்.
ஒரு நாள் என் அலுவலக நண்பி ஒருத்தி சொன்னார் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் தினமும் குத்துச்சண்டை பயிற்சி செய்வது போல் செய்வாராம்..ஏனென்று கேட்டால் மன அழுத்தத்தை குறைப்பதற்காக என்று...அதனை செய்து பார்த்ததில்லை என்றாலும் கூட அதன் பயனை என்னால் உணரக்கூடியதாக இருக்கிறது...ஆண்களுக்கு இது மிகவும் பொருத்தமான வழி முறை என்பது எனது கருத்து..

அதனை விட மன அழுத்தத்தை குறைப்பதற்கு நான் எப்போதும் கடைப்பிடிக்கும் வழிகளில் ஒன்று வாய் விட்டு அழுவது தான்.அழுபவன் கோழை என்று நீங்கள் சொல்லக்கூடும்.மற்றவர்களுக்கு முன்னால் அழவேண்டும் என்ற அவசியம் இல்லை.மற்றவர்களுக்கு முன்னால் அதனை செய்யும்போது அவர்களுக்கு சங்கடமாக கஸ்டமாக இருக்கக்கூடும்.அதனால் தனிமையில் அதற்கேற்ற நேரம் காலம் பார்த்து நடைமுறைப்படுத்துவது நன்மைபயக்கும் என்று நினைக்கிறேன்....:).நான் இங்கே சொல்லும் கருத்தை மெய்ப்பிப்பது போல் ஒரு காட்சி "மொழி" படத்தில் இடம்பெற்றிருந்தது அந்த படத்தை பார்த்தவர்களுக்கு தெரியும்.
இறுதியாக நான் குறிப்பிடும் இந்த வழிமுறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.பொதுவாக குத்துப்பாடல்கள் கேட்கும்போது தான் ஆடத்தோன்றும் என்று எல்லோரும் சொல்வார்கள்.நான் அதில் விதிவிலக்கோ என்னவோ தெரியவில்லை..மனசுக்கு இதமான சில
மெல்லிசைப்பாடல்களைக்கேட்கும்போது கூட ஆடவேண்டும் போல் தோன்றும்.இயல்பாக எந்த நோக்கமும் இன்றி தான் அவ்வாறு ஆட ஆரம்பித்தேன்..ஆனால் உண்மையிலேயே கவலையை நீக்குவதில் மன அழுத்தத்தை குறைப்பதில் இசைக்கலையைப்போல் நடனக்கலைக்கும் கூட பெரிய பங்கு இருக்கிறது...மன அழுத்தம் குறைவது மட்டுமல்ல உடற்பயிற்சி நிலையம் செல்லாமலே உடலுக்கு சிறந்த பயிற்சியாகவும் இது அமையும்..நீங்களும் முயற்சி செய்துபாருங்கள்.அதை விட முக்கியமான அனுகூலம் பெண் பார்க்க வருபவர்கள் பெண்ணுக்கு ஆடத்தெரியுமா என்று கேட்டால் முழிக்க வேண்டிய அவசியமில்லை..;)(பெண்களுக்கு கூட பொருத்தமாக இருக்கும்:))